Columnsசிவதாசன்

யப்பானில் நேட்டோ: மூன்றாம் போருக்கான முதற்படி?

சிவதாசன்

நேட்டோ (NATO) அமைப்பின் தொடர்பாடல் அலுவலகமொன்றை திறக்க யப்பான் தயாராகுவதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இது நடைபெறுமாகில் ஆசிய பிராந்தியத்திலான நேட்டோவின் விரிவாக்கம் இங்குதான் ஆரம்பிக்கும். யூக்கிரெய்ன் போரின் விளைவாக மீளொழுங்குக்குள்ளாகும் உலகின் மிக முக்கியமான சதுரங்க அசைவு இது. யப்பானை நேட்டோ அங்கத்தவராக்கும் முயற்சியின் முதற்படி.

இரண்டாம் உலகப் போருக்குப் பின் மேற்கு ஐரோப்பாவைப் பாதுகாக்கவென ஏப்ரல் 4, 1949 இல் ஆரம்பிக்கப்பட்டது இந்த நேட்டோ எனப்படும் வட அத்லாந்திக் ஒப்பந்த அமைப்பு. அப்போது இது ‘வாஷிங்டன் ஒப்பந்தம்’ எனவும் அழைக்கப்பட்டது. ஆரம்பத்தில் இவ்வமைப்பில் பிரித்தானியா, பிரான்ஸ், நெதெர்லாந்து, பெல்ஜியம், லக்ஸம்பேர்க் ஆகியவே அங்கத்துவ நாடுகளாக இருந்தன. இரண்டாம் உலகப் போரில் ஜேர்மனியைத் தோற்கடிக்க ஸ்டாலினின் சோவியத் படைகள் பெருமுதவி செய்தன. இருந்தும் மேற்கு , சோவியத் குடியரசைத் தொடர்ந்து எதிரியாகவே கணித்து வந்தது. சோவியத் குடியரசின் தாக்குதலைச் சமாளிக்க நேட்டோ நாடுகளால் இயலாது என்ற காரணங்களைக் கூறிக்கொண்டு அமெரிக்காவும் கனடாவும் அவ்வருடமே நேட்டோவில் இணைந்தன. இப்போது அதில் 30 நாடுகள் அங்கம் வகிக்கின்றன.

1991 இல் கோர்பச்சேவின் தலைமையில் சோவியத் குடியரசு உடைத்துத் தகர்க்கப்பட்டபோது நேட்டோவின் தேவை இனி இல்லை எனவும் கிழக்கு ஜேர்மனியைத் தாண்டி நேட்டோ விரிவாக்கம் மேற்கொள்ளப்படமாட்டாது எனவும் உத்தரவாதம் வழங்கப்பட்டது. அமெரிக்கா தலைமையிலான மேற்கு அதைக் கைவிட்டதுமல்லாமல் இப்போது ரஸ்யாவின் எல்லைகளில் நேட்டோ கொடிகளைப் பறக்கவும் விட்டிருக்கிறது. யூக்கிரெய்ன் போர் இவ்விரிவாக்கத்தின் ஒரு அம்சம்.

ரஸ்ய அதிபர் புட்டினின் தலைமையில் ரஸ்யா நேட்டோ நாடுகளின் ஆகிரமிப்பு நகர்வுகளைத் தீவிரமாக எதிர்த்து வருகிறது. ரஸ்யாவை மீண்டும் ஒரு அணுவாயுத வல்லரசாக உருவாக்கும் முயற்சியில் அவர் இறங்கியிருக்கிறார். இப்போராட்டத்தில் அவரது பலம் போதாமையால் சீனா உட்பட இதர பிராந்திய ‘வல்லரசுகளை’த் தன்பக்கம் இழுத்ததுமல்லாமல் அமெரிக்காவின் உடுக்குகளுக்குக் கலையாடிக்கொண்டிருந்த பல நாடுகளையும் கொஞ்சம் கொஞ்சமாகத் தன்பக்கம் இழுத்து வருகிறது. 12 வருடங்களாக விலக்கி வைக்கப்பட்டிருந்த சிரியாவை மீண்டும் அரபுலகம் தன்னுடன் அணைத்திருக்கிறது. ஈரான் போன்ற ஷியா நாடுகளுக்கும் சவூதி அரேபியா போன்ற சுனி நாடுகளுக்குமிடையே புரிந்துணர்வை ஏற்படுத்தியிருக்கிறது. ஆபிரிக்க நாடுகள் அமெரிக்கத் தளையிலிருந்தும் தம்மை விடுவித்துக்கொண்டிருக்கின்றன. சீனாவின் உதவியுடன் புட்டின் ஆடும் இச்சதுரங்க ஆட்டத்தில் அமெரிக்கா தோற்றுப்போவதற்கான அறிகுறிகளே தெரிகின்றன.

