OpinionSri Lanka

யாழ்ப்பாணத்தில் சாதனை படைத்துவரும் IMS மருத்துவக் கல்வி நிலையம்

பலதரப்பட்ட சுகாதாரப் பராமரிப்பு தொழிற்பயிற்சிகளை வழங்கிவருகிறது

சிறப்புக் கட்டுரை : பெருமைக்குரிய தமிழர்கள் – 04

ஜெகன் அருளையா

ஜெகன் அருளையா இலங்கையில் பிறந்து, தனது இரண்டாவது வயதிலேயே பிரித்தானியாவுக்குத் குடும்பத்துடன் புலம் பெயர்ந்தவர். லண்டனில் வளர்ந்த அவர் 1986 இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இயற்கை விஞ்ஞானத்தில் பட்டம் பெற்றவர். இரண்டு தசாப்தங்களாக தகவற்தொழில்நுட்பத்திலும், அதில் பாதிக் காலம் பிரித்தானிய நிறுவனங்களுக்கு மென்பொருள் தயாரிக்கும் பணியில், கொழும்பிலும், கூர்கவோன் (இந்தியா) விலும் தங்கியிருந்தார். 2015 இல் அவர் யாழ்ப்பாணத்துக்கு இடம்பெயர்ந்து அங்கு சமூக, பொருளாதார அபிவிருத்தித் திட்டங்களில் ஈடுபட்டு வருகிறார். லங்கா பிசினஸ் ஒன்லைன் இணையத்திற்கு ஆங்கிலத்தில் எழுதிய இக் கட்டுரை அவரின் அனுமதி பெற்று ‘மறுமொழி’ இணைய சஞ்சிகையில் தமிழில் பிரசுரமாகிறது. மொழி மாற்றத்தில், மொழி பிசகினாலும் கருத்துப் பிசகு நேராமல் இருக்கவேண்டுமென முயற்சி எடுக்கப்பட்டிருக்கிறது. சுகந்தனைப் போலவே ஜெகனும் தன் வசதியான, பழக்கப்பட்ட உலகத்தை உதறித் தள்ளிவிட்டு எங்கள் குருதி தோய்ந்த மண்ணை வியர்வையால் கழுவ முன்வந்திருக்கிறார்கள். நீண்ட கட்டுரைதான். முழுமையாக வாசிப்பதுகூட ஒரு வகையில் இவர்கள் போன்றவர்களின் ஆத்ம பலத்துக்கு மேலும் உரம் சேர்க்கும். உங்கள் கருத்து வரவேற்கப்படுகிறது.


2020 கோவிட்-19 நோய்த் தொற்றின்போது நாம் எமது சுகாதாரப் பணியாளர்களை மிகவும் நேசித்தோம். நாம் எல்லோருமே அவர்களை நேசிக்க வேண்டி ஏற்பட்டது, காரணம் கோவிட்-19 எல்லோரையுமே பாதித்தது. அது நோய்த் தொற்றால் அல்ல, ஊரடங்கினால்.

கடைகள் மூடப்பட்டன, சமூக ஊடாடல் தடைசெய்யப்பட்டது, வருமானம் பறிபோனது, பொரூளாதாரம் சீரழிந்தது, வீட்டுக்குள் முடக்கப்பட்டதால் மன உளைச்சல் அதிகரித்தது. நோய் ‘மற்றவர்களை’ மட்டும், அதிலும் ஒரு சொற்பம் பேரை மட்டுமே தாக்கியது. அவர்களும் பிறருக்காக அதைத் தாங்கிக் கொண்டார்கள். எனவே நாம். மீதமான ‘அதிகம் பேர்’ அவர்கள் மீது இரக்கம் மட்டுமே கொள்ளவேண்டியிருந்தது.

கோவிட்-19 எமது எல்லோர் வாழ்விலும், பணிகளிலும், வீடுகளிலும், குளிரூட்டிகளிலும், பணப்பைகளிலும் தனது நிழலை வியாபித்தது. நாம் எல்லோருமே அதன் பிரசன்னத்தை உணர்ந்தோம்.சில மாதங்களுக்கு எங்கள் சுகாதாரப் பணியாளர்களை அதிமானுடராக வழிபட்டோம். ஆனால் மனிதத்தின் நன்றிகெட்ட தன்மை பாம்பைவிட வேகமாகக் கடித்துக் கொண்டது. அந்த அதிமானுடர் விரைவிலேயே மறக்கப்பட்டுவிட்டனர்.

