யாழ்.ஆங்கிலிக்க திருச்சபையுடன் சுமந்திரன் சந்திப்பு

புதிய சாசன வரைவு பற்றி சுமந்திரன் விளக்கம் 

முன்மொழியப்பட்டிருக்கும் புதிய அரசியல் சாசனம் குறித்த தெளிவற்ற தன்மையையும், ஐயப்பாடுகளையும், அது தமழருக்கு நல்லதா அல்லது கெட்டதா என்பது பற்றி அறிவதற்காகவும் ஒரு ஐயம் தெளிதல் நிகழ்வை அங்கிளிக்கன் தேவாலயத்தின் சமுதாயப் பொறுப்புணர்வுக்கான பிராந்திய சபையின் சார்பில் யாழ்ப்பாணத்தின் (அங்கிளிக்கன்) உதவி குருவானவர் வணக்கத்துக்குரிய அருட் தந்தை  சாம் பொன்னையா சமீபத்தில் ஒழுங்கு செய்திருந்தார். குருவானவர்கள், தேவாலய அதிகாரிகள் மற்றும் யாழ்ப்பாணம், வன்னி, திருகோணமலை, மட்டக்களப்பு பிரதேசங்களைச் சேர்ந்த சமூகத் தலைவர்களும் இந் நிகழ்வுக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள்.

அரசியல் சாசனம் பற்றிய விளக்கத்தைத் தருவதற்கு தமிழர் தேசியக் கூட்டமைப்பு சார்பில் பா.உ. எம்.ஏ. சுமந்திரன் அவர்கள் அழைக்கப்பட்டிருந்தார். அவரது கருத்துக்கள் மீதான கருத்துக்களைக் கூறுவதற்காக முந்நாள் நீதியரசர் சீ.வீ.விக்னேஸ்வரனும் சட்டத்தரணி கே.குருபரனும் அழைக்கப்பட்டிருந்தனராயினும் அவர்களது இழுத்தடிப்பு காரணமாக நிகழ்வு பா.உ. சுமந்திரனை மட்டும் பேச்சாளராகக் கொண்டு ஆரம்பமானது.

இந்நிகழ்வு, கடந்த சனிக்கிழமை (16.02.2019) அன்று சுண்டிக்குளியிலுள்ள செய்ண்ட் ஜோன் தெ பப்டிஸ்ட் தேவாலயத்தில் நடைபெற்றது. இதில் பங்கு பற்றிய தேர்தல் ஆணயத்தின் உறுப்பினரும், பேராசிரியருமான ரட்ணஜீவன் ஹூல் அவர்கள் நிகழ்வு பற்றிய தனது அவதானத்தை கொலம்பு ரெலிகிராப் பத்திரிகைக்கு எழுதியிருந்தார். அதன் தமிழாக்கம் இது.

“தேர்தல் ஆணையக உறுப்பினன் என்ற வகையில் இந்த 2 மணித்தியால நிகழ்வு பற்றிய எனது சுருக்கமான கருத்துக்களை மக்கள் தமது சுய நிர்ணய உரிமைகள் பற்றிய தெளிவுறுத்தல் காரணமாக இங்கு பதிவிடுகிறேன். அதே வேளை ஒவ்வொருக்கும் தமது சுய கருமங்களை முன்னெடுப்பதற்கான உரிமைகளைத் தரவல்ல அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டும் என்ற எனது சமரசமற்ற நிலைப்பாட்டில் உறுதியாயுள்ளேன் என்பதையும் இங்கு பிரகடனம் செய்கிறேன்”. – பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல்

கூட்டம் பா.உ. சுமந்திரனின் உரையோடு ஆரம்பித்து பின்னர் அது பற்றிய கேள்விகளுக்கு அவர் பதிலளித்ததாக அமைந்திருந்தது.

