யாழ் பல்கலைக்கழகத்திற்கு 6 மாடி நவீன கட்டிடம் | லைக்கா/ஞானம் அறக்கட்டளை அன்பளிப்பு

யாழ் பல்கலைக் கழகத்திற்கு புதிய 6500 சதுர மீட்டர் பரப்புள்ள 6 மாடிக் கட்டிடமொன்றை இங்கிலாந்திலுள்ள லைக்கா நிறுவனத்தினால் சிறீலங்காவில் நிர்வகிக்கப்படும் ஞானம் அறக்கட்டளை கட்டிக் கொடுக்க இணங்கியுள்ளது. இதற்கான அனுமதியை சிறீலங்காவின் ஜனாதிபதியும் பிரதமரும் இணைந்து வழங்கியுள்ளார்கள். ரூ. 740 மில்லியன் செலவிலாலான இத் திட்டத்தை நிர்வகிப்பதற்கான ஒப்பந்தம் சமீபத்தில் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சு மற்றும் லைக்கா குழுமத்திற்குமிடையில் கைச்சாத்திடப்பட்டது.

யாழ் பல்கலைக்கழகம் – மருத்துவ பீடம்

இங்கிலாந்தைத் தளமாகக் கொண்ட லைக்காமொபைல் நிறுவனத்தின் அதிபர், கோடீஸ்வரர் சுபாஸ்கரன் அல்லிராஜாவும் அவரது தாயார் ஞானாம்பிகை அல்லிராஜா மற்றும் பிரேமா சுபாஸ்கரனும் இணைந்து டிசம்பர் 2010 ஆம் ஆண்டு ஞானம் அறக்கட்டளையை ஆரம்பித்திருந்தார்கள். ‘மக்களுக்குத் தொழில்களைக் கற்றுக்கொடுக்க வேண்டும், அவர்களே தமது எதிர்காலத்தை நடத்திக்கொள்வார்கள்’ என்ற தாரக மந்திரத்தை அடிப்படையாகக் கொண்டு இவ்வறக்கட்டளை இயங்குகிறது.

இத்திட்டத்தின் பிரகாரம் அமையப்படவிருக்கும் கட்டிடம் யாழ் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் விரிவுரை மண்டபங்கள், ஆய்வுகூடங்கள், மாணவர் தங்குமிடம் போன்ற பல அங்கங்கங்களைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 1978ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட போது 65 மாணவர்களைக் கொண்டிருந்த மருத்துவ பீடம் இப்போது 937 மாணவர்களுக்குக் கற்றுத் தரும் நிலையமாக வளர்ந்திருக்கிறது. 

இத் திட்டத்திற்கான முன்மொழிவை அமைச்சர் ராவுப் ஹக்கீம் செய்திருந்தார்.