Spread the love
கனடா மூர்த்தி

ஆளுனர் சுரேன் ராகவன் குறித்து பல விமர்சனங்கள் வருவதற்கு அவர் செய்கின்ற சேவைகள் குறித்து பலருக்கும் இருக்கும் உள்ளார்ந்த ஆர்வமே காரணம் என்று தான் நான் நினைக்கிறேன்.

யாரிந்த சுரேன் ராகவன் - பாகம் 2 | கெஞ்சாதே 09 1
கட்டுரை ஆசிரியருடன் கலாநிதி ராகவன்

இதன் முகப்புத்தகப் பதிவுக்குக்கூடப் பலரகமான பின்னூட்டங்கள்… ஒரு முகப்புத்தக நண்பர் “எங்களையும் இந்தக் கூட்டத்திற்கு அழைத்திருக்கலாமே” என்று வருந்தினார். (பதிலுக்கு நான் “நீங்கள் தொழில் முனைவரா?” என்று இடக்குமுடக்காகக்  கேட்டேன். ஆள் கடுப்பாகியிருக்கவேண்டும். “அப்ப நீங்க?” என்று Revenue Canada Agency Staff போல என்னை விசாரிக்க ஆரம்பித்துவிட்டார்.)

தமிழர் ஒருவர்தான் வட மாகாணத்திற்கு ஆளுனராக வரவேண்டும் என புலம்பியவர்கள் புலம்பெயர்ந்தோர்… அப்படி வந்தபின்னும் புலம்புவது என்ன வகையான டிசைன்? 

இன்னொரு நண்பருக்கு, கலாநிதி சுரேன் ராகவனை ‘ஒரு கல்விமான்’ என்று நாம் குறிப்பிடுவதில் ஏதோ வருத்தம் இருக்கிறது போலும். கல்விமான்களையே அவர் திட்ட ஆரம்பித்துவிட்டார். ஒரு கல்விமானைக் கல்விமான் என்று அழைப்பதில் என்ன சிக்கல் இருக்கிறது என்பது புரியவில்லை. இதற்கிடையே இன்னொரு நண்பர், “ஆளுனர் தனது அதிகாரத்தைப் பாவித்து சிறையில் இருக்கும் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும்” என்று கருத்திட்டிருந்தார். அடடா..

“சுரேன் ஒரு கல்விமானாக நடந்து கொள்ளாமல், ஸ்ரீலங்கா அரசின் முகவராக நடந்து கொள்கிறார்” என்றார் இன்னொருவர். கிழிஞ்சுது போ.. ஸ்ரீலங்கா ஜனாதிபதி நியமிக்கும் ஆளுனர் வேறெப்படி நடக்க வேண்டும்? தமிழர் ஒருவர்தான் வட மாகாணத்திற்கு ஆளுனராக வரவேண்டும் என புலம்பியவர்கள் புலம்பெயர்ந்தோர்… அப்படி வந்தபின்னும் புலம்புவது என்ன வகையான டிசைன்?  ஒருவர் செய்யும் சேவைகளை – வேலைகளுக்கான  காரண காரியங்களை ஆழமாக ஆராயாமல் வைக்கப்படும் மேலோட்டமான புலம்பல் கருத்துக்களாகத்தான் பலவும் இருக்கின்றன.

யாரிந்த சுரேன் ராகவன் - பாகம் 2 | கெஞ்சாதே 09 2
கலாநிதியை ரொறோண்டோவில் சந்தித்த ஆர்வலர் சிலர்

கூட்டத்தில் சுருக்கமாக ஆனால் விளக்கமாக பேசினார் கலாநிதி சுரேன் ராகவன். ஆளுனராக பணியாற்றிய இந்த எட்டு மாத காலத்தில் தன்னால் செய்ய முடிந்தவற்றை கவனமாகப் பட்டியில் இட்டார்.