மருத்துவப் பணியாளர்களை நினைவுகூரும் அதே வேளை, நாம் இலங்கையின் வடமாகாணத்தின் மெச்சத்தக்க சுகாதார சேவைகளையும் ஒரு தடவை உற்று நோக்க வேண்டும்.

மானிப்பாய் கிரீன் மெமோரியல் மருத்துவமனை Manipay Green Memorial Hospital (GMH))

மானிப்பாய் கிறீன் மெமோரியல் மருத்துவமனை (Manipay Green Memorial Hospital (GMH)), மலிவான, சில நேரங்களில் இலவசமானதுமான, சேவைகளை மக்களுக்கு அளிக்கும் நோக்குடன், 1848 இல் அமெரிக்க சிலோன் மிஷனால் (American Ceylon Mission) ஆரம்பிக்கப்பட்டது.

‘மருத்துவ விஞ்ஞான நிலையம்’  (Institute of Medical Science (IMS)) என்ற இக் கட்டுரை கிறீன் மெமோரியல் மருத்துவமனையைச் சுற்றியே எழுப்பப்படுகிறது.

IMS என்ற இந்த எண்ணக் கரு, 2011 இல் லண்டனில் சில மருத்துவர்களின் சந்திப்பின்போது உருவாகியிருந்தது. தற்போது IMS இன் தலைமை நிர்வாகியாகவிருக்கும் டாக்டர் ராஜேந்திரா சுரேந்திரகுமாரன் – இக் கட்டுரையில் அவரை டாக்டர் சுரேன் எனவே அழைப்பேன் – அப்போது, லண்டனில் பிரபலமான போதனா வைத்தியசாலையாக விருக்கும் செயிண்ட் பார்த்தலோமியூஸ் மருத்துவமனையில் பின் கலாநிதிப்பட்டப் படிப்பை மேற்கொண்டிருந்தார்.

IMS இன் உருவாக்கத்திற்கான முதலீட்டையும், உபாயங்களையும் தருவதற்கு, சர்வதேச ஆலோசனைச் சபையுடன் கூடிய நம்பிக்கை நிதியமொன்றை ஆரம்பிப்பது என முடிவுசெய்யப்பட்டது. இவ்வாலோசனைச் சபை, யாழ்ப்பாணத்தில் டாக்டர் சுரேநின் தலைமையின் கீழ் இயங்கிய குழுவுடன் இணைந்து பணியாற்றியது.

IMS இன் முதன்மையான நோக்கம், மருத்துவ விஞ்ஞானப் பிரிவுகளில் சேவைகளை ஆரம்பிக்கவிருப்பவர்களுக்கும் (pre-service), சேவைகளில் ஏற்கெனவே ஈடுபட்டுக்கொண்டிருப்பவர்களுக்கும் (in-service) தொழிற்கல்வியை வழங்குவது. சுகாதாரப்பணியென்றதும் மருத்துவராக வருவதை விட மற்றெல்லாம் ‘இழி’ தொழில்கள் என்ற போக்கை மாற்றி, இதர சுகாதாரப்பணிகளையும் மதிப்புள்ளவனவாக மாற்றும் நோக்கத்துடன் இன்நிலையம் போதனைகளையும் பயிற்சிகளையும் வழங்கி வருகிறது.ஆட் சேர்ப்பு

2011 இல் ஆரம்பிக்கப்பட்ட IMS, துரிதமாகத் தன் பணிகளில் இறங்கியது. 2012 இல் அது அனாதை இல்லங்கள், வறிய குடும்பங்களைத் தேடிச் சென்று தன் கல்வி நிலையத்தில் கறபதற்காக மாணவர்களைச் சேர்க்க ஆரம்பித்தது. சுகாதார பராமரிப்பு உதவியாளர் (Healthcare Assistant) என்ற ஒரு வருடக் கல்வியைப் பயில்வதற்காக 25 மாணவர்கள் சேர்ந்தார்கள். இக் கல்விப்பயிற்சியை முடித்தவர்கள் தாதிகளுக்கு உதவியாளர்களாக இருப்பார்கள்.

