• Post category:SRILANKA
  • Post published:January 10, 2021
Spread the love

வடக்கு-தெற்கு ஒற்றுமைக்குக் குந்தகம் விளைவிக்கிறது என்ற காரணத்தினாலேயே, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னத்தை அகற்றுவதற்கு துணைவேந்தர் சிறிசற்குணராஜா நடவடிக்கை எடுத்தார் என பல்கலைக்கழக மானியத் தலைவர் பேரா.சம்பத் அமரதுங்க கூறியிருக்கிறார்.

முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட மக்களை நினைவுகூரும் முகமாக, பல்கலைக்கழக மாணவர் சங்கத்தினால் இந் நினைவுச் சின்னம் நிறுவப்பட்டிருந்தது.

“யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேரா.சிறி சர்குணராஜா இலங்கையில் ஒரு புகழ்பெற்ற விஞ்ஞானி மட்டுமல்ல மிகத் திறமையான நிர்வாகியுமாவார். சமீப காலங்களில் நான் கண்ட சிறந்த துணைவேந்தர்களில் அவர் ஒருவர். இந் நினைவுச் சின்னம் இன்றைக்கோ அல்லது நாளைக்கோ பொருத்தமற்ற ஒன்று என்பதனாலேயே அவர் அதை அகற்ற முடிவெடுத்தார்,

“இன்று அப் பல்கலைக்கழகத்தில் கல்விகற்றுக்கொண்டிருக்கும் பிள்ளைகளுக்கு போர் முடிவுறும்போது 9. 10, 11 வயதுகளாக இருந்திருக்கலாம். இன, மத, மொழி வேறுபாடுகளைக் கடந்து அவர்கள் எல்லோரும் எங்கள் பிள்ளைகள். 1,500 சிங்கள மானவர்கள் அங்கு கல்வி கற்கிறார்கள். அதே போல, வடக்கு கிழக்கிலிருந்து 600-700 தமிழ் மாணவர்கள் தெற்கிலுள்ள பல்கலைக்கழகங்களில் கல்வி பயில்கிறார்கள். இவர்கள் எல்லோரும் ஒரே விடுதிகளில் தங்குகிறார்கள். ஒரே விரிவுரை கூடங்களில் கல்வி கற்கிறார்கள். விளையாட்டுகள் மற்றும் இதர பொது நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். மிகவும் பொறுப்பாக நடந்துகொள்ளும் இம் மாணவரிடையே பிரச்சினைகள் எதுவுமில்லை என்பது அதிர்ஷ்டகரமான ஒரு விடயம். கடந்த காலங்களில் ஏற்பட்ட அனுபவங்கள் எதிர்காலத்தில் இருக்கமாட்டாது என்பதையே இது காட்டுகிறது” என அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

நினைவுச் சின்னத்தை அகற்றுவது தொடர்பாகத் துணைவேந்தர் சிறிசற்குணராஜா ‘தி சண்டே எக்ஸ்பிரெஸ்’ பத்திரிகைக்கு அளித்த பேட்டியின்போது ” வளாகத்தில் ஏற்கெனவே ஒரு நினைவுச் சின்னம் இருக்கிறது. தற்போது அகற்றப்பட்ட சின்னம், முள்ளிவாய்க்காலின் 10 வது நிறைவை நினைவுகூருவதற்காக, நிர்வாகத்திடம் எந்தவித அனுமதியையும் பெறாமல் நிறுவப்பட்டது. அதை அகற்றிவிடும்படி அரசு ஆணையிட்டிருந்தது ” எனத் தெரிவித்துள்ளார்.



யாழ். பல்கலைக்கழக விடயங்கள் மிகவும் வருத்தம் தருபவை – பிரித்தானிய அமைச்சர்

யாழ். பல்கலைக்கழக நினைவுச் சின்ன அகற்றல் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த வெளிவிவகாரம் மற்றும் பொதுநலவாய அபிவிருத்திகளுக்கான ராஜாங்க அமைச்சர் விம்பிள்டன் பிரபு அஹமெட் தெரிவித்துள்ளார்.

“இலங்கைப் பிரச்சினைகள் தொடர்பான வேதனை தரும் நிகழ்வுகளினால் பாதிக்கப்பட்ட அனைவரும் அவற்றை நினைவுகூருவதன் மூலம் தமது வடுக்களை ஆற்றி, நல்லிணக்கத்துக்கு ஆதரவைத் தர முடியும்” என பிரபு அஹமெட் தனது ருவீட் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Print Friendly, PDF & Email
Related:  முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இடித்தழிப்பு, யாழ்ப்பாணத்தில் பதட்டம்!