மோடீ (Maudie) | பார்க்கவேண்டிய திரைப்படம்


மாயமான்

இரவு 10 மணி. நேற்று, தற்செயலாக தொலைக்காட்சியை நோண்டியபோது எழுத்தோட ஆரம்பித்திருந்தது. ஓடப்போவது ஒரு ஒரு திரைப்படமென்பது தெரிந்தது. இடையில் சிவப்பு பெட்டியில் “இப்படத்தில் வயதுக்கு வந்தோருக்கான காட்சிகள் இடம்பெறலாம்” என எச்சரிக்கை வந்ததும் “ஆஹா, இது என்போன்ற, வயதுக்கு வந்தோருக்கு மட்டும்தானே மற்றவர்கள் தான் பார்க்கக்கூடாது” என வலது இடது பக்கம் பார்த்துவிட்டு சவுண்டையும் குறைத்துவிட்டு ஆயத்தமானேன்.

படத்தின் கதை பற்றி முன்பின் தெரியாமலிருந்தாலும், சிவப்பு பெட்டி போட்டு எச்சரிக்குமளவுக்கு அங்கு ஒரு மண்ணாங்கட்டியுமில்லை என்பது மட்டும் தெளிவாகிவிட்டது. இருந்தாலும் அதில் முக்கிய பாத்திரத்தில் நடித்தவரின் (மோடீ) நடிப்பில் நான் அசந்து போனேன். அப்பெண் (Sally Hawkins) உடலில் எந்தவிதமான happy hormones ஐயும் சுரக்கவைக்ககூடிய தோற்றமும் இல்லை. (sorry Sally, pun intended). ஆனால் என் உடலின் எதிர்பார்ப்புகளை எல்லாம் தூக்கியெறிந்துவிட்டு மனதை முற்று முழுதாக ஆட்கொண்ட அவரது நடிப்பு இறுதி எழுத்தோட்டம் முடிந்த பின்னரும் மனதை நெருடிக்கொண்டிருந்தது.

இப் படம் ஒரு உண்மைக் கதையின் திரைப்பட வடிவம். 1930களில் கனடாவின் நோவா ஸ்கோஷியா மாகாணத்தில் வாழ்ந்த மோட் லூவிஸ் (Maude Lewis) என்ற பெண்ணைப் பற்றியதெனினும், அவரது கணவரும் (Everett Lewis) இக் கதையோட்டத்தில் முக்கிய பங்கை எடுக்கிறார்.

சுமார் 60 வயது மதிக்கக்கூடிய ஒரு பெண் (மோடீ) நடு விரல்களுக்கிடையே பலவந்தமாகத் திணித்த தூரிகை ஒன்றினால், தலையைக் குனிந்தபடி சிறு பிள்ளைகள் வரைவதுபோல மெதுவாக ஓவியம் வரைவதுடன் படம் ஆரம்பிக்கிறது. சுருளுடன் கூடிய அவரது தலைமுடி ஒழுங்கற்ற வகையில் வாரப்பட்டும், வாரப்படாமலும் தோற்றமளிக்கிறது. அவர் தலையை நிமிர்த்தும்போது அவரது முகவாய், கண், நெற்றி, புருவம் அத்தனையும் நடிக்கின்றன. இதயத்தைப் பிடுங்கி எடுக்குமளவுக்கு அவர்மீது பரிதாபம் வருகிறது. ஆம் அவர் ஒரு முடக்குவாத நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவர். சித்திரம் வரைவதில் ஆர்வமுள்ளவர். ஒத்துழைக்க மறுக்கும் விரல்களிடையே பலவந்தமாகச் சிக்கவைக்கப்பட்ட தூரிகைகூட அவருக்காக இரங்கி ஒவியத்தைத் துல்லியமாக வரைகிறது. உணமையான கலஞனைக் கலை ஒருபோதும் கைவிடாது என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்.

மோடியின் வாழ்வை முடக்கிய பல சோதனைகளுள் முடக்குவாதமும் ஒன்று. ஆனால் அதை அவர் பொருட்படுத்தவேயில்லை. அதைவிட அவருக்கு அவரது உறவினர் இழைத்த அநியாயம் பெரியது. பெற்றோர்களை இழந்த அவர் வசதிமிக்க தனது குடும்பவீட்டில் சகோதரனுடனும் ஆன்ரி ஐடாவுடனும் வாழ்கிறார். மோடீயின் உடல் பலவீனம் அவரது நாளாந்த நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தியதில்லை. ஒருநாள் இரவுக் கேளிக்கை நடனமொன்றுக்குச் சென்று வந்ததற்காக ஆன்டி ஐடாவிடம் திட்டு வாங்கியவர்.

