Spread the love

யாழ்ப்பாணத்தினதும், ஈழத்தமிழரதும் அடையாளமாக விளங்கிய யாழ். பொதுசன நூலகம் ஜூன் 1, 1981 எரிக்கப்பட்டது. ஈழத்தமிழரின் கலைப் பொக்கிஷங்களாகப் பாதுகாக்கப்பட்ட வெகு சில அடையாளங்களில் அது ஒன்று. ஆசியாவிலேயே மிகப் பெரிய நூலகங்களில் ஒன்றாக இருந்த அது திட்டமிட்ட வகையில் சிங்கள இனவாதிகளால் எரிக்கப்பட்டது. 97,000 அரிய நூல்கள் சாம்பலாகின.

வரலாறு

இந் நூலகம் 1933 இல் திட்டமிடப்பட்டுக் கட்டம் கட்டமாக மெதுவாகக் கட்டி எழுப்பப்பட்டது. இதற்கான பணம் தனியார்களிடமிருந்து சேகரிக்கப்பட்டது. அதன் பிரதான அங்கம் 1959 இல், அப்போதைய யாழ். நகரபிதா அல்ஃபிரெட் துரையப்பா அவர்களால் திறந்துவைக்கப்பட்டது.

தமிழர்கள் இங்கிருப்பதில் மகிழ்ச்சியில்லை என்றால் அவர்களது தாய்நாடான இந்தியாவுக்குச் செல்லட்டும்

சிங்கள பா.உ. டபிள்யூ.ஜே.எம். லொக்குபண்டார


கட்டிட அமைப்பு

இக் கட்டிடத்தின் கலை வடிவம் Indo-Saracenic, அல்லது Indo-Gothic முறையில், சென்னையைச் சேர்ந்த கட்டிடக் கலைஞர் எஸ்.நரசிம்மன் அவர்களால் வடிவமைக்கப்பட்டது. இந் நூலகம் சர்வதேச நியமங்களுக்கு அமைய இருக்கவேண்டுமென்பதை முன்வைத்து, இந்தியாவின் முன்னணி நூலகர் எஸ்.ஆர்.ரங்கநாதன் அவர்கள், அதற்கான ஆலோசனைகளை வழங்கியிருந்தார்.

கட்டிடம் முடிவுற்றதும், அதனுள் பல்லாயிரக் கணக்கான அரிய கலைப் பொக்கிஷங்கள் குடி புகுந்தன. அவற்றில் பல ஏட்டுச் சுவடிகள் இலங்கையின் வரலாற்றின் தொன்மையையும், அரசியல் காரணங்களுக்காக மறைத்தொதுக்கப்பட்ட உண்மைகளையும் கொண்டவையாய் இருந்தன. ஈழத்தின் வரலாற்றை இந்நூலகம் தன் மடியில் சுமந்துகொண்டிருந்தது. ஈழ மக்களின் பெருமையைப் பறைசாற்றும் இந்நூலகத்தைத் தமது ஆராய்ச்சித் தேவைகளுக்காக உலகத்தவர் பலரும் தேடி வந்தனர்.

எரிப்பு

யாழ்ப்பாண நூலக எரிப்பு 1

மே 31, 1981, ஞாயிற்றுக்கிழமை தமிழர் விடுதலைக் கூட்டணி ஒழுங்குசெய்திருந்த கூட்டமொன்றில் மூன்று சிங்களப் பொலிசார் சுடப்பட்டு, அவர்களில் இருவர் இறந்துபோயினர்.

அன்றிரவு பொலிசாரும் துணைப்படைகளும் தொடக்கிவைத்த கலவரம் 3 நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது. தமிழர் விடுதலைக் கூட்டணி, யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினர் வீ.யோகேஸ்வரனின் வீடு, இந்துக்கோவில், ஈழநாடு பத்திரிகை அலுவலகம், சந்திகளில் வைக்கப்பட்ட பெரியோரின் சிலைகள் ஆகியன சேதமாக்கப்பட்டன. நான்கு அப்பாவிப் பொதுமக்கள் அவர்களின் வீடுகளிலிருந்து இழுத்து வந்து கொல்லப்பட்டனர்.

மறு நாள், ஜூன் 1 இல் அரச துணைப்படைகள் யாழ். நூலகத்தைத் தீவைத்துக் கொழுத்தினர். அது முற்றாக எரிந்துபோனது. 97,000 த்துக்கும் மேலான நூல்களும், ஏட்டுச்சுவடிகளும் சாம்பலாகின. ஈழத்தின் தொன்மைக்கும் கலாச்சார பண்பாடுகளுக்கும் சாட்சிகளாகவிருந்த அனைத்தும் அழிந்து போயின. ஆனந்தக் குமாரசாமி, பேராசிரியர் ஐசக் தம்பையா போன்ற பல ஈழத்து அறிஞர்களின் அரிய படைப்புகள் நிரந்தரமாக அழிக்கப்பட்டன.நூலகம் எரிக்கப்படும்போது பாதுகாப்பு படைகளின் பல உயரதிகாரிகளும், இரண்டு அமைச்சர்களும் யாழ் நகரில் தங்கியிருந்தார்கள் எனவும், சீருடை அணிந்த பாதுகாப்பு படையினரும், சிவிலியன் உடைகளில் சிலரும் திட்டமிட்ட முறையில் நூலகத்தை எரித்தார்கள் எனவும் 1984 இல் எழுதப்பட்ட கட்டுரையொன்றில் நான்சி மறே குறிப்பிடுகிறார்.