இந்த இடத்தில் ஒரு கருத்து. ஆளுனர் என்ற பதவியும் அதிகாரமும் கிட்டியவரால் மற்றைய அரசியல்வாதிகளால் அல்லது எம்பிமார்களால் செய்ய முடியாத விடயங்களை செய்விக்க முடியும் என்பது உண்மை. அதுவும் பலருக்கு நம்மவரில் பலருக்கும் கடுப்பாக இருக்கலாம். ஆளுனர் தான் செய்ததாகச் சொன்ன பல விடயங்கள் எங்கள் எம்பிமார் அரசாங்கத்தைக் கேட்டிருந்தால் நடந்திருக்குமோ? சந்தேகம்தான்.

“நாமெல்லாம் வடக்கு கிழக்கு மாகாணங்களில் பேரன்பு கொண்டவர்கள். எங்களைவிட கரிசனை கொண்டவர்கள் வேறு யாரும் கிடையாது” என்று நினைக்கும் ரகமன்றோ நாம்.. நம்மிடமே வட மாகாண ஆளுனர் போட்டாரே ஒரு போடு: “சொல்லுங்கோ.. வடமாகாணத்தின் சனத்தொகை எவ்வளவு?’ “இதில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் வசிப்பவர்கள் எத்தனை பேர்?”

இப்படி வட மாகாண ஆளுனர் கேட்டபோது, யாரும் பதிலளிக்கவில்லை. சத்தியமாக அங்கிருந்த எங்களில் பலருக்கும் பதில் தெரியவில்லை. எனக்கும்தான். “இதுதானடாப்பா எங்கட தாயகம் குறித்த எங்கட அறிவு” என்று எனக்கு வெட்கமாக இருந்தது.. அதுசரி.. அங்கு வராதவர்களாக இருக்கும் உங்களுக்காவது தெரியுமா?

போலித்தனமில்லாத பேச்சாக இருந்தது அவரது பேச்சு. தனக்கு ஆளுனராக கிடைத்த வாய்ப்பு கடவுளின் செயல்தான் என்றார். நமது தமிழ்ச் சமூகத்தில் இருக்கும் பல ‘கள்ளங்களை’ (அரசியல்) வெளிப்படையாக விமர்சனத்திற்கு வைத்தார். தொழில் முனைவர்கள் ஈழநிலப் பகுதியில் தொழில்களை ஆரம்பிக்க தன்னால் செய்யப்பட்டிருக்கும் வசதிகளைப் புரிய வைத்தார். ஆளுனர் என்ற பதவியை வைத்து தன்னால் நிறைவேற்ற முடிந்த ஒரு சிலவற்றை சொன்னார்.

போலிஸ் படையில் தமிழர்கள் சேர்வதற்கு இருந்த தடைகளை தன்னால் எப்படி எடுக்க முடிந்தது பற்றியும் சொன்னார். தனது முன்மொழிவுகளுக்குப் பிறகு, இப்போதுதான் தமிழர்கள் போலிஸ் படையில் ஆர்வத்துடன் சேர்கிறார்கள் என்றார். “எங்கட தாயையும் தங்கச்சியையும் காப்பாத்திறதுக்கு வெளியில் இருந்து ஒருத்தனா வரவேண்டும்?” கேட்டாரே ஒரு கேள்வி. நம் மனச்சாட்சி உலுங்கியது.

இலங்கையில் வீதிப்போக்குவரத்து குற்றங்களுக்கு தரப்படும் குற்றப்பத்திரம் 1951இலிருந்து சிங்களத்தில் மட்டும்தான் இருக்குமாம். தானறியாச் சிங்களம் தன் பிடரிக்குச் சேதமன்றோ.. இதை ஒரு பிரச்சனையாக எடுத்து, குற்றப்பத்திரமானது 3 மொழிகளிலும் இருக்குமாறு ஒரு ஆளுனராக அரசாங்கத்தை வலியுறுத்திக் கேட்டு, தரவைக்க தன்னால் முடிந்தது என்றார்.

