News & AnalysisSri Lanka

யாழ்ப்பாணத்தில் ஈ.பி.டி.பி. மகளிர் அணியால் தாக்கப்பட்ட சிறுவன் தற்கொலை

இரண்டு புறாக்களினால் ஏற்பட்ட பரிதாபம்!

எச்சரிக்கை! காணொளி மனதைப் புண்படுத்தலாம்

யாழ்ப்பாணத்தில் கண்ணபுரம் என்னுமிடத்தில் புறா வளர்க்கும் இரண்டு அயலவர்களிடையே ஏற்பட்ட உரசல் காரணமாக ஒரு சிறுவன் தற்கொலைசெய்ய நேரிட்டுள்ளது.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் கண்ணபுரத்தில் ஒரு வீட்டில் வளர்க்கப்பட்ட இரண்டு புறாக்கள், அயல் வீட்டில் சென்று அங்குள்ள புறாக்களுடன் தங்கிவிட்டன எனவும், இது தொடர்பாக ஏற்பட்ட விவாதங்களைத் தொடர்ந்து ஒரு குடும்பத்தைச் சேர்ந்த சுகந்தன் என்ற சிறுவனைச் சில பெண்கள் தந்திரமாகப் பேச்சுவார்த்தைக்கென அழைத்து அவனைத் தாக்கித் தலைமுடியைச் சவரம் செய்து அனுப்பியாதாகவும் அவமானம் தாங்க முடியாத சிறுவன் தற்கொலை செய்துவிட்டதாகவும் தெரியவருகிறது.

சம்பந்தப்பட்ட புறாக்கள் இரண்டும் தாமாக அயல்வீட்டுக்குச் செந்றனவா அல்லது திருடப்பட்டனவா என்பது குறித்து இரண்டு குடும்பங்களிடையேயும் வாக்குவாதங்கள் நடைபெற்றிருந்தன எனவும் இதைத் தொடர்ந்து ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் மற்ற வீட்டிற்குச் சென்று அங்குள்ள மூன்றுபேரைத் தாக்கிவிட்டு ஓடிவிட்டதாகவும், தாக்கப்பட்ட இந்த மூன்று பேரும் ஈ.பி.டி.பி. கட்சிக்கு நெருக்கமானவர்கள் எனவும் கூறப்படுகிறது. இம் மூன்று பெரில் ஒருவரான லலிதா என்பவர் ஈ.பி.டி.பி. பெண்கள் அணியின் இணைச் செயலாளர் எனத் தெரியவருகிறது.

தாக்கப்பட்ட பெண்கள், தாக்கியதாகக் கூறப்படும் அயல் வீட்டுச் சிறுவனான புவநேந்திரராஜா சுகந்தனைப் பேசுவதற்கென அழைத்து அவன் மன்னிப்புக் கேட்டால் விட்டுவிடுவதாகக் கூறித் தமது வீட்டிற்குக் கொண்டு சென்றனர் என சுகந்தனின் தந்தையார் தெரிவித்தார் எனக் கூறப்படுகிறது.

சுகந்தன் இப் பெண்களின் வீட்டிற்குச் சென்றதும், அங்குள்ள பல பெண்கள் சேர்ந்து சுகந்தனை அடித்துச் சித்திரவதை செய்ததுடன்(காணொளி இணைப்பு). மிளகாய்த்தூளைக் கரைத்து அவனது முகத்தில் ஊற்றியுள்ளனர். அத்தோடு சுகந்தனது தலை முடியை பலாத்காரமாகச் சவரம் செய்யும் முயற்சிகளிலும் இப் பெண்கள் இறங்கியிருந்தமை காணொளியில் பார்க்கக்கூடியதாகவுள்ளது.

சுகந்தனை இப்பெண்கள் தாக்கும்போது அங்கு நினற ஆண்களோ பெண்களோ தடுக்க முயற்சிக்கவில்லை. இப் பெண்களில் சிலர் தாம் எடுத்த காணொளிகளைத் தமது சமூக வலைத் தளங்களில் ஏற்றியுமுள்ளார்கள்.

தாக்குதலுக்குள்ளான சிறுவன் ஜூலை 27ம் திகதி, தனது பிறந்தநாளன்று தற்கொலை செய்துகொண்டான். அவனுக்கு கோவிட்-19 தொற்று இருக்கிறது என்று கூறி முறையான பிரேத பரிசோதனை எதுவுமில்லாமலேயே அவனது உடல் தகனம் செய்யப்பட்டு விட்டது எனப்படுகிறது.

இச் சம்பவத்தோடு ஈ.பி.டி.பி. தலைவர் நேரடியாகச் சம்பந்தப்படாவிடினும், இத் தாக்குதலில் சம்பந்தப்பட்ட பெண்களால் எடுக்கப்பட்ட / பகிரப்பட்ட காணொளிகளைப் பகிர்வதை பொலிசாரின் உதவியுடன் கட்சி அலுவலகம் தடுத்துவிட்டது எனவும், ஊடகவியலாளர்கள் இச் செய்தியைப் பிரசுரிக்க அஞ்சுகிறார்கள் எனவும் கூறப்படுகிறது.

பொதுமக்களின் அழுத்தம் காரணமாக லலிதா உட்பட இத் தாக்குதலில் சம்பந்தப்பட்ட ஆறு பெண்களும் ஒரு ஆணும் கைது செய்யப்பட்டிருந்தாலும் அவர்கள் உடனேயே விடுதலை செய்யப்பட்டு விட்டார்கள் எனக் கூறப்படுகிறது. இது தொடர்பாக வழக்கொன்று பதியப்பட்டுள்ளதாகவும், ஆகஸ்ட் 2ம் திகதி விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன எனவும் கூறப்படுகிறது (கொலொம்பொ ரெலிகிராஃப்)