யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகம் மூடப்பட்டு, ஆகஸ்ட் 1, வவுனியா பல்கலைக் கழகமாக மாற்றப்படுகிறது!

தற்போது இயங்கி வரும் யாழ். பலகலைக் கழகத்தின் வவுனியா வளாகம் இவ்வருடம் ஜூலை 31 முதல் நிறுத்தப்பட்டு, வவினியா பல்கலைக் கழகமாகப் பெயர் மாற்றப்படுகிறது. இதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல், கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இனால், பல்கலைக்கழக அதிகாரங்கள் சட்டத்தின் கீழ், வெளியிடப்பட்டுள்ளது.

வணிகக் கல்வி, பிரயோக விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பக் கல்வி ஆகிய துறைகளில் இப் பல்கலைக் கழகம் கற்கை நெறிகளை வழங்கவுள்ளது. வணிகக் கல்வி பீடத்தில், நிதியும் கணக்கீடும், ஆங்கிலக் கல்வி, திட்ட முகாமைத்துவம், மனித வள முகாமைத்துவம், சந்தைப்படுத்தல் முகாமைத்துவம், வணிகப் பொருளாதாரம், தொழில் முனைவு முகாமைத்துவம் ஆகிய துறைகளில் போதனைகள் வழங்கப்படும்.

அதே வேளை, பிரயோக விஞ்ஞான பீடத்தில், பெளதீகவியல், உயிரியல் ஆகிய துறைகளிலும், தொழில் நுட்பக் கல்வி பீடத்தில், தகவற் தொழில்நுட்பம் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளிலும் போதனைகள் வழங்கப்படவுள்ளன என வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.