அரசியலமைப்புச் சட்டமன்றத்தினால் (Constitutional Assembly) – இது பாராளுமன்றம் முழுவதையும் அடக்கும் – திட்டமிட்டபடி,  நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவினாலும், உப குழுக்களாலும் தயாரிக்கப்பட்ட சாசன வரைவும், அதன் மீதான (ஏற்றுக்கொள்ளப்பட்ட) திருத்தங்களும் அதை ஒரு மசோதாவாக்கும் பொருட்டு (Bill) அரசியலமைப்புச் சட்டமன்றத்துக்கும் மந்திரிசபைக்கும் சமர்ப்பிக்கப்படவிருந்தது. இருப்பினும், சிறீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த பல பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டு அரசாங்கத்திலிருந்து வெளியேறியதால் மூன்றில்-இரண்டு பெரும்பான்மையைப் பெறமுடியாத காரணத்தால் அது சாத்தியமற்றுப் போனது. பெரும்பாலான சிங்களவர்கள் அதிகாரப் பகிர்வுக்கு ஆதரவளித்தாலும் சமஷ்டி அரசை ஏன் எதிர்க்கிறீர்கள் என்று கேட்டால் அது பிரிவினைக்கு வழி வகுக்கும் என்கிறார்கள். எதிர்க்கட்சித் தலவரான மஹிந்த ராஜபக்சவும் அதிகாரப்பகிர்வுக்கு ஆதரவளிப்பதாகவும் ஆனால் தேர்தல்கள் முடிவடையும் வரை புதிய அரசியல் சாசனத்திற்கு ஆதரவு தரமாட்டேன் என்கிறார். இந்த நிலைமையில் எதுவும் நடப்பது சாத்தியமற்றது.

இங்குள்ள மூலப் பிரச்சினை ‘ஒற்றை ஆட்சி’ யா அல்லது ‘சமஷ்டி’யா என்ற வார்த்தைப் பிரயோகம் தான். ஒற்றையாட்சி என்பது ஓரிடத்திலிருந்து மட்டுமே சட்டங்கள் உருவாக்கப்பட முடியும். சமஷ்டி என்பது சட்டங்களை உருவாக்கும் வல்லமை மத்தியில் அல்லாது இதர அதிகாரப் பிரிவுகளிடமும் கொடுக்கப்படுவது; அது மட்டுமல்லாது அப்படிக் கொடுக்கப்பட்ட அதிகாரங்களை மத்தியினால் மீளப் பெறமுடியாது என்பதுமாகும். நாங்கள் இந்த வார்த்தைப் பிரயோகங்களில் கவனத்தை இழக்காது அதன் உட்பொருளில் மட்டுமே கவனம் கொள்ள வேண்டும். ஒற்றையாட்சியின் மறுவடிவம் பிரித்தானியா ஆனால் அது பெரும்பாலும் சமஷ்டி ஆட்சியின் குணாதிசயங்களைக் கொண்டிருக்கிறது. உதாரணத்திற்கு, ஸ்கொட்லாந்து மக்கள் விரும்பினால் பிரிந்து போகும் உரிமை அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

துர்ப்பாக்கியமாக இந்த இரண்டு சொற்களுக்கும் இடையேயான சமஷ்டியைக்  குறிக்கும் சொல்லொன்றும் தமிழிலோ சிங்களத்திலோ இல்லை. இதற்குத் தீர்வாக ‘பெடெறல்’ (Pederal) என்ற சொல்லைச் சிங்களத் தரப்பு முன்வைத்தது. அதற்குப் பதிலாக ‘ஐக்கிய ராச்சியம்’ (Aikiya Raatchiyam) அல்லது ”ஒருமித்த நாடு’ (United Country) என்ற சொற்பதங்களைத் தமிழர் தேசீயக் கூட்டமைப்பு முண்வைத்தது. குழப்பங்களைத் தவிர்ப்பதற்காக சாசன வரைவில் சிங்கள தமிழ்ச் சொற்களைத் தொடராகப் பாவிப்பதென முடிவு செய்யப்பட்டது. பண்டா-செல்வா ஒப்பந்தமோ அல்லது டட்லி-செல்வா ஒப்பந்தமோ சமஷ்டி என்ற வார்த்தையைப் பாவிக்காமலேயே வடக்கு-கிழக்குக்கு அதிக சமஷ்டி அதிகாரங்களை வழங்கியிருந்தமையை சுமந்திரன் நினைவுபடுத்தினார். 2000ம் ஆண்டு சந்திரிகா குமாரதுங்க அரசின்கீழ் நீலன் திருச்செல்வம், ஜீ.எல்.பீரிஸ் அவர்களால் உருவாக்கப்பட்ட வரைவில் முன்வைக்கப்பட்ட அதிகாரங்களை நாம் எதிர்த்தோம் ஆனால் இன்று அவை கிடைத்திருப்பின் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டிருப்போம்.