இப்பயிற்சிநெறிக்கான முதலாவது அமர்வு 2013 இல் ஆரம்பமானது. இதற்கான நிதியாதரவை, பிரித்தனியாவில் பதியப்பட்ட, உலகம் முழுவதும் கிளைகளைக் கொண்ட, மனித நேயம் அறக்கட்டளை வழங்கியிருந்தது. ஒவ்வொரு மாணவரும் கட்டணமாக மாதம் ரூ.2,500 செலுத்த வேண்டும். வறிய மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கப்பட்டது. நன்கொடைகள் மூலம் மீதி பெறப்பட்டது.

கல்வியை முடித்தவர்கள், யாழ்ப்பாணத்திலுள்ள சுகாதாரப் பராமரிப்பு சேவை நிலையங்களில் பெற்ற பின்னர், கொழும்பிலுள்ள முன்னணி தனியார் மருத்துவமனையான Lanka Hospitals இல் 3 மாதப் பயிற்சிக்காக அனுமதிக்கப்படுவர்.

தங்கும் வசதிகள், உணவு, பயிற்சி ஆகியவற்றை மருத்துவமனை பார்த்துக்கொள்ளும். அதற்காக ஒவ்வொரு மாணவரிடமிருந்தும் ரூ.25,000 அறவிடப்படுகிறது. மாணவர்கள், அறுவைச் சிகிச்சை மற்றும் மிகவும் நுணுக்கமான சிகிச்சை நடைமுறைகளைக் கற்றுக்கொள்வார்கள். இதே பயிற்சியை அரச மருத்துவமனைகளில் பெறுவதற்காக சுகாதார அமைச்சை அணுகியதாகவும், ஆனால் அதற்குச் சாதகமான பதிலேதும் இதுவரை கிடைக்கவில்லை எனவும் டாக்டர் சுரேன் தெரிவித்தார்.

பயிற்சி நெறிகள்

IMS இல் போதிக்கப்படும் பயிற்சிநெறிகள் தேசிய பயிற்சி மற்றும் தொழிற்கல்வி அதிகாரசபையாலும் (National Apprentice and Industrial Training Authority (NAITA), மூன்றாம் நிலை தொழிற்கல்வி ஆணையத்தாலும் Tertiary And Vocational Education Commission (TVEC) அங்கீகரிக்கப்பட்டவை.

இப்பயிற்சி நிலையம் (IMS), ஒரு தனியார் தாதிப்பயிற்சி நிலையமாக, சுகாதார அமைச்சின் தனியார் சுகாதார கட்டுப்பாட்டுச் சபையில் (Private Health Regulatory Council, Ministry of Health) பதிவு செய்யப்பட்டுள்ளது. இங்கு

கற்கையை முடித்து வெளியேறும் சுகாதார உதவியாளர்கள், அரச மருத்துவமனைகள் உட்பட இலங்கையில் எங்கும் பணியாற்றலாம்.IMS தாதிகளுக்குரிய 3 வருடப் பயிற்சி நெறிகளையும் வழங்குகிறது. இப் பயிற்சிகளுக்காக அது சுகாதார அமைச்சின் பாடத்திட்டங்களையே பாவித்தாலும், தனியார் கல்வி நிலையங்களில் பயிற்சிகளை முடித்த தாதிகளை தாதிகள் சங்கத்தில் அங்கத்தவராக அது அனுமதிப்பதில்லை. இதனால் அவர்கள் அரச் மருத்துவமனைகளில் பணியாற்ற முடியாது.

IMS, இலங்கை அரசின் வேலையற்றோர் பயிற்சித் திட்டத்துடன் இணைந்து வேலையற்றோருக்கு தொழிற் பயிற்சிகளையும் வழங்கி வருகிறது. விருந்தோம்பல், நலப் பராமரிப்பு போன்ற பல சேவைத் துறைகளில் வேலையற்றறோருக்குப் பயிற்சிகளை வழங்க அரசாங்கத்தினால் பயிற்று நிறுவனமாகவும் இது அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இளையோர் விவகாரம், திறனபிவிருத்தி அமைச்சினால் பின் வரும் தராதரப் பத்திரங்களை வழங்குவதற்கு, IMS இற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

  • நலப் பராமரிப்பு தராதரப் பத்திரம் (Certificate of Healthcare)
  • தாதிகள் டிப்ளோமா (Diploma in Nursing)
  • மருந்தாளர் தொழில்நுட்பவியலாளர் தராதரப் பத்திரம் (Certificate for Pharmacy Technician)

IMS இனால் வழங்கப்படும் இதர கற்கை நெறிகள்

  • பராமரிப்பு வழங்குனர் (Care Giver, NVQ Level3)
  • பராமரிப்பு வழங்குனர் (Care Giver (Elderly Care), NVQ Level4)
  • குழந்தைகள் காப்பக செயற்பாடுகள் (Child Care Centre Operations, NVQ Level4)
  • பயோ மெடிக்கல் தொழில்நுடபவியலாளர் (Biomedical Technician, NVQ Level2 & Level3)
  • பல் மருத்துவ தாதியர் உதவியாளர் (Dental Surgery Nurse Assistant, NVQ Level3)

IMS தற்போது 132 மாணவர்களை மேற்காணும் கற்கைநெறிகளில் பயிற்றுவித்து வருகிறது.