நூலகம் தீக்கிரையாவதை அந்த இரண்டு அமைச்சர்களும் யாழ் வாடி வீட்டின் (Jaffna Rest House) விறாந்தையில் இருந்துகொண்டு ரசித்துக் கொண்டார்களாம். பின்னர் இதுபற்றிக் கூறும்போது ” அது துர்ப்பாக்கியமானது தான். சில பொலிஸ்காரர் குடி போதையில் தமதுபாட்டில் கொள்ளையடிப்பதில் ஈடுபட்டிருந்தார்கள்” என்றார்களாம்.

இலங்கையின் தேசிய பத்திரிகைகள் இவ்விடயம் பற்றி எதுவுமே எழுதவில்லை. பின்னர் இதுபற்றிப் பாராளுமன்றத்தில் தமிழ்ப் பிரதிநிதிகள் கேள்வியெழுப்பிய போது பதிலளித்த சிங்கள பா.உ. டபிள்யூ.ஜே.எம். லொக்குபண்டார ” தமிழர்கள் இங்கிருப்பதில் மகிழ்ச்சியில்லை என்றால் அவர்களது தாய்நாடான இந்தியாவுக்குச் செல்லட்டும்” எனக் கூறியிருந்தார்.

“யாழ் நகர எரிப்பில், மக்கள் மனதை மிகவும் வருத்தியது யாழ் நூலக எரிப்புத் தான்” என 20 வருடங்களுக்குப் பிறகு, அப்போது யாழ் நகரபிதாவாக இருந்த நடராஜா ரவிராஜ் தான் பல்கலைக்கழக மாணவனாக இருந்தபோது அந்த நூலகம் எரிந்த காட்சியைக் கண்டதாக விபரித்திருந்தார்.

20 வருடங்களுக்குப் பிறகு, 2001 இல் கொழும்பிலிருந்து வெளி வந்த டெய்லி நியூஸ் பத்திரிகை எழுதிய தலையங்கத்தில் ‘1981 நூலக எரிப்பு, அப்போதைய அர்சாங்கத்தினால் ஏவப்பட்ட குண்டர்களால் மேற்கொள்ளப்பட்டது’ எனக் குறிப்பிட்டிருந்தது.பிரேமதாச

1991 இல், அப்போதய ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச தனது கட்சிக்காரரை, இவ்விடயத்தில் பகிரங்கமாகவே குற்றம்சாட்டியுள்ளார்.

“1981 இல் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தல்களின்போது, எமது கட்சி அங்கத்தவர்கள் சிலர் நாட்டின் இதர பகுதிகளிலிருந்து குண்டர்களை வடக்குக்குக் கொண்டு சென்று அங்கு நாசகாரியங்களைச் செய்ததுமல்லாது வடக்கில் தேர்தல்களையும் குழப்பினார்கள். அதே குழுவினர்தான் இப்போதும் குழப்பத்தை விளைவிக்கிறார்கள். யாழ்ப்பாண நூலகத்திலிருந்த விலைமதிப்பற்ற நூல்களை எரித்தது யார் என்பதை அறிய விரும்பினால் எங்களை எதிர்ப்பவர்களின் முகங்களைப் பாருங்கள்” என அவர் கூறியிருந்தார். அவர் குற்றம் சாட்டியிருந்தது ஐ.தே.கட்சியைச் சேர்ந்த லலித் அத்துலத்முதலி மற்றும் காமினி திசநாயக்கா ஆகியோரை. இவர்கள் இருவரும் பிரேமதாசாவுக்கு எதிராக ஒழுக்காற்று நடைமுறை வழக்கொன்றைக் கொண்டுவந்திருந்தார்கள்.

மஹிந்த ராஜபக்ச

2006 இல் மஹிந்த ராஜபக்ச இப்படிச் சொன்னார்:

1983 இல் நடைபெற்ற தமிழர்களுக்கு எதிரான கலவரம், வடமாகாண அபிவிருத்திச் சபை தேர்தலில் வாக்குகள் திணிக்கப்பட்டமை, யாழ்ப்பாணம் நூலக எரிப்பு ஆகியவற்றுக்கு ஐ. தே. கட்சியே காரணம். யாழ்ப்பாண மக்களின் புனிதமான நூலகத்தை எரித்தது புத்த பகவானைச் சுட்டுக் கொன்றதுக்குச் சமம். இக் காரணங்களுக்காக தமிழ் மக்களின் அமைதியான குரல்கள் இப்போது துப்பாக்கிச் சத்தங்களிடையே அமிழ்ந்துபோய்விட்டது

மஹிந்த ராஜபக்ச (2006)


ரணில் விக்கிரமசிங்க

2016 இல், ஐ.தே.கட்சித் தலைவரும் பிரதம மந்திரியுமான ரணில் விக்கிரமசிங்க, யாழ் நூலக எரிப்புக்காகப் பகிரங்க மன்னிப்புக் கேட்டார். அப்போது எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சத்தம் போட்டு எதிர்ப்புத் தெரிவித்திருந்தார்கள்.

