மாயமான்

யாழ். இந்திக் கல்லூரி

மாயமான்

யாழ். இந்துக்கல்லூரியில் இந்தி மொழியைக் கற்பிப்பதற்கான திட்டம் முன்னெடுக்கபப்டுவது தொடர்பாகப் பல வாத விவாதங்கள் ஆங்காங்கே குரல்களை எழுப்பின. இது குறித்து யாழ் இந்துக்கல்லூரி அதிபர் தனது பழைய மாணவர்களுக்கு ஒரு சுற்றறிக்கையையும் அநுப்பியிருந்தார். கடந்த சிலவாரங்களுக்கு முன்னர் கனடா வந்துபோன யாழ் நகரபிதா விஸ்வலிங்கம் மணிவண்ணன் அவர்களுடனும் நான் இதுபற்றிப் பேசினேன். யாழ் மாணவர்கள் இந்தி கற்றிருந்தால் இந்தியாவினால் வழங்கப்படும் புலமைப்பரிசில்களுக்கு அவர்கள் தெரிவாவது இலகுவாக இருக்கும் என்பது அதிபரின் வாதங்களில் ஒன்று. சிங்களத்தை கட்டாய மொழியாக்குவதுபோலல்ல இது. மாலை வேளைகளிலும் மாணவர் விரும்பிய நேரங்களிலும் இந்தியைக் கற்றுக்கொள்ள வசதி செய்வதே இதன் நோக்கம். இதன் பின்னால் நாம் பயப்படுவதற்கு எதுவுமில்லை என்றவாறு மணிவண்ணன் கருத்துத் தெரிவித்திருந்தார். இந்தியத் தூதரகம் ஏற்கெனவே இந்தியைக் கற்பித்து வருவதாகவும் அங்கு இந்தி கற்பிப்பவரைத் தாம் தமது கல்லூரியிலும் வந்து கற்பிக்க ஒழுங்கு செய்துள்ளதாகவும் இந்துக்கல்லூரி அதிபர் தெரிவித்திருக்கிறார்.

பிற மொழிகளைக் கற்பதில் தீமைகள் எதுவுமில்லை. ஆங்கிலம் ஜேர்மன் பிரெஞ்சு ரஷ்ய மொழி கற்றவர்கள் பலர் வெளிநாட்டுத் தூதரகங்களிலும் சர்வதேச அமைப்புகளிலும் வேலைகளைப் பெற்றுக்கொள்ள வசதியாகவிருக்கும். ஆனால் வெளிநாட்டுத் தூதரகங்கள் தாமாக முன்வந்து உதவி செய்வதாகக் கூறும்போது அதன் நோக்கம் பற்றி விழிப்புணர்வு இருக்கவேண்டுமென்பதுதான் எனது கரிசனை. முன்னொரு காலத்தில் சீன, ரஷ்ய தூதரகங்கள் தமது கொள்கை பரப்புக் காரணங்களுக்காக இலவச மொழிக்கல்விகளை வழங்கினார்கள். ஆனால் அவ்வகுப்புகள் பாடசாலைகளுக்குள் நுழையவில்லை.

யாழ் மாணவர்கள் கற்றுக்கொள்வதற்கு நிறைய விடயங்கள் இருக்கின்றன. ஜேர்மன், நோர்வே ஆகிய நாடுகளின் உதவியுடன் பல தொழிற்பயிற்சி நிலையங்கள் (vocational training centres) ஏற்கெனவே நாடு முழுதும் இயங்குவதோடு பல பட்டதாரிகளை உருவாக்கியும் தந்துள்ளன. இக் கல்லூரிகள் எதுவும் தமது மொழிகளைக் கற்றுக்கொள்ளும்படி வற்புறுத்தவுமில்லை, ஆசை காட்டவுமில்லை. யாப்பாணத்தில் தமிழரால் நிர்வகிக்கப்படும் ஊக்கி போன்ற பயிற்சி நிலையங்கள் தகவல் தொழில்நுட்பத் துறையில் பல நிபுணர்களை உருவாக்கி வருகின்றன. தாதிகள் பயிற்சி யாழ்ப்பாணத்தில் மிகவும் குறைவு. போர் முடிந்த கையோடு வவுனியா மருத்துவமனையில் தமிழ் பேசும் தாதிகள், மருத்துவர்கள் பற்றாக்குறையால் தமிழ் நோயாளிகள் சிரமப்பட்டனர். இப்படியிருக்க இந்தி கற்றால் வேலைகள் எடுக்கலாம் என்று வாதிப்பது வெறும் முட்டாள் தனம். யாழ் இந்துக்கல்லூரியில் இந்தி கற்பிப்பது என்பது பாரிய உள்நோக்கத்துடன் ஆரம்பிக்கும் ஒரு கபடத் திட்டம்.