இலங்கையின் பொருளாதாரத்தில் கணிசமான பங்கு வெளிநாடுகளில் பணிபுரியச் சென்றவர்கள் அனுப்பும் பணத்தினால் கிடைக்கிறது. அதற்காகப் பலர் இன்னும் வரிசையில் நிற்கிறார்கள் என்கிறார் டாக்டர் சுரேன். 2016 இல் மட்டும், இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்குப் பணிபுரியச் சென்றவர்களில் 56% மானோர் தேகவலுப் பணிகளுக்காகவே சென்றுள்ளனர் என இலங்கை வெளிநாட்டுப் பணிகளமைச்சின் புள்ளிவிபரம் தெரிவிக்கிறது.

குழந்தை பராமரிப்பு, தாதியர் வேலை, நலப்பராமரிப்பு உதவியாளர் போன்ற உகந்த தராதரங்களுடன் மத்தியகிழக்குக்கு பணிபுரியச் செல்லும்போது தற்போது வீட்டுப் பணிப்பெண்களாகவும், துப்புரவு செய்பவர்களாகவும் உழைக்கும் பணத்தைப்போல் மேலும் 50% அதிகமாக உழைக்க முடியும். 2019 இல், இப்படியான் வெளிநாட்டுப் பணியாளரால் இலங்கைக்கு அனுப்பப்பட்ட பணம் US$ 6.7 பில்லியன் ஆகும்.

இளையவர்களுக்காக, IMS தொழில் வழிகாட்டும் திட்டமொன்றையும் நடைமுறைப்படுத்தி வருகிறது. யாழ்ப்பாண வாவட்டச் செயலகம் நடத்தும் வருடாந்த தொழிற் சந்தைக்கு (jobs fair) IMS தன்னைக் காட்சிப்படுத்துகிறது. பாடசாலைகளுக்குச் சென்று மாணவர்களை சுகாதார மற்றும் குழந்தைப் பராமரிப்பு சார்ந்த தொழில்களில் ஈடுபடுமாறு ஊக்குவித்து வருகிறது.நரம்பு மறுவாழ்வு மையம், இறுதிப் பராமரிப்பு சேவைகள்

சுகாதார தொழிற் பயிற்சி வழங்குவதை விட, IMS, நரம்பு மறுவாழ்வு மையம் (Neuro Rehabilitation Centre) , இறுதிப் பராமரிப்பு (Palliative Care) போன்ற சேவைகளையும் நடத்தி வருகிறது. நரம்பு மறுவாழ்வு மையத்தில், வாதம், முள்ளந்தண்டு வடப்பாதிப்பு போன்ற திடீர் நரம்பு வியாதிகளால் பாதிக்கப்பட்டோருக்கு உறுப்பு மீள்பாவனைக்கான பயிற்சிச்

சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. 18 பேரைக் கொள்ளக்கூடிய இக் கட்டிடத்தில் நோயாளிகள் தங்கிச் சிகிச்சை பெறுவதற்கு மாதம் ரூ. 60,0000 அறவிடப்படுகிறது. இப்பணத்திற்கு, உணவு, தங்கும் வசதி, உடற்பயிற்சி, மருந்துகள், தாதிப்பராமரிப்பு ஆகிய சேவைகள் கிடைக்கின்றன. அரச மருத்துவமனைகளில் இப்படியான சேவைகள் வழங்கப்படுவது குறைவு.

சிகிச்சைகள் பலனளிக்காமல் வாழ்வின் இறுதிக்கணங்களில் வாழும் நோயாளிகளுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் ஆறுதலளிக்கும் வகையில் நோயாளிகளுக்கு வலிக்குறைப்பு, மன ஆறுதல் போன்ற சேவைகள் இறுதிப் பராமரிப்பு மையத்தில் (palliative care centre) வழங்கப்படுகிறது. பிரத்தியேக அறையில் வைத்து ஒரு நோயாளியைப் பராமரிப்பதற்கு, ஒரு நாளைக்கு ரூ. 750 அறவிடப்படுகிறது.