இளமையில் தான் எதிர் கொண்ட சவால்களைச் சொன்னார். புலமைப்பரிசில் பெற்று லண்டன் சென்று படித்ததை… (இளமைக்காலத்தில் தான் பட்டினியோடு படிக்க சென்றதையும் தனது ஆசிரியர்கள்தான் அவரது பட்டினியை போக்க உணவு தந்தார்களாம். அதனால் வளர்ந்ததும் தானும் ஒரு ஆசிரியராகவேண்டும் என்று ஆசைப்பட்டாராம்.) தான் ஆளுனராகி பொதுவாழ்க்ககைக்கு வந்த கதையை சுவாரஸ்யமாகச் சொன்னார். இன்று 60,000 ரூபா சம்பளம் வாங்கும் ஆளுனரான தன்னைச் சுற்றி மொத்தமாக 6 லட்சம் ரூபா சம்பளம் வாங்கும் ஒரு அணி பாதுகாக்கிறது என்ற அபத்தத்தை சொல்லிச் சிரித்தார்.

சாதாரண பாமர மக்களுக்கு உதவுவதுதான் தன் கடமை என்பதை அடிக்கடி சொன்னார். “என்னைப்போல இன்னும் எத்தனையோ ராகவன்கள் அவர்களுள் இருப்பார்கள். அவர்கள் முன்னேற வேண்டும்.” “இலங்கையின் முதல் வருமானம் என்ன? தேயிலையா.. இல்லை.. வெளிநாட்டிலிருந்து அனுப்பப்படும் பணம்தான் முதல் வருமானம். அது 7 பில்லியன் அமெரிக்கன் டொலர். அதில் 40 வீதம் வடமாகாணத்திற்கு வரும் பணம்.” என்றார்.

எமது தேசம் நான்கு இராணுவங்கள் நடந்து சென்று கண்ணீரும் இரத்தமும் இன்னும் தேங்கிக் கிடக்கிற ஒரு தேசமாக இருக்கிறது. நாங்கள் மீண்டு எழும்பவேண்டிய ஒரு தேசம்.. மீண்டும் எழும்பும் தேசம்

வடமாகாண ஆளுனர் கலாநிதி சுரேன் ராகவன்

அடுத்து நிதி, நீர், நிலம்… குறுகிய காலத்தில், தனது வழிகாட்டலில் கூட்டுறவு வங்கி முறை ஒன்றை வடமாகாணத்தில் வெற்றிகரமாக நடத்தி வருவதை விளக்கினார் (நிதி). வட மாகாணத்தில் ஏற்படப்போகும் தண்ணீர்ப் பற்றாக்குறையை அறவே தவிர்த்துவிட தன்னால் எடுக்கப்படும் திட்டங்களை விபரித்தார். (நீர்). இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட பொதுமக்களின் காணிகளை தனது நேரடித் தலையீட்டின் கீழ், வழிகாட்டலில் எப்படி விடுவித்திருக்கிறார்கள் என்பதை புள்ளிவிபரத்தோடு சொன்னார் (நிலம்). “நிதி நீர் நிலம்… இது போதாது… மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்.” என்று சொன்னபோது வந்திருந்தவர்கள் தம்மையறியாது கரவொலி எழுப்பினர். விடுவிக்கப்பட்ட நிலங்கள், அதில் தன்னால் ஆற்றப்பட்ட பங்கு குறித்தும் சொன்னார். இது வெளியே தெரியாத விடயம். காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்த யதார்த்தமான ‘தெளிவு’ அவரிடம் இருந்தது.

அரசியல் பேசினார்தான். ஆனால் அது ஆன்மீக அரசியலாக இருந்தது. “எமது தேசம் நான்கு இராணுவங்கள் நடந்து சென்று கண்ணீரும் இரத்தமும் இன்னும் தேங்கிக் கிடக்கிற ஒரு தேசமாக இருக்கிறது. நாங்கள் மீண்டு எழும்பவேண்டிய ஒரு தேசம்.. மீண்டும் எழும்பும் தேசம்.” என்று சொல்லும்போது அவரது குரல் உடைந்தது. கண்ணீர்? அது அரசியல்வாதியின் போலிக் கண்ணீர் அல்ல.

