யாழ். கலாச்சார நடுவம் செப்டம்பர் 2019 இல் திறக்கப்படும்?

இந்திய அரசின் உதவியுடன் பிரதமர் விக்கிரமசிங்கவின் தேசியக் கொள்கைகள்,பொருண்மிய விவகாரங்கள், புனர் வாழ்வுமற்றும் மீளக்குடியேற்றம்,  வட மாகாணம் மற்றும் இளையோர் விவகாரம் அமைச்சின் தலைமத்துவத்தில் யாழ்ப்பாணத்தில் உருவாக்கப்பட்டு வரும் கலாச்சார நடுவம் ஓரளவுக்கு நிறைநிலையை அடைந்து வருகிறது.

யாழ்ப்பாணம் புல்லுக்குளத்தில் பொது நூலகத்தை அடுத்து அமையவிருக்கும் இக் கலாச்சார நடுவம் சிறீலங்காவில் வாழும் அத்தனை சமூகங்களினதும் ஒற்றுமையான இருப்பைப் பிரதிபலிக்கும் தனித்துவமான கட்டிடமாக உருவாக்கப்படுகிறது. அத்தோடு யாழ்ப்பாணத்தின் தொன்மையான வரலாற்றையும் பாரம்பரியத்தையும் புத்துணர்ச்சி பெறச் செய்து, வளம் கூட்டி, ஊக்குவிக்கும் நோக்கத்தையும் அது நிறைவேற்றும் என அமைச்சின் செயலாளர் வி.சிவஞானசோதி கூறினார்.

சிறீலங்கா அரசின் வேண்டுகோளிற்கு அமைய இந்தியப் பிரதம்ர் நரேந்திர மோடி அவர்களால் உபயமாக அளிக்கப்பட்ட இத் திட்டம் 1,800 மில்லியன் ரூபாய் செலவில் உருவாக்கப்படுகிறது. 12 மாடிகளைக் கொண்ட இக் கட்டிடம் அரங்கம் (auditorium), அருங்காட்சியகம் (museum), பொருட்காட்சி மண்டபம் (display gallery), மிதக்கும் மேடை (floating stage) ஆகியவற்றைக் கொண்ட வட மாகாணத்திலேயே பிகப் பெரிய கலாச்சார மண்டபமாக இருக்கும்.



தியேட்டர் வடிவில் அமையவிருக்கும் அரங்கம் 600 பேரைக் கொள்ளக்கூடியதாகவும், திரைக்காட்சி (projection) மற்றும் பல்லூடக (multimedia) வசதிகள், ஆய்வுகளை மேற்கொள்ளவல்ல இணைய உலாவி வசதிகள், வாய்ப்பாட்டு, இசை, நடனம், மொழி ஆகியனவற்றைக் கற்றுத் தரும் கலைக்கூடங்கள், மொழி ஆய்வுக்கூடம் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.

இந்த வருடம் செப்டம்பர் மாதம் இக் கட்டிடம் நிறை நிலைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.