Spread the love

1 பில்லியன் ரூபா நட்டஈடு கோருகிறார்

கொழும்பு, ஜூன் 15, 2020: சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான திட்டத்தின் (International Truth and Justice Project (ITJP)) மீதும் அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா மீதும், இலங்கை உளவுத்துறைப் பணிப்பாளர் மேஜர் கெனெரல் சுரேஷ் சாலே மானநட்ட வழக்குக்கான அறிவித்தல் ஒன்றை, சாலேயின் சட்டத்தரணி பசான் வீரசிங்க, யஸ்மின் சூக்காவிற்கும் அவரது நிறுவனத்திற்கும் அநுனுப்பி வைத்துள்ளார்.

ஜூன் 1, 2020 அன்று யஸ்மின் சூக்கா வெளியிட்ட ஊடகங்களுக்கான அறிக்கையில் மேஜர் ஜெனெரல் சாலே மீது பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார். இவ்வறிக்கை ITJP யின் இலங்கைக்கான இணையத்தளத்தில் வெளியிடப்பட்டிருந்தது.



இதில் கூறப்பட்ட பல குற்றச்சாட்டுகள் பல ஜெனெரல் சாலே மீது அவதூறுகளை முன்வைப்பதாகவும் இதனால் பல சாதனைகளைச் செய்தும், பல விருதுகளையும் பெற்ற அவரது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது சட்டத்தரணி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அவரது நற்பெயருக்கு இக் குற்றச்சாட்டுகள் களங்கம் விளைவித்ததால் செல்வி சூக்காவும், அவரது நிறுவனமான ITJP யும் 1 பில்லியன் இலங்கை ரூபாய்களை நட்டஈடாகத் தரவேண்டுமென, சாலே சார்பில் அவரது சட்டத்தரணி அனுப்பிய கடிதத்தின் மூலம் கோரப்பட்டுள்ளது.

அத்தோடு, யஸ்மின் சூக்காவும் அவரது நிறுவனமும், இனி மேலும் ஜெனெரல் சாலே மீது அவதூறுகளைப் பரப்புவதை நிறுத்தும்படியும் அக் கடிதத்தில் கேட்கப்பட்டுள்ளது. இக் கோரிக்கைகளுக்கு சூக்காவும் அவரது நிறுவனமும் இணங்காத பட்சத்தில் அவர் மீது சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகள் பதியப்படும் என அக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

2009 போரின் முடிவைத் தொடர்ந்து, தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்காலில் பணியாற்றிய மருத்துவர் ஒருவருக்கு சிகிச்சை மறுப்பு, மற்றும் மிரட்டல் மூலம் அவரைப் பொய்ச் சாட்சியம் வழங்கும்படி சாலே வற்புறுத்தியிருந்தார் என சூக்கா தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார்.


Print Friendly, PDF & Email
Related:  இலங்கை தேர்தல்கள் | பிந்திய செய்திகள்: த.தே.கூட்டமைப்புக்கு 15-19 ஆசனங்கள் வரை கிடைக்கலாம்?