யாழ்ப்பாணத்தில் இதுவரை 4 பேருக்கு மலேரியா தொற்று காணப்பட்டுள்ளது
ஆபிரிக்காவிலிருந்து திரும்புபவர்களால் நோய் கொண்டுவரப்படுகிறது
யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் மேலுமொரு நோயாளிக்கு மலேரியா தொற்று இருப்பதாக வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் டாக்டர் எஸ்.ஜமுனாநந்தன் தெரிவித்துள்ளார். இத்தோடு, யாழ்ப்பாணத்தில் மொத்தம் 4 பேருக்கு மலேரியா நோய் தொற்றியுள்ளதாகவும் இஅவர்கள் அனைவருமே சமீபத்தில் ஆபிரிக்க நாடொன்றிலிருந்து திரும்பியிருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந் நோயாளிகளில் கண்டுபிடிக்கப்பட்ட மலேரியா வகை பிளாஸ்மோடியம் ஃபல்சிபாரம் என்ற ஒருவகை ஒட்டுண்ணி கிருமியால் காவப்படுவதாகவும் மனிதரில் அதிகம் உயிராபத்தை விளைவிக்கக்கூடிய கிருமி வகை இதுவெனவும் அறியப்படுகிறது. காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு வரும் அனைத்து நோயாளிகளிலும் இப்போது மலேரிய நோய்க்கான பரிசோதனைகள் செய்யப்படுவதாக டாக்டர் ஜமுனாநந்தன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இறுதியாக அறியப்பட்ட மலேரியாத் தொற்று அக்டோபர் 2012 இல் ஆகும். 2016 இல் ,இலங்கையிலிருந்து மலேரியா முற்றாக ஒழிக்கப்பட்டுவிட்டது என உலக சுகாதார நிறுவனம் உத்தியோகபூர்வ அங்கீகாரத்தை வழங்கியிருந்தது. வருடமொன்றுக்கு 30 முதல் 50 வரை மலேரியா தொற்றாளர்கள் இலங்கையில் அடையாளம் காணப்படுவது வழக்கமெனவும் அவர்கள் அனைவரும் பொதுவாக ஆபிரிக்கா போன்ற மலேரியா தொற்றுள்ள நாடுகளுக்குச் சென்று திரும்புபவர்களாக இருப்பது வழக்கமெனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 2020-2021 இல் கோவிட் பயணக் கட்டுப்பாடு காரணமாக தொற்றாளர் தொகை வெகுவாகக் குறைந்திருந்தது எனக் கூறப்படுகிறது. 2021 இல் காணப்பட்ட 25 தொற்றாளர்களில் 24 பேர் ஆபிரிக்காவிற்குச் சென்று வந்தவர்கள் என அறியப்படுகிறது.
அதே வேளை, சண்டிலிப்பாய் மருத்துவ அதிகாரி பகுதியில், சுகாதார அமைச்சு மலேரியா தடுப்பு நடவடிக்கைகளைஆரம்பித்துள்ளதாகவும் இதற்காக கொழும்பிலிருந்து விசேட மலேரியா கண்காணிப்புக்குழு சென்ற வாரம் யாழ்ப்பாணம் சென்றிருக்கிறது எனவும் மலேரியா நோயெதிர்ப்பு இயக்கப் பணிப்பாளர் டாக்டர் பிரசாத் ரணவீரா தெரிவித்துள்ளார்.
பொதுவாக தொற்றாளர்கள் காணப்படும் இடங்களிலுள்ள நுளம்புகளை அழிப்பதன் மூலம் நோய்ப்பரவலைத் தாம் தடுக்கக்கூடியதாக உள்ளதாகவும் தற்போது யாழ்ப்பாணத்தில் பரந்த அளவிலான நுளம்பொழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் டாக்டர் ரணவீரா மேலும் தெரிவித்துள்ளார்.