எப்படியோ அவர் கர்ப்பம் தரித்துவிடுகிறார். குழந்தையைப் பராமரிக்க அவர் தகுதியற்றவர் எனக்கூறி அக்குழந்தை இறந்துவிட்டது ஆன்டியும் அண்ணனும் கூறிவிடுகிறார்கள். அது மட்டுமல்ல குடும்ப வீட்டை விற்றுவிட்டதாகவும் அண்ணன் கூறிவிடுகிறார்.

ஒருநாள் கடையொன்றில் பொருட்களைப் பார்வையிட்டுக்கொண்டிருந்தபோது அங்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர் தனது வீட்டுக்கு வேலையாள் ஒருவரைத் தேடுவதாகக் கூறி அறிவிப்புப் பலகையில் ஒரு சிறிய விளம்பரத் துண்டை ஒட்டிவிட்டுப் போகிறார். அதை எடுத்துக்கொண்டு அவரது வீட்டுக்குப் போகிறார் மோடீ. நோயின் காரணமாக நடக்க முடியாமல் கால்களை இழுத்துக்கொண்டு நீணட தூரம் சென்று அவ்விளம்பரதாரரின் வீட்டைத் தட்டுகிறார்.



அது சிறியதொரு வீடு. வசதி குறைந்தவர்கள் வாழும் பகுதியில் தனிமையில் இருந்தது. கதவைத் திறந்தவர் ஒரு அசல் முரட்டு மனிதர், எவெறெட் லூவிஸ் (Ethan Hawke). மீன்பிடித் தொழில் செய்பவர்களுக்கு எடுபிடி வேலை செய்பவர். தனியே வாழ்ந்து வருபவர். விளம்பரத்தைப் பார்த்து வேலைக்கு வருவதாக மோடீ கூறுகிறார். ஒழுங்காக ஒரு உரையாடலை மேற்கொள்ள முடியாத, குரூபியான, உடலியக்கம் குறைந்த அவர் பணிப்பெண்ணாக அமர்த்துவதில் வீட்டுக்காரருக்கு விருப்பமில்லை. ஆனாலும் மோடீ அவரை ஒருவாறு சம்மதிக்க வைத்துவிடுகிறார்.

ஏற்ற இறக்கங்களுடனான உறவு தொடர்கிறது. வழ்ங்க மறுக்கும் கைகளினால் நிலத்தைக் கழுவுவது முதல் வீட்டுக் காரருக்கு தேனீர், காலை, மதிய, இரவு உணவுகள் தயாரிப்புதுவரை அவர் இரவு பகலாக உழைக்கிறார். இத்தனைக்கும் அவருக்கு வழங்கப்பட்ட ஊதியம்? உணவும் படுத்துக்கொள்ள இடமும் மட்டும்தான். சீ, ஏனடா இந்தப் படத்தைப் பர்ர்க்கிறேன் என்றாகிவிட்டது. ஆனாலும் அந்த இரண்டு பாத்திரங்களினதும் நடிப்பு றிமோட் கொண்ட்றோல் பக்கம் கையை நகராமல் கட்டிப்போட்டுவிட்டது.

வீட்டுக்காரராக நடித்த ஈதன் ஹோக்கினது நடிப்பு பிரமிக்க வைத்தது. எல்லா முரடர்களுக்குள்ளும் ஒரு இரக்க நரம்பாவது இருக்கும், அதைக் கண்டுபிடிப்பதுதான் சிரமம். அவ்வீட்டில் படுப்பதற்கு ஒரே அறையும், ஒரே கட்டிலும்தான் இருக்கிறது. இருவரும் அருகருகே தூங்குகிறார்கள். அந்த இருவரது முகம்களும் கண்களும் பேசிக்கொள்ளும். அவரது கண்களில் இரக்கமா, கோபமா, பரிதாபமா, விரகமா இருக்கிறது என்பதை என்னால் ஊகிக்க முடியவில்லை. படம் தொடங்கிய போதிலிருந்து அவரது உடல் அந்த முரட்டுத்தன்மையையே காட்டிக்கொண்டிருந்தது.

