HealthSri Lanka

யாழ்ப்பாணத்தில் 5 இலட்சம் டாலர் செலவில் உளநோயாளர் புனர்வாழ்வு இல்லம்!

அனைத்துலக மருத்துவ நல அமைப்பு (IMHO) வட மாகாணசபையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து

பெப்ரவரி 25, 2020

வட மாகாணத்தில் உளநோயால் பாதிக்கப்பட்டவர்களைப் பராமரித்து அவர்களுக்குப் புனர்வாழ்வளிக்கும் வகையில் நிரந்தரமான மருத்துவ வசதிகளுடன் கூடிய கட்டிடமொன்றை அமைப்பதற்கு அனைத்துலக மருத்துவ நல அமைப்பு (International Medical Health Organization (IMHO)) முன்வந்துள்ளது. வடமாகாண சபையுடன் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை இவ்வமைப்பு பெப்ரவரி 19, 2020 அன்று கையெழுத்திட்டது.

வடமாகாண சபையின் முதன்மைச் செயலாளர் கே.தெய்வேந்திரன் (Chief Secretary of Northern Province), சுகாதார அமைச்சின் வடமாகாணத்துக்கான செயலாளர் டாக்டர். ஏ. கேதீஸ்வரன்( Secretary of Ministry of Health, NP), சுகாதார அமைச்சின் வடமாகாண சுகாதார சேவைகளுக்கான பணிப்பாளர் டாக்டர் எஸ்.சிவயோகன் (Provincial Director of Health Services, NP), யாழ்ப்பாணத்துக்கான ஆலோசனை உளவள மருத்துவர் டாக்டர் ஈ.தேவநேசன் (Consultant Psychiatrist, Jaffna), யாழ்ப்பாணத்துக்கான பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் (Regional Director of Health Services, Jaffna), வடமாகாண சுகாதார சேவைகள் அமைச்சின் திட்டமிடல் அதிகாரி ஜி.கிருஷ்ணகுமார் மற்றும் வடமாகாண மற்றும் அனைத்துலக மருத்துவ நல அமைப்பின் இலங்கைக்கான அலுவலகத்தின் (IMHO-Lanka) பணிப்பாளர் ஆகியோர் இன் நிகழ்வில் பங்குபற்றியிருந்தனர்.

உளநோய், அதன் தாக்கம் அதிகரித்திருக்கும் நிலையில், ஒருவரது செயற்பாடுகளையும், பிற மனிதருடனான ஊடாட்டத் திறந்களையும் (socialization skills) பாதிக்க வாய்ப்புண்டு. மருந்துகளால் மட்டும் அவரை, நோய்க்கு முன்னாக அவர் இருந்த நிலைக்குக் கொண்டு வருவதென்பது முற்று முழுதாக வெற்றியளிக்கக்கூடிய விடயமல்ல. புனர்வாழ்வு ஒன்றினால் மட்டுமே இப்படியானவர்கள் தாம் இழந்துபோன திறமைகளையும் செயற்பாடுகளையும் மீளப் பெற்றுக்கொள்ள முடியும்.

இச் சூழலில், உளநோயாளிகளுக்கான புனர்வாழ்வு இல்லமொன்றை அமைப்பது அத்தியாவசியமாகப் பட்டது. ‘குடில்’ என்று பெயரில் உளநோயாளிகளுக்கு புனர்வாழ்வளிக்கும் இல்லமாக 2007 இலிருந்து செயற்பட்டுவரும் இந்நிலையம் இதுவரை வாடகைக்கு அமர்த்தப்பட்ட இடங்களில் இதர சமூகக் குடியிருப்புகளின் மத்தியில் நடைபெற்று வந்தது. நோயாளிகள் குணமாவதற்கு இச் சமூகச் சூழல் பெரிதும் உதவிவந்திருந்ததாயினும், நோயாளிகள் மருத்துவ வசதிகளைப் பெறக்கூடிய அளவுக்கு மருத்துவ மனைகளுக்கு அருகில் வசதியான இடங்கள் கிடைக்காமல் போயின.இந்நிலையை அறிந்த அனைத்துலக மருத்துவ நல அமைப்பின் இலங்கைக் கிளை, ரூ.70 மில்லியன் செலவில், ‘குடிலை’ நிரந்தரமான கட்டிடமொன்றிற்குள் குடி பெயர உதவிசெய்ய முன்வந்துள்ளது. இக் கட்டிடத்துக்கான, தெல்லிப்பளையில், 130 பரப்புக் காணியைத் தானமாக ஒரு அன்புள்ளம் தந்துதவியிருக்கிறது. இயல்பான வாழ் சூழலில் அமையவிருக்கும் இவ்வில்லத்தில் நோயாளிகளின் இலகுவாக்கப்பட்ட நடமாட்டம், மனதுக்குகந்த சூழல், உறவினர்களின் இலகுவான ஊடாட்டம், புதிய தலைமுறையினர் ஏற்கும் வகையிலான வடிவமைப்பு எனப் பல விரும்பத்தக்க அம்சங்கள் அமையும் என திட்டமிடலாளர் எதிர்பார்க்கின்றனர்.

இப் புதிய வளாகத்தில் ஒரு தடவையில் 15 முதல் 20 பேருக்கு, 6 முதல் 12 மாதங்களுக்குச் சேவைகளை வழங்கக்கூடியதாகவிருக்கும். அவர்களுக்குப் புனர்வாழ்வளிப்பதற்கான சேவைகளை வழங்க 10 முழுநேர உளவள சேவையாளர்களும், 5 வரவுப் பணியாளர்களும் (visiting staff) சேவையாற்றுவர்.

‘குடில்’ புனர்வாழ்வு இல்லத்தில் சிகிச்சை பெறும் உளநோயாளிகள் புனர்வாழ்வு பெற்று, இயல்பு நிலைக்குத் திரும்பியதும் அவர்கள் அவரகளது குடும்பத்தாருடன் மீளிணைக்கப்படுவர்.