இப்போதய சாசன உருவாக்கம் தோல்வியுற்றால், ஜே.ஆரை அமிர்தலிங்கம் நம்பியதால் ஏமாற்றப்பட்டார் என்பதற்காக அவர் எப்படி தமிழ் மக்களால் இகழப்பட்டாரோ, அதே போல சம்பந்தன் அவர்களும் ஓரங்கட்டப்படுவாரா?  இருக்கலாம். அப்படியான ஆபத்து இருக்கின்றது. அதனால் தான் இந்த அரசாங்கத்திலேயே இயன்ற அளவுக்கு நாம் சில படிகள் முன்னேற வேண்டியிருக்கிறது. இன்னுமொரு அரசாங்கத்தில் எங்கள் தேர்வுகள் இதைவிட மோசமாகவும் இருக்கலாம். சமஷ்டியை முன்னெடுக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதையுமே செய்யாதிருக்கலாம். ஆனால் அவரோடு நாம் பேசக்கூடியதாகவுள்ளது. நாங்கள் ராஜபக்சவுடனும் பேசிக்கொண்டுதானிருக்கிறோம். ரணில் அபிவிருத்த்இ பற்றிப் பேசுகிறார். எங்கள் இளையர்களுடன் பேசுகிறார். எங்கள் இளையர்கள் 10 பேரில் 9 பேர் வேலையற்று இருக்கிறார்கள். எங்கே வேலையெடுக்கப் போகிறீகள் என்று நான் அவர்களிடம் கேட்டேன். தாங்கள் வெளினாடுகளுக்குப் போவதற்குத் திட்டமிடுவதாக அவர்கள் கூறினார்கள். மாகாண சபையினூடாக அதிக அபிவிருத்திகளை மேற்கொள்ள வேண்டுமென்ற அவசரத் தேவைகளையே இது காட்டுகிறது.

போர்க்குற்றங்கள் நிகழ்த்தப்பட்டன என்பதை நிர்ணயம் செய்ய இரண்டு கருவிகள் மட்டுமே உள்ளன என்பதை நாம் நினைவில் வைத்திருக்க வேண்டும். ஒன்று – ஐ.நா. செயலாளர் நாயகத்தின் நிபுணர்கள் குழுவின் அறிக்கை. மற்றது – மனித உரிமைகள் ஆணைய அலுவலகத்தின் சிறீலங்கா மீதான விசாரணை அறிக்கை. இரண்டு அறிக்கைகளுமே அரசாங்கத்தினாலும் விடுதலைப் புலிகளாலும் போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டிருக்கின்றன என்பதை ஏற்றுக் கொள்கின்றன. லக்ஸ்மன் கதிர்காமரின் கொலையாளியை விட்டுவிட்டு ஜோசப் பரராஜசிங்கம் மற்றும் ரவிராஜ் அவர்களது கொலையாளிகளுக்கு மட்டும் தண்டனை வழங்க வேண்டுமென நாம் எதிர்பார்க்க முடியுமா? நிலுவையிலுள்ள வழக்குகளைத் துரிதப்படுத்துமாறு நான் கேட்கும்போது இதையேதான் வழக்குரைஞர் நாயகம் என்னிடம் கேட்கிறார். போரின் இறுதி மூன்று நாட்களிலும் விடுதலைப் புலிகள் அவர்களின் பாதுகாப்பிலிருந்த பலரைக் கொலை செய்துள்ளார்கள் என அறிக்கை கூறுகிறது. அவர்களை (விடுதலைப் புலிகளை)  விட்டு விட்டு இறுதிப் போரின்போது பலரைக் கொலைசெய்த ஏனையோர் மீது வழக்குத் தாக்கல் செய்யும்படி கேடக முடியுமா? நாம் அவ்வறிக்கைகளை முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டுமே தவிர அவற்றில் விரும்பியதையும் விரும்பாதவையையும் வேறுபடுத்தி எடுத்துக்கொள்ள முடியாது. குற்றங்களுக்குப் பொறுப்பானவர்களை அடையாளம் காண நமக்கொரு உண்மையைக் கண்டறியும் ஆணையம் (Truth Commission) தேவை.

பார்வையாளர்களின் சில கேள்விகளும் சுமந்திரனின் பதில்களும்

19வது திருத்தத்தின் மூலம் சட்டமாக்கப்பட்ட அதிகாரங்களை ஏன் அமுல்படுத்த முடியாதுள்ளது?

13 வது திருத்தத்தின் மூலம் பெறப்பட்ட பொலிஸ், காணி அதிகாரங்கள் இன்னும் நடைமுறையாக்கப் படவில்லை. பகிர்ந்தளிக்கப்பட்ட அதிகாரங்களை நடைமுறைப்படுத்த வடமாகாணசபை சட்டங்களை இயற்ற வேண்டும். உடனடியாக அமுல் செய்வதற்கென கூட்டமைப்பு 10 சட்டங்களின் வரைவுகளை இயற்றியிருந்தது. முன்னாள் கொழும்பு பல்கலைக்கழக வளாகத் தலைவர் சட்ட நிபுணர்திரு செல்வகுமாரன் இதைத் தயாரிப்பதற்காக யாழ்ப்பாணத்தில் 6 மாதங்கள் தங்கியிருந்தார். ஆனால் எதுவுமே செய்யப்படவில்லை. காரணம் 13 வது திருத்தத்தினால் எதையுமே பெற்றுவிட முடியாது என்று காட்ட வேண்டும் என முன்னாள் முதலமைச்சரின் நம்பிக்கை.  தேவையான சட்டங்களுக்குப் பதிலாக 434 தீர்மானங்களை அவர்கள் நிறைவேற்றினார்கள். கட்டினால் குடுமி சிரைச்சால் மொட்டை என்பதே அவர்களது கொள்கை.

