யாழ். போதனா வைத்தியசாலை தீவிரசிகிச்சைப் பிரிவு படுக்கைகளை அதிகரிக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை
மக்கள் இப்படிச் சுகாதாரக் கட்டுப்பாடுகளை உதாசீனம் செய்வார்களானால் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த எம்மால் முடியாது போய்விடும். அதைத் தடுப்பதற்கு நாம், யாழ்ப்பாண மாவட்டத்தில் மிகவும் கடுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுக்கவேண்டி நேரிடும்
வடமாகாண பொதுச் சுகாதார பணிப்பாளர் நாயகம் டாக்டர் ஏ. கேதீஸ்வரன்
சமீபத்தில் யாழ்ப்பாணத்தில் அதிகரித்துவரும் கோவிட்-19 தொற்றுக் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையின் தீவிரசிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை விரைவாக அதிகரிக்கும் சாத்தியமுள்ளது. இதன் காரணமாக தீவிர் சிகிச்சைப் பிரிவிற்கு மேலும் பல படுக்கைகளை வழங்குமாறு, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராய்ச்சியிடம் மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த அவசர நிலைமை குறித்து அமைச்சர் தேவானந்தா வைத்தியசாலை நிர்வாகத்துடன் பேசியதைத் தொடர்ந்து இவ் வேண்டுகோளை விடுத்துள்ளார்.
“குறைந்தது 25 நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்கவல்ல வசதிகளைக் கொண்ட தீவிரசிகிச்சைப் பிரிவும், அதற்குத் தேவையான உயிர்வாயு வை(ஒக்சிசன்) வழங்குவதற்கான உபகரணங்களும் யாழ். போதனா வைத்தியசாலையில் உடனடியாக நிர்மாணிக்கப்பட வேண்டும். வடமாகாணம் முழுவதிலுமிருந்து முற்றிய நோய்த் தொற்றாளர்கள் யாழ்.போதனா வைத்தியசாலைக்கே கொண்டுவரப்படுகிறார்கள். அதே வேளை, மாகாணத்திலுள்ள இதர வைத்தியசாலைகளையும் அபிவிருத்தி செய்வது நல்லது” என அமைச்சர் தெரிவித்தார்.
இதே வேளை, வட மாகாண பொது சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் ஏ.கேதீஸ்வரன், தற்போதுள்ள தொற்று நிலைமை குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில், மதத் தலைவர்கள் சுகாதாரத் துறையினரோடு ஒத்துழைக்காது போனால் மிகவும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டி நேரிடும் எனவும், தவறும் பட்சத்தில் யாழ்ப்பாணம் முழுமையான அளவில் நோய்த்தொற்றுக்கு முகம்கொடுக்கவேண்டிய மிகவும் ஆபத்தான நிலையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது எனவும் எச்சரித்துள்ளார்.
கடந்த சில வாரங்களில், டாக்டர் கேதீஸ்வரன் யாழ்ப்பாணத்திலுள்ள பல் மதத்தலைவர்களையும் அழைத்துத் தன் அலுவலகத்தில் உரையாடியிருந்தார். ஆனாலும் சமீபத்தில் இந்துக் கோவிலில் நடைபெற்ற திருவிழாவொன்றின்போது எந்தவித கோவிட் கட்டுப்பாடுகளுமின்றி பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டிருந்தார்கள்.
“மக்கள் இப்படிச் சுகாதாரக் கட்டுப்பாடுகளை உதாசீனம் செய்வார்களானால் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த எம்மால் முடியாது போய்விடும். அதைத் தடுப்பதற்கு நாம், யாழ்ப்பாண மாவட்டத்தில் மிகவும் கடுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுக்கவேண்டி நேரிடும்” என டாக்டர் கேதீஸ்வரன் எச்சரித்துள்ளார்.
Related posts:
- யாழ்ப்பாணத்தில் தீவிரமாகப் பரவுகிறது கோவிட்-19 – பாடசாலைகள் மூடப்பட்டன!
- இலங்கை | உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் சுகாதாரத்துறை முற்றாக முடக்கப்படும் ஆபத்துண்டு – மருத்துவர் சங்கம் எச்சரிக்கை!
- ராகம போதனா வைத்தியசாலையில் நிரம்பி வழியும் கோவிட் நோயாளிகள்
- வளரும் கிழக்கு | கல்முனை ஆதார வைத்தியசாலையின் அளப்பரிய சேவை