கொழும்பிலிருந்து வரும் இன்றைய செய்தி இதை உறுதிப்படுத்துகின்றது. செப்டம்பர் 14ம் திகதி கொழும்பிலுள்ள சுவாமி விவேகானந்தா கலாச்சாரா நிலையத்தில் இந்திய தூதரகத்தின் கலாச்சாரக் கிளை ஒரு ‘இந்தி விழாவை’ நடத்தியது. கொழும்பு ஊடகச் செதிகளின்படி சுமார் 75 இந்தி ஆர்வலர்கள், கல்விமான்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என நாடுபூராவுமிருந்து கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. விழாவில் கண்டிய நடனம், பொலிவூட் மற்றும் சிங்களப் பாட்டுக்கள் இருநாடுகளுக்குமிடையேயான கலாச்சாரப் பாலம் என்று இத்தியாதிகள் காட்சிப்படுத்தப்பட்டன. தமிழுக்கு இங்கு ஏதாவது இடமிருந்ததா என்பது பற்றி தெரியாது

இந் நிகழ்வில் பேசிய இந்திய தூதுவர் கோபால் பால்கே “இந்தியாவுக்கும் இலங்கைக்குகிடையேயான ஆயிரம் வருடங்களுக்கும் மேலான கலாச்சாரம், மொழி, இலக்கியம், மதம் ஆகியன அமைைத்துத் தந்த் பாாலங்களை இந்தி மொழியும் இலக்கியமும் வலுப்படுதியுள்ளன. பாரம்பரிய ஒளியேற்றலும் சரஸ்வதி துதியும் இந்த இரட்டை நாாடுகளின் நாாகரிக இணைப்பின் சாாட்சிகள்” எனக் கூறியிருக்கிறார்.

இந் நிகழ்வில் இந்தியாவில் இந்தி கற்பதெற்கென புலமைப்பரிசிகள் வழங்கப்பட்ட 18 இலங்கை மாணவர்கள் கெளரவிக்கப்பட்டனர். ஆக்ராவிலுள்ள மத்திய இந்தி கலாச்சார நிலையத்தில் தங்கி இந்தி கற்பதற்கான அனைத்து செலவுகளும் இவர்களுக்கு வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது. இம் மாணவர்கள் செப்டம்பர் 15 அன்று இந்தியாவுக்குப் பயணமாகினர். அதே வேளை ஏற்கெனவே இக்கலாச்சார நிலையத்தில் இந்தி கற்றுத் தேறியவர்களும் இவ் விழாவில் கெளரவிக்கப்பட்டனர். இவற்றை விடவும் நாடு தழுவிய ரீதியில் இந்தியில் கட்டுரை எழுதல், கவிதை எழுதல், பாடுதல் என்பனவற்றில் போட்டிகள் வைக்கப்பட்டுப் பரிசில்களும் வழங்குவதற்கான திட்டங் களும் உள்ளன என கொழும்பு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பின்னணி என்ன?

இந்திய மாணவர்களே ஆங்கிலத்தைக் கற்றுக்கொண்டு அமெரிக்கா கனடா என்று தப்பியோடிக்கொண்டிருக்கும்போது இந்தியைக் கற்கும் இலங்கையர் ஒருவர் இந்தியாவில் சென்று பணிபுரிவார் என இந்துக்கல்லூரி அதிபர் முதல் அவரை ஆதரிப்பவர்கள்வரை நம்புவார்களேயானால் அவர்கள் பற்றிய மதிப்பீட்டை நான் உங்களிடமே விட்டுவிடுகிறேன். இலங்கையில் இந்தி கற்பித்தல் என்பது ஒரு அரசியல் தந்திரம் என்றே நான் நினைக்கிறேன்.

ஈழத் தமிழர்களை இந்தியா தனது தனது தொப்புள் கொடி உறவுகளாகக் கவனித்துக்கொள்கிறது என்ற அச்சமும் பொறாமையும் சிங்களவர்களிடத்தில் இருக்கிறது. விடுதலை இயக்கங்களுக்கு உதவி செய்தமை மூலம் இந்திரா காந்தி அதை மேலும் வலுப்படுத்தியிருந்தார். இதன் காரணமாக இலங்கை, இந்தியாவின் எதிரியான சீனாவுடன் தனது ‘2000 வருட கலாச்சாரத் தொடர்புகளைக்’ காட்டி நெருக்கமாகியது. இந்த சந்தர்ப்பத்தைப் பாவித்து அம்பாந்தோட்டை, துறைமுக நகரம் எனச் சீனாவின் கால்கள் இலங்கையில் வெகுவாகப் பதிந்துவிட்டன. இதனால் இந்தியா மிகவும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கொழுபுத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இழந்தது. திருகோணமலை, மன்னாரில் செய்யவிருந்த முதலீடுகளுக்கு ஆப்புவைக்கப்பட்டது. இலங்கைத் தமிழரால் எந்தவித பிரயோசனமும் இல்லை; அவர்களுக்காக முண்டு கொடுக்கப்போய் நிரம்ப இழந்துவிட்டோம் என்ற நிலைக்கு வியாபாரி மோடி வந்துவிட்டார். இலங்கையின் பொருளாதாரப் பிரச்சினை ஏற்படுத்திக்கொடுத்த இடைவெளிக்குள் புகுந்து இந்தியா தனது இழந்த கேந்திர ஸ்தானத்தை மீளப் பெறத் திட்டம் தீட்டியிருக்கிறது. இதுவே இந்தியா இலங்கைக்கு தற்போது நீட்டியுள்ள கலாச்சாரக் கரம்.