குழந்தைகள் பராமரிப்பு

குழந்தைகளைப் பராமரிப்பதற்கென IMS, கபிரியெல்லா ராசையா சிகிச்சைப் பிரிவை Gabriella Rasaiah Clinic for Children நடத்தி வருகிறது. ஆட்டிசம், பெருமூளை வாதம் (Cerebral Palsy), முழுமையற்ற மூளை விருத்தி (Downs Syndrome) போன்ற நெடுநாள் குணவியற் குறைபாடுகளைக் கொண்ட குழந்தைகளை இங்கு வைத்துப் பராமரிக்கிறார்கள். யாழ்ப்பாணத்தில் இது போன்ற வேறு பல நிலையங்கள் இருந்தாலும், இங்கு, இக் குழந்தைகளின் பெற்றோருக்கும் சிகிச்சைகளும், பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. இச் சேவைகளுக்காக IMS கட்டணம் ஏதும் அறவிடுவதில்லை. பிரித்தானியாவைச் சேர்ந்த கபிரியெல்லா என்ற குழந்தை இப்படியான நோயொன்றிற்குப் பலியானதைத் தொடர்ந்து அவளது பெற்றோர் (ராசையா குடும்பம்) கபிரியெல்லாவின் பெயரில் இச் சேவைகளை IMS ஊடாக இலவசமாக வழங்கி வருகிறது.அதிகரித்துவரும் தேவைகளின் மத்தியில், டாக்டர் சுரேன் மற்றும் IMS நிலையம் பல சவால்களுக்கும் முகம் கொடுக்கவேண்டியுள்ளது. வளாகங்களின் விஸ்தரிப்பு, புதிய உபகரணங்களை வாங்குதல் முதற்கொண்டு, வறிய மாணவர்களது பயிற்சிகளைத் தர பண முதலீடுகள் தேவைப்படுகின்றன. வறிய மாணவர்களை, விரும்பியோர் புரவலராக வந்து அவர்களது கல்விக்கான செலவுகளை ஏற்றுக்கொள்ளலாம். புத்தகங்கள் உடுப்புகள், சக்கர நாற்காலிகள், மூதாளர்களுக்கு நடை உதவி உபகரணங்கள் என அன்பளிப்புகளையும் செய்ய முன்வரலாம். பெப்ரவரி 2020 இல், சிங்கப்பூர், அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலுள்ள கொடையாளர்கள், ஹற்றன், யாழ்ப்பாண ரோட்டரிக் கழகங்களின் உதவியுடன் IMS இற்கு இரண்டு நோயாளிகளை அவதானிக்கும் கருவிகளை அன்பளிப்புச் செய்திருந்தார்கள். மானிப்பாய் மருத்துவமனை நண்பர்கள், பேராசிரியர் ஜயந்தா ஆர்ணோல்ட் ஆகியோர் பல உதவிகளையும் செய்திருந்தார்களென டாக்டர் சுரேன் கூறுகிறார்.

கோவிட்-19 தொற்று நடவடிக்கைகள் காரணமாக தொழிற் பயிற்சி நிலையத்தில் நேரடி வகுப்புக்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு ZOOM தொழில்நுட்பம் மூலம் வகுப்புகள் நடாத்தப்பட்டு வருகின்றன. IMS, ஆங்கில மொழி, தொடர்பாடல் (communications), மென் திறமிகள் (Soft Skills) போன்றவற்றிலும் கற்கைகளை ஆரம்பிக்கத் தயாராகி வருகிறது. ஆங்கிலத்தை இரண்டாவது மொழியாகக் கற்பிக்க விரும்புபவர்கள் IMS தொடர்புகொள்ளலாம்.

IMS பற்றி மேலும் அறிய விரும்புபவர்கள் டாக்டர் சுரேந்திரகுமாரனை theimsjaffna@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம்.

ஜெகன் அருளையாவினால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இக்கட்டுரை இலங்கையிலிருந்து வெளிவரும் ஆங்கில இணையத்தளமான Lanka Business Online இல் வெளிவந்தது. ஆசிரியரின் அனுமதியுடன் இங்கு சில மாற்றங்களுடன் மீள் பிரசுரமாகிறது