ஒரு ஏழைத் தந்தையின் மகனாக வளர்ந்தவர் அவர். அவரிடம் பொய்மை இருக்காது என்றே நம்ப இடம் உண்டு. விருப்பு வெறுப்பற்றுப் பார்த்தால் குறுகிய காலத்தில் அவர் வடமாகாணத்திற்குச் செய்திருப்பது மிக அதிகம். உண்மையில் 13ம் சட்ட திருத்தம் என்ன செய்ய வேண்டும் என வரையப்பட்டதோ அவற்றைத்தான் இந்த ஆளுனர் தனக்குத் தரப்பட்ட வரையறைக்குள் நின்று வாய்ப்புக்களை வீணாக்காமல் செய்கிறார் என்றே நான் புரிந்து கொள்கிறேன்.

ஆளுனர் என்ற அதிகாரமும், அவரை ஆளுனராக நியமித்த ஜனாதிபதியின் ஆசீர்வாதமும் இருப்பதால் அவரால் இவற்றைச் செய்ய முடிகிறது என்று சொல்பவர்கள் நிச்சயம் இருப்பார்கள். அதுவும் உண்மைதான். ராஜிவ் காந்தியின் ஒப்பந்தம் என் மனதில் எழுப்பிய நேர்மறை அதிர்வலைகளுக்கு ஒத்த அதிர்வுகளை ராகவன் சுரேந்திரன் தனது திட்டங்களை விபரித்தபோது நான் உணர்ந்தேன். 

இதனாலேயே வடமாகாணத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் கலாநிதி சுரேன் ராகவன்மீது பொறாமைக் காய்ச்சலில் நிச்சயம் இருப்பார்கள். பாராளுமன்ற உறுப்பினர்களான தம்மால் செய்ய முடியாத விடயங்களை இந்த ஆள் சும்மா சுலபமாகச் செய்கிறாரே என்ற பொறாமை நிச்சயம் அவர்களிடம் இருக்காமல் போகாது. அதாவது ஆளுனரின் செயல்பாடுகள் குறித்த விமர்சனங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் இல்லாமல் இருக்காது. டக்ளஸ் குழுவும் அவ்வாறே…

சிந்தித்துப் பார்த்தால் வட மாகாணத்தில் வாழும் 13 லட்சம் மக்கள் (1.3 மில்லியன் பேர்) அல்லது யாழ்ப்பாணக் குடாநாட்டில் வாழும் 6 லட்சத்து நாற்பதினாயிரத்து (6,40,000) மக்களுக்கான ஆளுனர் அவர். எமது விமர்சனங்களுக்கான ஆள் அவரல்ல – நாம்தான்! இந்தக் காலகட்டத்தில் எமக்கான ஆளுனராயிருக்கப் பொருத்தமானவர் இவர்.

ஒருவேளை இவர் பதவிக்காலம் வடமாகாணத்தில் முடிந்ததும் வேறு மாகாணங்களுக்கு சேவையாற்ற அவரை அடுத்த ஜனாதிபதி பணித்துவிடலாம். அது வட மாகாணத்திற்கு ஒரு இழப்பு என்றே நான் அடித்துச் சொல்வேன். கலாநிதி சுரேன் ராகவன் ஒரு கல்விமான். படித்தவர். மும்மொழியிலும் புலமை இருக்கிறது, இனங்களின் வாழ்வியல் தெரிந்திருக்கிறது. குறிப்பாக தமிழில், தமிழர் வாழ்க்கையில், தமிழ் அடித்தள மக்களின் முன்னேற்றத்தில் ஆர்வம் இருக்கிறது. போர்க்குற்றம், கட்சி அரசியல், இயக்க அரசியல் சிக்கல்களுள் இல்லாதவர் அவர்.

ஒரு காலத்தில் இலங்கையின் ஜனாதிபதியாக வர மிகப் பொருத்தமானவர் கலாநிதி சுரேன் ராகவன்!

(தொடரும்.)

Print Friendly, PDF & Email