அந்த வீட்டுக்கு வந்த நாள் முதல் மோடீ தனது சித்திரம் வரைதலை நிறுத்தவில்லை. வீட்டின் அழுக்குப் படிந்த சுவர்கள், கதவுகள், சாளரங்கள் என எல்லாமே ஓவியங்கள் தான். பெரும்பாலும் பூக்கள்தான். வீட்டின் சாளரத்தில் வரையப்பட்ட ஓவியமொன்றைப் பார்த்த ஒரு பெண் மோடீயின் வீட்டுக்கதவைத் தட்டி மோடீயுடன் பேசுகிறார். வசதி படைத்த அப்பெண் மோடீ மீதான இரக்கத்தாலோ அல்லது கலை மீதுகொண்ட ஆர்வத்தாலோ மோடீயின் ஓவியங்கள் சிலவற்றை அதிக விலை கொடுத்து ($5.00) வாங்குகிறார். அப் பணம் முழுவதையும் மோடீ வீட்டுக்காரரிடம் கொடுத்துவிடுவார் அல்லது அவராகப் பறித்துவிடுவார். ஒரு தருணத்தில் வீட்டுக்காரரின் நண்பர் ஒருவரோடு சிரித்துப் பேசியமைக்காக மோடீயை அறைந்தும் விடுகிறார். இருப்பினும் மோடீ அங்கேயே இருந்தார். வீட்டுக்காரருக்குத் தொடர்ந்தும் பணிவிடைகளைச் செய்தார். ஓவியத்துக்கு கிராக்கி அதிகரித்தது. வெளியில் விளம்பரப்பலகையைப் போட்டு ஓவியங்கள் விற்பனையாகின. அப்போதுதான் லூவிஸ் – மோடீ உறவில் ஒரு சமத்துவம் தெரிய ஆரம்பிக்கிறது. மோடீ வீட்டுக்காரரின் மனத்தை வென்றிருப்பது தெரிந்தது. அது எப்படிச் சாத்தியமானது? அந்தக் கல்லுக்குள் ஈரம் எப்படி வந்தது? அந்த மர்மம் பிடிபடவில்லை. மோடீய

குடும்ப அந்தஸ்து கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்தது. பழைய வாகனம் புதியதாகியது.. லூவிஸின் நண்பரும் (மோடீக்கு அடிவாங்கிக் கொடுத்த அவர் தான்) மனைவியும், தோழன் தோழிகளாகக்கொண்டு திருமணம் – ஏழைகளின் தரத்தில் – நிறைவேறுகிறது. திருமண உடையில் (சல்வேசன் ஆமியில் விற்கப்படும் பழைய உடைகள் தரம்) மோடீ உச்ச மகிழ்ச்சியுடன் மிகுந்த சிரமத்தின் மத்தியில் சிரிக்க முற்படுவதைப் பார்க்க நெஞ்சம் பிய்த்துக்கொண்டு போகிறது.

இப் படம் ஏன் என்னை ஈர்த்தது என்பதற்கான மர்மம் எனக்கு இப்போது துலங்கத் தொடங்கியது.. வேறென்ன நம்ம தமிழ்ப் படங்களின் வாடை அங்கிங்குமாக அடிக்கத் தொடங்கியது. ஆன்டி ஐடாவுக்குச் சுகவீனம் என்று பார்க்கப் போகிறார் மோடீ. அப்போதுதான் குற்றமனப்பான்மை வருத்த ஆன்டி ஐடா சொல்கிறார் ” உனது குழந்தை சாகவில்லை. உயிரோடு தான் இருக்கிறார். பணத்துக்காக உனது அண்ணன் அவளைத் தத்துக்கொடுத்து விட்டான்” என்று உண்மையைக் கூறிவிடுகிறார்.

மனம் சிதறிப்போன மோடீயை அழைத்துக்கொண்டு கணவர் மோடீயின் மகள் வளரும் வீட்டிற்கு செந்ற இருவரும், சற்றுத் தூரத்தில் வாகனத்தை நிறுத்தி அவ்வீட்டின் கதவுகளைப் பார்க்கிறார்கள். அந்த வசதியான வீட்டிலிருந்து ஒரு அழகான இளங்குமரி வெளியே வருகிறாள். மோடீ உடைந்து போகிறார். அசல் தமிழ்ப்படக் கதை தான் என்றாலும் நடிப்பில் அது தமிழ்ப்படமேயில்லை. கத்திக் குளறி, நெஞ்சிலடிக்கும் காட்சிகள் எதுவுமில்லை. முரட்டுக் கணவரின் கண்களில் சற்று இரக்கம் தெரிந்தது.



என்ன இருந்தாலும், கதையில் இடைக்கிடை ருவிஸ்ட் என்று ஒன்று வரத்தானே வேண்டும். கல்யாணம் கட்டிச் சில வருடங்களில் வரும் அதே வியாதிதான். கணவன் மனைவியிடையே வாக்குவாதம், சண்டை (நம்மாட்கள் சொலவது போல ‘கண்பட்டுப் போச்சு’). இருவரும் பிரிகிறார்கள். போக்கிடமின்றி முன்னொரு நாள் மோடீயிடம் ஓவியங்களை வாங்கியவரது வீட்டில் தஞ்சமடைகிறார் மோடீ. மீண்டும் தமிழ்ப் படம் தான். Relationship therapist அப்படி இப்படியென்று இல்லாத காலமது. அல்லது அப்படியானவர்களுகுப் பணம் கொடுக்க வசதியில்லை என்பதாகவும் இருக்கலாம். குடும்பம் நிரந்தரமாகப் பிரியாமல் தப்பிக்கொள்கிறது. தம்பதிகள் மீண்டும் சேர்கிறார்கள்.

