Health

யாழ். போதனா வைத்தியசாலையில் முதல் தடவையாக சிறுநீரக மாற்று

அமெரிக்க அறுவைச்சிகிச்சை நிபுணர் டாக்டர் தவம் தம்பிப்பிள்ளை சாதனை!

ஜனவரி 18, 2023 அன்று அமெரிக்க அறுவைச்சிகிச்சை நிபுணரும், சர்வதேச அறுவைச்சிகிச்சை மருத்துவர் சங்கத்தின் தலைவரும், புகழ்பெற்ற ஸ்ரான்ஃபோர்ட் பல்கலைக்கழகம், தென் சகோட்டா பல்கலைக்கழகம் ஆகியவற்றில் அறுவை சிகிச்சை மருத்துவத்தில் பேராசிரியராகக் கடமையாற்றி வருபவரும், அனைத்துலக மருத்துவ நல அமைப்பின் உபதலைவருமான டாக்டர் தவம் தம்பிப்பிள்ளை அவர்கள் யாழ். போதனா வைத்தியசாலையின் சிறுநீரகப் பிரிவில் சிறுநீரக மாற்று சிகிச்சை ஒன்றை வெற்றிகரகமாக நிகழ்த்தியுள்ளார்.

உயிருள்ள ஒரு வழங்குனரிடமிருந்து பெறப்பட்டு நோயாளி ஒருவருக்கு சிறுநீரகம் பொருத்தப்படுவது யாழ்.போதனா வைத்தியசாலையில் இதுவே முதல் தடவையாகும்.

யாழ். போதனா வைத்தியசாலையின் சிறுநீரக சிகிச்சைப்பிரிவு (Nephrology), அறுவைச்சிகிச்சைப் பிரிவு (Surgical Unit), உணர்விழப்பு பிரிவு (Anesthesia) ஆகியவற்றின் உதவியுடன் இவ்வறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்ப்ட்டது. இதற்கான சட்ட அனுமதி மற்றும் உபகரணத் தேவைகளை வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் சத்தியமூர்த்தி ஒழுங்கு செய்திருந்தார்.

சிறூநீரக வழங்குனரும் (donor) நோயாளியும் ( recipient) நலமாக உள்ளனர் எனவும் வடமாகாணத்தில் சிறுநீரக தானம் வழங்குபவர்களின் பெருமனங்களின் காரணமாக இச் சிகிச்சைப் பிரிவும் பராமரிப்பு பிரிவும் மிகவும் சிறப்பாக இயங்குவதற்கான காலம் கனிந்துவிட்டதென்றும் யாழ். போதனா வைத்தியசாலை நிர்வாகம், அனைத்துலக் மருத்துவ நல அமைப்பு ஆகியன மகிழ்ச்சி தெரிவித்திருக்கின்றன.

டாக்டர் தவம் தம்பிப்பிபிள்ளை, 2004 ஆழிப்ப்பேரலையின்போது அவசர மருத்துவ உதவிகளை வழங்குவதற்கென அமெரிக்க தமிழ் மருத்துவர்களால் ஆரம்பிக்கப்பட்ட அனைத்துலக மருத்துவ நல அமைப்பின் (IMHO) ஆரம்பகர்த்தாக்களில் ஒருவர் எனபது குறிப்பிடத் தக்கது.