News & AnalysisSri LankaWorld

யாழ்.நகரபிதா மணிவண்ணன் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது!

விடுதலைப் புலிகளின் சீருடையயையொத்த சீருடையோடு மாநகர சபையின் கீழ் இயங்கும் ‘பொலிஸ்’ பிரிவை உருவாக்கினாராம்

யாழ்ப்பாண நகரபிதா விஸ்வலிங்கம் மணிவண்ணன், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்கீழ், இன்று பயங்கரவாத விசாரணைப் பிரிவினால் இன்று (வெள்ளி), அதிகாலை 2:30 மணி போல், கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக வவுனியாவுக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளார் எனவும் பொலிஸ் பேச்சாளரும், உதவி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் பொலிஸ் பிரிவின் சீருடையை ஒத்த சீருடையோடு யாழ் மாநகரசபையின் கீழ் இயங்கும் ஒரு ‘பொலிஸ்’ பிரிவை அவர் உருவாக்கினார் எனவும், விடுதலைப் புலிகளை மீளவும் உருவாக்க அவர் முயற்சிக்கிறார் எனவும் அவர்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் தொடர்ந்தும் அநீதியான வழிகளில் நடத்தப்படுவது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது. தமிழர்களோடு இவ்விடயத்தில் தோளோடு தோள் சேர்ந்து எதிர்ப்பைத் தெரிவிக்குமாறு ஏனையவர்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன்.

நொறோண்டோ நகரபிதா ஜோன் ரோறி, யாழ். நகரபிதா விஸ்வலிங்கம் மணிவண்ணன் கைது தொடர்பாக…

யாழ் நகரத்தில் குப்பை கொட்டுதல், துப்புதல் ஆகியவற்றைச் செய்பவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு அபராதம் விதிப்பதற்காக சமீபத்தில் யாழ் மாநகரசபை ஒரு புதிய கண்காணிப்புப் பிரிவை நியமித்திருந்தது. இவர்களைப் பொதுமக்களிடமிருந்து பிரித்தறியும் வழியில் அவர்களுக்கு சீருடைகளும் வழங்கப்பட்டிருந்தன. ஆனால அச் சீருடைகள் போர்க்காலத்தில் விடுதலைப் புலிகளினால் அணியப்பட்டவை என யாரோ ஒருவர் கொடுத்த முறைப்பாட்டையடுத்து யாழ் பொலிசாரால் அவர் விசாரிக்கப்பட்டிருந்தார்.

இது பற்றி, யாழ்ப்பாணப் பொலிசில் யாரோ செய்த முறைப்பாட்டையடுத்து பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்தனர் எனப் பேச்சாளர் தெரிவித்தார். பயங்கரவாத விசாரணைப் பிரிவும் இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டது எனவும் அவர் தெரிவித்தார். யாழ். மாநகரசபை அதிகாரிகளிடமிருந்து இது தொடர்பாக வாக்குமூலங்கள் பெறப்பட்டதாகவும் தெரியவருகிறது.

விடுதலைப் புலிகள் இலங்கையில் ஒரு தடைசெய்யப்பட்ட இயக்கமாக இருக்கின்ற படியால், அவர்களின் கொடி, இலச்சினை மற்றும் அவர்களோடு அடையாளப்படுத்தப்படும் பொருட்கள், விடயங்களைப் பாவிப்பது குற்றமாகக் கருதப்படுகிறது.

யாழ் பொலிசாரால் புதனிரவு விசாரணைக்கென அழைக்கப்பட்ட மணிவண்ணன் 3 மணித்தியாலங்கள் வரை அங்கு வைத்து விசாரிக்கப்பட்டுள்ளார். புதிதாக அமைக்கப்பட்ட ‘பிரிவின்’ செயற்பாடுகளை நிறுத்துமாறும், அவர்கள் அணிந்த சீருடைகளைப் பொலிசில் கையளிக்கும்படியும் அப்போது அவருக்கு உத்தரவிடப்பட்டது. அதற்கிணங்க மறுநாளே அவர் அக்கட்டளையை நிறவேற்றியிருந்தார். இதைத் தொடர்ந்து சீருடைகளும், மேலஹிக விசாரணைகளும் கொழும்பு பயங்கரவாத விசாரணைப் பிரிவிடம் கையளிக்கப்பட்டிருந்தது.