மீண்டும் தமிழ்ப்படம். ஒருநாள் மோடீ விறகு காவிக்கொண்டு வருகையில் பனிக்குள் விழுந்துவிடுகிறார். டாக்டர் பெரிய பையைக் காவிக்கொண்டு வருகிறார். நீ புகைப்பதை நிறுத்தவேண்டும் என்று ஒரு வியாதியையும் கூறி எச்சரித்துச் செல்கிறார். உடல் ஒத்துழைப்பதை மறுக்க ஆரம்பித்திருந்தது. அப்படியிருந்தும் முடக்கப்பட்ட அவ்விரல்கள் தூரிகையை இறுகப்படித்தபடி பிசகாமல் ஓவியத்தை வரந்தன. பிறிதொருநாள் ஓவியம் வரைந்துகொண்டிருந்தபோது ஒரு இருமல் /ஓங்காளிப்பு வந்தது. அவரைத் தூக்கி வாகனத்தில் ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு விரைகிறார் லூவிஸ். அப்போதுதான் முதல் தடவையாக அந்தக் கல்லுக்குள் இருந்து வெளிப்பட்ட ஈரத்தை நான் பார்த்தேன். மருத்துவமனையில் கட்டிலில் படுத்திருக்கும் மோடீக்கு அருகில் இருந்தபோது அவர் நடித்தாரென நான் நினைக்கவில்லை. மருத்துவமனைக்கு ஒன்றாகத் தம்பதிகளாகப் போன அவர் தனியாக வீட்டுக்குத் திரும்பி வருகிறார். மோடீ இறக்குமுன்னர் கணவருக்குக் கூறியது, தமிழ்ப் படங்களில் போல “I love you” என்றல்ல. மாறாக ” I was loved”. அந்தக் கல்லுக்குள்ளும் அப்படி ஒரு ஈரம் இருந்ததை அவரால் மட்டுமே அறிய முடிந்தது.

கதை நோவா ஸ்கோஷியாவைத் தளமாகக் கொண்டிருந்தாலும் நியூபவுண்ட்ட்லாந்தில் முழுமையாகப் படமாக்கப்பட்டிருந்தது. அது கொஞ்சம் ரகளையை ஏற்படுத்தியிருந்தாலும், மீனவ சமூகத்தின் கடற்கரை, பல வர்ண வீடுகளின் அழகு நோவா ஸ்கோஷியாவில் தேடியும் கிடைக்காதது. சில் வருடங்களுக்கு முன்னர் நோவா ஸ்கோஷியா சென்றபோது மோட் லூவிஸ் வாழ்ந்த உண்மையான அந்த சிறிய வீட்டிற்குப் போனேன். வீட்டின் சுவர்கள், கதவுகள் எல்லாமே ஓவியங்கள். படத்தில் காட்டப்பட்டதைவிடச் சிறிய வீடு. வறுமை துலாம்பரமாகத் தெரிந்தது.

நியூபவுண்லாந்தின் அழகைவிட அதன் நான்கு பருவகாலங்களைச், சிறைபிடிக்க புகைப்படக் கருவிகள் தவறவில்லை. பார்த்துக்கொண்டிருந்தபோது அந்தக் கோடைக் காற்று டெலிவிசன் திரையால் வெளியே வந்தது போன்ற பிரமை. மோடியின் தலைமுடியயைச் சுழற்றி அவரது முகத்தை மூடும் அந்தக்காற்று .. இளம் வெயில், கடற்கரை, நிறம்மாறும் மரங்கள், பனிமூடிய பூமி எதை விபரிக்க. cinematography அற்புதம். மோடீயின் வாயிலிருந்து வார்த்தைகள் புறப்படத் தயங்கும்போதெல்லாம் அவற்றுக்கு உதவியாகக் கண்கள் இறங்கிவிடும். அப்படியொரு நடிப்பு.

எய்ஸ்லிங் வால்ஷ் இயக்கத்தில் தயாரிக்கப்பட்ட இப்படம் 2016 ரொறோண்டோ திரைப்படவிழாவில் காட்டப்பட்டது. சலி ஹோக்கின்ஸ் Critics Society விருதையும், Best Motion Picture உட்பட 7 Canadian Screen Awards ஐயும் பெற்றது. ஈதன் ஹோக்கிற்கு சிறந்த உதவி நடிகர் விருது வழங்கப்பட்டது.

நடிப்பை, திரைப்படக் கலையை, நியூபவுண்லாந்தை அநுபவிக்க விரும்புபவர்கள் பார்த்தால் ரசிப்பீர்கள்.