இரண்டாம் உலகப் போரில் யப்பானியப்படைகள் ஜேர்மானியப்படைகளுடன் இணைந்து போரிட்டதற்கான தண்டனையாக ‘இனிமேல் ஆயுதங்களை ஏந்த முடியாது’ என அணுவாயுதக் கயிறுகள் மூலம் அதன் கைகள் கட்டப்பட்டது. இப்போது ‘உன் பரம்பரை எதிரியான சீனாவை நீயே எதிர்கொள்ள வேண்டும்’ எனக்கூறி அக் கட்டுக்கள் நீக்கப்படுகின்றன.விரும்பியிருந்தால் யப்பானை ஒரு அணுவாயுத வல்லரசாக மாற்ற அமெரிக்காவினால் முடியும். ஆனால் யப்பானை நம்ப அது தயாராகவில்லை. எனவே தான் நேட்டோவை அந்த மண்ணில் இருத்தப் போகிறது.

யப்பானில் நேட்டோவின் நிலைகொள்ளல் வெறும் சம்பிரதாயமான ஒன்றல்ல. இது ஒரு நீண்டகால அணுகுமுறை. இதர ஆசிய நாடுகளைத் தன் பொருளாதார அடிமைகளாக ஆக்கிய பின்னர் அந்நாடுகளிலும் படிப்படியாக நேட்டோவை நிலைகொள்ளச் செய்து உலகத்தை மீண்டும் ஒரு துருவ ஒழுங்கிற்குள் கொண்டுவருவதே அமெரிக்காவின் நோக்கம்.

சீனா குறித்த அமெரிக்காவின் பயம் நியாயமானது. கம்யூனிச சித்தாந்தத்தைக் கொண்டு தனது மக்களின் சுதந்திரத்தை மறுத்துக்கொண்டு அதே வேளை ஜனநாயக நாடுகளின் சந்தைகளை ஆக்கிரமிக்க அது நினைப்பது தவறு. ஆனால் சீனாவின் மலிவான பண்டங்களினாலும், தனது இலாபத்தை அதிகரிப்பதற்காக அங்கு தனது ஆலைகளைப் பரப்பியதனாலும் சீசாவுக்குள் அடைபட்டிருந்த சீனா என்ற பூதத்தை விடுவித்தது அமெரிக்கா தான். இப்போது அப்பூதத்தை மீண்டும் சீசாவுக்குள் அடைக்க அமெரிக்கா முயல்கிறது. அது இயலுமான காரியமல்ல.

