யாழ்ப்பாணத்தில் இராணுவ வசமிடமிருக்கும் நிலங்கள் விடுவிக்கப்படும் – டக்ளஸ் தேவானந்தா

வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் இரானுவத்தினர் கைப்பற்றி வைத்திருக்கும் சில தனியார் நிலங்களை உரிமையாளருக்குத் திருப்பிக் கொடுக்க அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக மீன்பிடித் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.

ஜநாதிபதி ராஜபக்சவுடன் தான் மேற்கொண்ட நேரடி உரையாடலைத் தொடர்ந்து இந் நிலங்களை இராணுவம் விடுவிக்கவுள்ளதாகவும் பெரும்பாலும், செப்டம்பர் மாதமளவில் இக் காணி விடுவிப்பு நடைபெறலாமெனத் தான் எதிர்பார்ப்பதாகவும் அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

போராட்ட காலத்தில் மக்களால் கைவிடப்பட்ட 4,000 ஏக்கர் நிலத்தில் ஏறக்குறைய அரைவாசிக்கு மேல் ஏற்கெனவே உரிமையாளருக்குக் கொடுக்கப்பட்டுவிட்டது எனவும் மீதி விரைவில் விடுவிக்கப்படுமெனவும் அமைச்சர் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

விடுவிக்கப்படவுள்ள நிலங்களின் எல்லைகள் போன்றவற்றைத் தற்போது அதிகாரிகள் தயாரித்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.