யாழ். நாவலர் கலாச்சார மண்டபத்தை மத்திய அரசிடம் கையளிக்கும்படி ஆளுனர் உத்தரவு!
இதுவரை காலமும் யாழ். மாநகரசபையின் நிர்வாகத்தில் இருந்துவந்த நாவலர் கலாச்சார மண்டபத்தை மத்திய அரசிடம் கையளிக்கும்படி வடமாகாண ஆளுனர் ஜீவன் தியாகராஜா ஆணையிட்டுள்ளதாகவும் இது குறித்து மாநகரசபை நிர்வாகம் கடும் அதிருப்தியுற்றிருப்பதாகவும் தெரிகிறது.
இது குறித்து மாநகரசபை உறுப்பினர்கள் நேற்று (28) ஆளுனர் செயலகத்துக்கு முறைப்பாடு ஒன்றைச் செய்துள்ளார்கள். இதுபற்றி ஆளுனர் சிலோன் ருடே பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் ” இம்மண்டபத்தில் யாழ் மாநகரசபை எந்தவொரு நல்ல வேலைகளையும் செய்யவில்லை அப்படிச் செய்வதற்கென எந்தவொரு நல்ல திட்டங்களையும் அது கொண்டிருக்கவுமில்லை. இம் மண்டபத்தை சிறந்த முறையில் நடததவேண்டுமென்பதற்காகவே இம்முடிவு எடுக்கப்பட்டது” எனத் தெரிவித்துள்ளார்.
நாவல கலாச்சார மண்டபம் இந்துமத கலாச்சார விவகார அமைச்சு, புத்த சாசன அமைச்சு மற்றும் யாழ். மாநகரசபை ஆகியவற்றினால் இணைந்து நிர்வகிக்கப்பட்டு வந்தது எனவும் ஆளுனர் குறிப்பிடும் வகையில் அங்கு எவ்வித குறைபாடும் இல்லை எனவும் மாநகரசபை உறுப்பினர் வீ.பார்த்திபன் தெரிவித்துள்ளார். இம்மண்டபத்தில் மாநகரசபையின் கட்டுப்பாட்டில் பொது நூலகம் ஒன்றும் இயங்குகிறது எனவும் இம்மண்டபத்தை அமைச்சு தனது கட்டுப்பாட்டில் முழுமையாக எடுத்துக்கொள்ள நீண்டகாலமாக முயற்சிசெய்து வருகிறது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நடைபெற்ற பல விவாதங்களைத் தொடர்ந்து இந்து மத பீடாதிபதிகள், பக்தர்கள், கல்விமான்கள் ஆகியோரின் சம்மதத்துடன் அப்போதைய நகர முதல்வர் வீ.மணிவண்ணன் , இந்து கலாச்சார விவகாரங்கள் அமைச்சுடன் இணைந்து நிர்வகிப்பதென நவம்பர் 21, 2021 அன்று முடிவெடுக்கப்பட்டிருந்தது. இருப்பினும் எதிர்வரும் ஏப்ரல் 6 ம் திகதி மண்டபத்தைக் காலிசெய்துவிடவேண்டுமென ஆளுனர் தியாகராஜா திடீர் உத்தரவைப் பிறப்பித்துள்ளார். இனிமேல் இந்து கலாச்சார விவகாரங்கள் அமைச்சும், புத்தசாசன அமைச்சும் இணைந்து இம்மண்டபத்தை நிர்வகிக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
முத்தரப்பின் இணை நிர்வாகத்தில் இருந்துவரும் இக்கலாச்சார மண்டபத்தை திடீரென இருதரப்புக்கு மாற்றுவதற்கான அவசியம் எதுவும் ஏற்பட்டுவிடவில்லை என மாநகரசபை தரப்பு கூறுகிறது.
200 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த சைவ அடியார் திரு ஆறுமுக நாவலரது நினைவு மண்டபமாக இருந்துவரும் இம்மண்டபத்தில் இந்து கலாச்சார விவகாரங்கள் அமைச்சுடன் இணைந்து பல சமய, கலாச்சார நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. இருப்பினும் ஆளுனர் ஜீவன் தியாகராஜாவின் இந்த திடீர் உத்தரவு தமிழ் மக்களை மிகவும் வேதனைக்குள்ளாக்கியிருக்கிறது என முறையீட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.