Sri Lanka

‘யாழ்ப்பாணத்திற்கு ஆறு’ (River for Jaffna): அரசின் புதிய திட்டம்

பல தசாப்தங்களுக்கு முன்னர் ஒரு பொறியியலாளரால் பரிந்துரைக்கப்பட்ட ‘யாழ்ப்பாணத்திற்கு ஆறு’ எனப் பெயரிடப்பட்ட நீர் வழங்கும் திட்டத்தை மறு பரிசீலிக்க இலங்கை அரசு முன்வந்திருக்கிறது. இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் பொறியியலாளர்கள், நிபுணர்கள், சர்வதேச அமைப்புக்கள் ஆகியவற்றுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ள உத்தேசித்துள்ளது.

“வடக்கு தண்ணீர்ப் பற்றாக்குறையால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆபத்தான நிலையைத் தவிர்க்க பேராசிரியர் ஆறுமுகத்தினால் பரிந்துரைக்கப்பட்ட ‘யாழ்ப்பாணத்திற்கு ஆறு‘ என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசு கலந்துரையாடல்களை மேற்கொண்டுவருகின்றது” என பிரதமர் தினேஷ் குணவர்த்தனா புதனன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

கடல் நீரை நன்னீராக்கும் திட்டம் அதிக செலவானது என்பதனால் இத் திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசு முன்வந்துள்ளது.

யாழ் குடாநாட்டின் நீர்த் தேவைகள் மற்றும் சூழல் மேம்பாட்டிற்காக ‘யாழ்ப்பாணத்திற்கு ஆறு’ என்ற திட்டத்தை நீர்ப்பாசனத் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளராக இருந்த பொறியியலாளர் ஆறுமுகம் 1954 இல் பரிந்துரைத்திருந்தார். இதைத் தொடர்ந்து மஹாவலி நிர்வாகம், உள்நாட்டு வெளிநாட்டு ஆலோசகர்கள், சர்வதேச அமைப்புகள் பல இணைந்து இத்திட்டத்தை மேலும் மெருகூட்டியிருந்தன.