உலகமயமாக்கல் என்ற பெயரில் எல்லைகள் தகர்க்கப்பட்டமை ஒரு வரலாற்றுப் பரிமாணம். மலிவான கூலியும், தீர்வையற்ற சந்தைகளுமே இந்த உலகமயமாக்கலின் நோக்கம். ஆனால் உண்மையான உலகமயமாக்கல் இணையம் என்ற பெயரில் பின்னாளில் வந்தபோதுதான் முதலில் பல்லிளித்துக்கொண்டு வந்த ‘உலகமயமாக்கல்’ ஒரு போலி என்பதை உலகம் அறிந்தது. இப்போது பண்டங்களல்ல அறிவு மட்டுமே எல்லைகளைக் கடந்து வியாபித்து நிற்கிறது. இதனால் விழித்துக்கொண்ட முதல் நாடுகள் இந்தியாவும் சீனாவும். இந்தியா அறிவை ஏற்றுமதி செய்தது. சீனா பண்டங்களை ஏற்றுமதி செய்தது. இன்று அமெரிக்காவும் ஐரோப்பாவும் இந்திய, சீன அறிவுப் பண்டங்களால் நிரம்பி வழிகின்றன. ஒன்றில்லை இரண்டு பூதங்கள் ஏககாலத்தில் வெளியே வந்துவிட்டன.

சீன, ரஸ்ய அணுகுமுறைகளுக்கும் அமெரிக்க, ஐரோப்பிய அணுகுமுறைகளுக்கும் பாரிய வேறுபாடுண்டு. முன்னவை பின்னால் குத்துவதில்லை, பின்னவைக்கு பின்னால் குத்துவதற்கு மட்டுமே தெரியும். யப்பானிய நேட்டோவின் இருப்பு யப்பானைப் பாதுகாக்கவல்ல என்பது யப்பானுக்கும் தெரியும். ஆனால் கத்தி பின்னால் இருக்கிறபடியால் அது சிரித்துக்காட்டவேண்டியிருக்கிறது. இது அமெரிக்காவின் உலக ஆதிக்கத்துக்கான நகர்வே தவிர யப்பானின் நகர்வல்ல என்றே எண்ணவேண்டியிருக்கிறது.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஜோ பைடனின் ஆட்சியே மிகவும் உக்கிரமான போர்வெறியைக் கொண்டது. ஜோர்ஜ் டபிள்யூ புஷ் வாகனத்தில் இருந்தவர் மட்டுமே. ஓட்டிகள் வேறு. ஆனால் இப்போது மட்டுமல்ல ஒபாமா நிர்வாகத்தின்போதும் பைடனே ஓட்டி. கொரிய குடாவில் அமெரிக்காவின் அணுவாயுதம் நிலைபெறவேண்டுமென்பதே அவரது கனவு. இதன் மூலம் வடகொரியா மட்டுமல்ல சீனாவின் தென்னாசிய ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தலாம் என்பதுவே அவரது நோக்கம். தென் கொரியா, பிலிப்பைன்ஸ், யப்பான், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளுடன் ‘ஒப்பந்தங்களைச்’ செய்வதன் மூலம் இராணுவ ஒற்று விடயங்கள், தளபாடங்களைக் கையாள்தல், நடவடிக்கைகளின்போது ஆதரவு தருதல் என இப்பிராந்தியத்தையும் ஒரு ‘யூக்கிரெய்ன்’ ஆக்குவதே பைடனின் நோக்கம். சீனா தாய்வானைக் கைப்பற்ற முயற்சிக்குமானால் இப்பிராந்தியமே அமெரிக்காவின் தளமாக இயங்கும். அப்போது வடகொரியா தனது வாணவேடிக்கையை ஆரம்பிக்கும். அதுவே மூன்றாம் உலகப்போரின் ஆரம்பமாக இருக்கும்.