“நாங்கள் மக்களுக்கு வேலை கொடுக்கிறோம். தொழிற்சாலைகளைத் திறக்கிறோம். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது இரண்டாவது வருடத்தை நிறைவுசெய்யும்போது, நாம் வடக்கில் மிகப் பாரிய அபிவிருத்தி வேலைகளை முடித்திருப்போம். யாழ்ப்பாண நூலகம் எங்கள் கட்சி ஆட்சியில் நடந்தது. நாங்கள் அதற்கு வருந்துகிறோம். அதற்கு நாம் மன்னிப்புக் கோருகிறோம். நீங்களும் செய்த பிழைகளுக்காக மன்னிப்புக் கோருவீர்களா? ” என அவர் கேட்டார்.

அரசாங்க விசாரணை

அமெரிக்காஸ் வாட்ச் கொமிற்றி மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபை ஆகியன 1982 இல் உண்மை அறியும் பயணம் ஒன்றை இலங்கைக்கு மேற்கொண்டிருந்தனர். அவர்களின் அறிக்கைப்படி, ஐ.தே.க. அரசு, 1981 மே-ஜூன் சம்பவங்களுக்கு எந்தவித விசாரணைகளையும் மேற்கொண்டிருக்கவில்லை எனவும், நடைபெற்ற குற்றச் செயல்களுக்கான குற்றவாளிகள் எவரும் அடையாளம் காணப்படவில்லை. எனத் தெரிவித்துள்ளன.

மீண்டும் திறப்பு

எரிந்த பகுதியுடன் யாழ் நூலகம் புனர் நிர்மாணம் செய்யப்பட்டு, கல்விக் கடவுள் சரஸ்வதியின் சிலை முன் தோட்டத்தை அலங்கரிக்க, மீண்டும் பாவனைக்காகக் திறக்கப்பட்டுள்ளது.நூலகம் எரிக்கப்பட்டு ஒரு வருடம் கழித்து, 1982 இல், தமிழ்ச் சமூகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட யாழ் பொது நூலக வாரத்தின் போது பல்லாயிரக் கணக்கான நூல்க சேர்க்கப்பட்டன. கட்டிடத்தின் ஒரு பகுதியில் திருத்த வேலைகள் ஆரம்பித்திருந்தன. அப்போதுதான் 1983 கறுப்பு ஜூலைக் கலவரம் ஆரம்பமாகியது. 1984 இல் நூலகம் முற்று முழுதாக புனர் நிர்மாணம் செய்யப்பட்டுவிட்டது. இருப்பினும் யாழ் கோட்டையில் நிலை கொண்டிருந்த படைகளுக்கும் விடுதலைப் போராளிகளுக்கும் நடைபெற்ற சமரில் நூலகம் மீண்டும் குண்டுத் தாக்குதல்களுக்கும், துப்பாக்கிக் குண்டுகளுக்கும் இரையாக வேண்டி ஏற்பட்டது. 1985 இல், அருகிலிருந்த பொலிஸ் நிலையம் மீது போராளிகள் மேற்கொண்ட தாக்குதல்களால் கொஞ்சம் பழுதடைந்திருந்த நூலகக் கட்டிடத்தை இராணுவத்தினர் குண்டுவைத்துத் தகர்த்தனர். இதனால் இரண்டாவது தடவையாக மேலும் நூல்கள் சிதைத்தழிக்கப்பட்டன. குண்டு துளைத்த நூலகக் கட்டிடம் பின்னர் நிரந்தரமாகவே கைவிடப்பட்டது.

யாழ்ப்பாண நூலக எரிப்பு 2
போர் உக்கிரமாகவிருந்தபோது கைவிடப்பட்ட நிலையில் யாழ். நூலகம்

தமிழ் மக்களின் நம்பிக்கையை மீளப்பெறும் பொருட்டு, 1998 இல் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க நூலகத்தை மீண்டும் புனர் நிர்மாணம் செய்ய ஆரம்பித்தார். இதற்கு இலங்கையர்களும் வெளிநாட்டு அரசுகளும் உதவி செய்தனர். அண்ணளவாக, US$ 1 மில்லியன் செலவு செய்யப்பட்டது. 25,000 நூல்கள் சேகரிக்கப்பட்டன.

2001 இல் புதிய கட்டிட நிர்மாணம் முடிவு பெற்றது. 2003 இல் நூலகம் திறக்கப்படுவதை விடுதலைப் புலிகள் எதிர்த்தார்கள். இதை எதிர்த்து, யாழ் நகரபிதா செல்லன் கந்தையன் தலமையிலான 21 மாநகரசபை உறுப்பினர்களும் பதை விலகினார்கள். இதைத் தொடர்ந்து நூலகம் பொதுசனப் பாவனைக்காகத் திறந்து வைக்கப்பட்டது.

Print Friendly, PDF & Email