மோடியின் கொள்கை வகுப்பாளர்களான ஆர்,எஸ்.எஸ். மிக நீண்ட காலமாகவே இந்திய வல்லாதிக்கத்துக்கான திட்டங்களைத் தீட்டி நடைமுறைபடுத்தி வருகிறது. இந்தி அதன் முதலாவது ஆயுதம். மதம் இரண்டாவது. மோடியை ஆட்சியில் இருத்தியதுமல்லாது தொடர்ந்து நிலைநிறுத்தியும் வருமளவுக்கு அதன் பலம் உலகமெங்கும் வியாபித்திருக்கிறது. இலங்கையில் தற்போது நடைபெற்றுவரும் தில்லுமுல்லுகளின் பின்னால் ஆர்.எஸ்.எஸ். சின் கரங்கள் இல்லையென உறுதியாகக் கூறிவிடமுடியாது. ரணில் விக்கிரமசிங்ககூட இதில் ஒரு அங்கமாகவும் இருக்கலாம். இந்து சமுத்திர பிராந்தியத்தில் சீனாவின் வருகையைத் தவிர்க்க அமெரிக்காவின் அனுசரணையுடன் இந்தியா பல வியூகங்களை அமைத்திருக்கிறது. அதில் ஒன்று இலங்கையைக் கலாச்சார ரீதியில் தன்னுடன் நெருங்க வைப்பது. கண்டிக்கும் போதிகாயாவுக்கும் பெளத்த பாலத்தைப் போட்டு சிங்கள யாத்திரீகர்களை இந்தியாவுக்கு அழைத்து இந்தியா இனிமேல் சிங்களவ்ர்களின் நண்பன் என நம்பவைப்பதே இந்தியாவின் திட்டம்.

இதனால் தமிழர்கள் இந்தியாவினால் கைவிடப்படுவார்களா என நீங்கள் கேட்கலாம். இந்தியா விட்டாலும் நாங்கள் ஒருபோதும் தங்களை உதறிவிடப் போவதில்லை; தொப்புக்கொடி உறவுகள் அல்லவோ என்றொரு கூட்டம் ஏப்போதும் இருக்கத்தானே செய்யும். அவ்வப்போது வெருட்டுவதற்கு அதற்குத் தமிழர்கள் தேவை. இந்தியாவையும் விட்டுவிட்டு நாம் போவதற்கு யார் இருக்கிறார்கள் என்பதும் அதற்குத் தெரியும். அதற்குள் நாம் எல்லோரும் இந்தியைக் கற்று விட்டால்? அம்பானி குழுமமும், அதானி குழுமமும் மன்னாரிலும் யாழ்ப்பாணத்திலும் அமைக்கப்போகும் நிறுவனங்களில் பணிபுரிய இந்தி தேவைதானே?

யாழ்ப்பாணத்தில் இந்திய கலாச்சார மையம் இன்னும் திறந்தபாடில்லை. அதை இன்னும் தமது நிர்வாகத்துக்குள் எடுக்க மாநகரசபையும் தயாராகவில்லை. சிங்களமும் அதற்குக் கட்டை போட்டுக்கொண்டிருக்கிறது. இறுதியில் அதானி குழுமமும் அம்பானி குழுமமும் தங்களது அலுவலகங்களை அங்கு நிர்மாணிக்கலாம். விரைவில் யாழ் பத்திரிகைகளில் “இந்தி பேசும் பணியாளர்கள் தேவை” என்று விளம்பரம் வரும். அப்போது இந்துக் கல்லூரி இந்திக்கல்லூரியாக மாறியிருந்தால் ஆச்சரியப்படத் தேவையில்லை.

பாரதி கண்ட கனவு இனிமேற்தான் நனவாகப் போகிறது. “சிங்களத் தீவினுக்கோர் பாலம்” இனிமேல்தான் அமையப்போகிறது. ஜெய் ஹிந்த்!