வியாழன் இரவு 8:00 மணிபோல், மணிவண்ணனும், இன்னுமொரு நகரசபை உறுப்பினர், வரதராஜா பார்த்தீபனும் யாழ். பொலிசாரால் மீண்டும் விசாரிக்கப்பட்டனர். நீண்ட நேர விசாரணையின் பின்னர், மணிவண்ணன் பயங்கரவாத விசாரணைப் பிரிவிடம் கையளிக்கப் பட்டார். பார்த்தீபன் தொடர்ந்தும் விசாரிக்கப்பட்டு அதிகாலை 3:00 மணிபோல் விடுவிக்கப்பட்டார்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினரான மணிவண்ணன் மீதான விசாரணைகள் தொடர்கின்றன என பேச்சாலர் மேலும் தெரிவித்தார்.

 

யாழ். மாநகரசபையின் விசேட சுகாதார கண்காணிப்பு பிரிவினர்

கைது செய்யப்படுவதற்கு முன்னர், வியாழன் மாலை மணிவண்ணன் இது தொடர்பாக ஒரு ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தியிருந்தார். அதன்போது, தனது பிரிவினால் அணியப்பட்ட சீருடைகளே கொழும்பு மாநகரசபையின் கீழியங்கும், இதே போன்றொரு பிரிவினராலும் அணியப்படுகிறது எனவும் விளக்கியிருந்தார். இச்சீருடைகளுக்கு வேறெந்த அர்த்தமும் இல்லையெனவும், சமூகவலைத் தளங்களில் இதுபற்றிப் பரப்பப்படும் பொய்யான தகவல்களை வைத்தே பொலிசார் விசாரணைச் செய்கின்றனர் எனத் தெரிவித்திருந்தார்.

இலங்கை அரசாங்கத்தினால் யாழ்ப்பாண நகரபிதா கைதுசெய்யப்பட்ட விடயம், ஐ.நா.மனித உரிமைகள் சபை தம்மீது மேற்கொள்ளவிருக்கும் விசாரணைகளுக்கான பழிவாங்கல் தான். இது தவறு, தவறு, தவறு. தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுவித்து, ஐ.நா.வுடன் ஒத்துழைத்து தமிழ் இனப்படுகொலைக்கான நீதியை அது வழங்க வேண்டும்.

பிரம்டன் நகரபிதா பற்றிக் பிரவுண்

மணிவண்ணனின் கைது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பயங்கரவாத விசாரணைப் பிரிவு நகரபிதா மணிவண்ண்ணனை எந்தவிதஹ் நிபந்தனைகளுமின்றி, உடனடியாக விடுதலை செய்யவேண்டுமெனவும், இன, அரசியல் விடயங்கள் தொடர்பான இந்த ஆட்சியாளர் தம்மிருப்பு மீது கொண்டுள்ள அச்சங்கள் அவர்களைப் பாசிசத்தை நோக்கி நகர்த்துகிறது எனவும் தனது ருவீட் செய்தி மூளம் தெரிவித்துள்ளார்.

மணிவண்ணனின் கைது உலகமெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. கனடாவில் ரொறோண்டோ நகரபிதா ஜோன் ரோறி, பிரம்டன் நகரபிதா பற்றிக் பிரவுண் ஆகியோர் மணிவண்ணனை உடனே விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். “தமிழ் மக்கள் தொடர்ந்தும் அதர்மமான வழிகளில் நடத்தப்படுவது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது. தமிழர்களோடு இவ்விடயத்தில் தோளோடு தோள் சேர்ந்து எதிர்ப்பைத் தெரிவிக்குமாறு ஏனையவர்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன்” என நகர பிதா ஜோன் ரோறி தெரிவித்துள்ளார்.

“இலங்கை அரசாங்கத்தினால் யாழ்ப்பாண நகரபிதா கைதுசெய்யப்பட்ட விடயம், ஐ.நா.மனித உரிமைகள் சபை தம்மீது மேற்கொள்ளவிருக்கும் விசாரணைகளுக்கான பழிவாங்கல் தான். இது தவறு, தவறு, தவறு. தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுவித்து, ஐ.நா.வுடன் ஒத்துழைத்து தமிழ் இனப்படுகொலைக்கான நீதியை அது வழங்க வேண்டும்” என பிரம்டன் நகரபிதா பற்றிப் பிரவுண் தெரிவித்துள்ளார்.