கேப்பாபிலவு ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களை விடுவிக்க ஏன் நீங்கள் எதுவும் செய்யவில்லை?

உண்மை எதிர்மாறானது. அதற்கான கருமங்கள் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. ராஜபக்ச ஆட்சியின் போது அங்குள்ள நில உரிமையாளர்களுக்கு வெவ்வேறு இடங்களில் காணி வழங்கப்பட்டு, வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டு அங்கு வாழவும் தொடங்கிவிட்டார்கள். இப்போது அவர்கள் தமக்கு வழங்கப்பட்ட காணிகளை விட்டு விட்டு தமது பழைய இடங்களுக்குத் திரும்ப விரும்புகிறார்கள். அது நியாயமானதுங்கூட. இருந்தாலும் இராணுவம் இதற்குள் குழப்பத்தை விளைவிக்கிறது. தேசீயப் பாதுகாப்புக் கருதி கேப்பாபிலவின் தொடர்ந்த ஆக்கிரமிப்பு அவசியம் என அது அரசாங்கத்துக்கு எழுதியிருக்கிறது. ஆனால் ஜனாதிபதி கேட்டால் இராணுவம் அங்கிருந்து அகன்றுவிடும். இச் சூழ்நிலையில் நிலங்களை விட்டு அகலும்படி கேட்க அவர் தயங்குகிறார். அவர் கேட்டால் அதௌ அவருக்கு எதிரான பிரச்சாரமாகப் போய் விடுமென்பது மட்டுமல்ல இராணுவம் விலக மறுத்தால் அது பிரச்சினையை மேலும் மோசமாக்கிவிடும். இராணுவத்தை நந்திக்கடல் பக்கம் நகருமாறு நாங்கள் பரிந்துரைத்திருக்கிறோனம். கடற்கரைப் பக்கம் நகர்வது அவர்களுக்கு அனுகூலமாகவிருக்கும் என்றும் கூறியிருக்கிறோம். வடக்கில் 80% மான நிலங்கள் விடுவிக்கப்பட்டு விட்டன, அரசு கூறுவது போல் 90% அல்ல.

ரணிலைக் காப்பாற்றுவதற்காக மட்டும் வழக்குப் போடுகிறீர்கள் ஆனால் இராணுவம் எங்களுக்குச் செய்வது பற்றி ஏன் (வழக்கு) ஏதும் போடுவதில்லை?

பாராளுமன்றம் கலைக்கப்பட்டபோது நாம் உங்களுக்காக வழக்கொன்றைப் போட்டோம். நாங்கள் ஒன்றும் செய்யாது இருந்திருந்தால் என்ன நடைபெற்றிருக்கும்? சட்ட விரோதமான தேர்தல்கள் நடைபெற்று இப்பொழுது புதிய அரசாங்கம் ஆட்சியிலிருந்திருக்கும். அப்படி நடைபெற நாங்கள் விட்டிருந்தால் நீங்கள் இப்பொழுது கேட்பது போல் உங்கள் உரிமைகளைக் கேட்டு வாதித்திருக்க முடியுமா?

சில நல்ல விடயங்களும் நடைபெறுகின்றன. காணாமற் போனவர்களுக்கான அலுவலகம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அரசுக்கு நாம் வழங்கும் ஆதரவு மிகவும் குறைந்த, தேர்ந்த அளவில் தானிருந்தாலும், காணாமற் போனவர்களின் அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் அர்ப்பணிப்போடு செயற்பட்டு முன்னேற்றமும் கண்டு வருகிறார்கள். உண்மையைக் கண்டறியும் ஆணையம் அடுத்ததாக நடைமுறைக்கு வரலாம் என எண்ணுகிறேன். நான் சொன்னது போல, நாங்கள் இதில் தறினால் தமிழ் மக்களுக்கு அது தீமையாகத்தான் அமையும். ஆனால் மாற்று வழி என்ன?

பேராசிரியர் ரனஜீவன் ஹூல் அவர்கள் கொலம்பு ரெலிகிறாப் பத்திரிகையில் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்

நன்றி: Colombo Telegraph