யப்பானின் அல்லது அமெரிக்காவின் இந்த நகர்வுக்கு சீனாவின் பதில் என்னவாக இருக்கும்? பதில் தெளிவானது. யூக்கிரெய்ன் போர் ரஸ்யாவை சீனாவை நோக்கி நகர்த்தியது. அமெரிக்கா தலைமையிலான நாடுகள் ரஸ்யா மீது விதித்த பொருளாதாரத் தடைகளை அது உடைத்தெறிந்து ‘பெப்பே’ காட்ட்டியமைக்கு சீனாவே காரணம். சீனா-ரஸ்யா நாடுகளை உண்மையான நணபர்களாக்கியமைக்கு அமெரிக்காதான் காரணம். இப்போது அமெரிக்கா எடுக்கும் நகர்வு சீனாவை ரஸ்யாவை நோக்கி நகர வைக்கப்போகிறது. இதனால் அந்த நட்பு மேலும் இறுகும். தற்போது ரஸ்யாவிடம் மட்டுமே இருக்கும் ஹைப்பர்சோனிக் தொழில்நுட்பம் சீனாவுக்கும் பரிமாறப்படும். ஒலியின் வேகத்தைவிட 7 மடங்கு அதிக வேகத்தில் பறக்கும் இந்த ஹைப்பெர்சோனிக் ஆயுதத்தை விரும்பிய நேரத்தில் விரும்பிய பாதைக்கு மாற்றிக்கொள்ள முடியும். இதை முறியடிக்க இன்னும் அமெரிக்காவிடம் இன்னும் மருந்தில்லை. எனவே தாய்வானை மையமாகக் கொண்டு ஆரம்பிக்கும் போரில் சீனாவுக்கே வெற்றி என்பதில் இரண்டாம் கருத்தில்லை.

மோடியின் ஆட்சியில் இந்திய-சீன உறவு பலமடைந்திருக்கிறது. விருப்பமோ விருப்பமில்லையோ மோடி பூச்சாண்டிகளுக்கு அஞ்சாதவர். பிராந்திய யதார்த்தத்தைப் புரிந்து வைத்திருப்பவர். இரு துருவ ஒழுங்கை விரும்புபவர். ஆசிய-பசிபிக் பிராந்திய நலன்களுக்கு முன்னுரிமை கொடுப்பவர். எனவே யப்பானில் அமெரிக்காவின் நிலைகொள்ளலுக்கு அவர் ஆதரவு தரமாட்டார் எனவே நம்பலாம். இதே வேளை லாவோஸ், கம்போடியா, மியன்மார், மலேசியா, இந்தோனேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய ‘ஆசியான்’ நாடுகள் நடுநிலைமை வகிக்க இந்தியா உதவி செய்யும். இந்நாடுகளின் சந்தையாக இந்தியா இருந்தாலே போதும். எனவே சீனாவின் பிராந்திய பலம் இராணுவ ரீதியில் மட்டுமல்ல அரசியல், பொருளாதார ரீதியிலும் அதிகரிக்க வாய்ப்புண்டு. அதே வேளை பிலிப்பைன்ஸில், மார்க்கோஸ் (யூனியர்) தனது வருகைக்குக் காரணமான அமெரிக்கா பக்கமே சாய்வார். எனவே நேட்டோவின் அடுத்த பார்வை பிலிப்பைன்ஸ் மீது தான். பிலிப்பைன்ஸில் எப்போது அடுத்த மக்கள் எழுச்சி வருமெனக் கூறமுடியாது. எனவே நேட்டோ தனது விரிவாக்கத்தைக் கடுகதியில் முன்னெடுக்கும். தென் சீனக்கடலில் அமெரிக்க நீர்மூழ்கிகளும், நாசகாரிக் கப்பல்களும் நடமாட பிலிப்பைன்ஸ் மட்டுமே வழிசமைத்துக் கொடுக்கும்.

அடுத்த தேர்தலில் பைடன் தெரிவாக வேண்டுமாகில் அவருக்கு போரொன்று வேண்டும். அதற்கான பறைகளை அடிப்பதற்கு ஊடகங்கள் எப்போதுமே தயார். சீனாவுடனான பொருதலுக்கு அவர் தயார். இதற்காக அவர் யூக்கிரெய்னைக் கைவிடவும் தயங்க மாட்டார். போப்பாண்டவர் மூலமோ, கிஸிங்கர் மூலமோ கிரிமியா இல்லாத, டொன்பாஸ்க் பிரதேச ஆட்சியுரிமைகளுடன் ஒரு சமரசத்துக்கு செலென்ஸ்கி முட்டாக்குடன் கொண்டுவரப்படுவார். அரசியலில் இதுவெல்லாம் சகஜம்…