யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் இன்று திறப்பு

நவம்பர் 1 முதல் சேவைகள் ஆரம்பமாகும்

October 17, 2019


நாட்டின் மூன்றாவது சர்வதேச விமான நிலையமாகத் தரமுயர்த்தப்பட்ட பலாலி விமான நிலையம், ‘யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம்’ என்ற பெயருடன் பயணிகள் சேவைக்காகத் திறக்கப்பட்டது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் இந்திய உயர் பிரதானி தரஞ்சித் சிங் சாந்து ஆகியோர் சம்பிரதாயபூர்வமாக விமான நிலையத்தை இன்று திறந்து வைத்தனர். பலாலி விமான நிலையம் என்று அழைக்கப்பட்டுவந்த இவ் விமான நிலைய்ம் அக்டோபர் 3 முதல் ‘யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம்’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதென போக்குவரத்து, விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

‘அலையன்ஸ் ஏயர்’ எனப்படும் ஏயர் இந்தியா விமான சேவையின் உப நிறுவனம் தனது விமானமொன்றை இன்று காலை யாழ்.சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்குவதன் மூலம் சம்பிரதாயபூர்வ பறப்பொன்றைத் தொடங்கி வைத்தது. இதைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்துக்கும் சென்னைக்குமிடையில் விமானப் பயண சேவைகள் தொடர்ந்து நடைபெறும் என அமைச்சு அறிவித்துள்ளது.

இவ் விமான நிலையத்தின் கட்டுமானத்தை வீதியமைப்பு அதிகார சபை மற்றும் விமானத் தள, பறப்பு சேவைகள் (சிறீலங்கா) லிமிட்டட் ஆகியன இணைந்து மேற்கொண்டிருந்தன.

கனடிய பொம்பார்டியர் நிறுவனத்தினால் நிர்மாணிக்கப்பட்ட, 72 ஆசனங்களைக் கொண்ட C100 விமானங்கள் ஓடுவதற்கென, ஓடுபாதையின் முதல் 950 மீட்டர்கள் தூரம் சமீபத்தில் சீரமைப்புச் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து ஏயர்பஸ் AL-320, AL-321 ஆகிய விமானங்கள் தரையிறங்கக்கூடியதாக ஓடுபாதை மேலும் 2.3 கி.மீ. தூரத்துக்கு விஸ்தரிக்கப்படும்.

யாழ். சர்வதேச விமானநிலையத்துடன், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம், றட்மலான சர்வதேச விமான நிலையம், மட்டக்களப்பு சர்வதேச விமான நிலையம், மஹிந்த ராஜபக்ச சர்வதேச விமான நிலையம் என ஐந்து சர்வதேச விமான நிலையங்கள் நாட்டில் சேவைகளில் ஈடுபடுத்தப்படுமெனெ அமைச்சு அதிகாரிகள் தெரிவித்தனர்.