Columns

மோடி ஜி யின் இலங்கை வரவு: ஜே.வி.பி. யின் அதிர்ஷ்டம்

‘Throwing a monkey wrench’ என்ற பழமொழி அமெரிக்க பேச்சுக் கலாச்சாரத்தில் சென்ற நூற்றாண்டளவில் சேர்க்கப்பட்ட ஒன்று. இயல்பாக ஓடிக்கொண்டிருக்கும் எந்திரமொன்றுக்குள் குறடு ( wrench) ஒன்றை எறிந்துவிட்டால் அது அந்த எந்திரத்தையே நாசம் செய்துவிடும். சுமுகமான இயல்புநிலையை எதிர்பாராத குழப்பத்துக்கு உள்ளாக்குவது என்பது இதன் பொருள்.

இந்தியாவின் recycled பிரதமர் மோடி-ஜி யின் ஜூலை-ஆகஸ்ட் இலங்கை வரவு இலங்கையர் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் ‘சுமுகமான’ ஜனாதிபதித் தேர்தலில் ஒரு குறட்டை எறியப்போகிறது என அச்சப்படவேண்டியிருக்கிறது. இதன் மூலம் இந்திய / சர்வதேச நாணைய நிதிய எண்ணைகளால் சத்தம் போடாமல் இயல்பாக ஓடிக்கொண்டிருக்கிறது என்று மக்கள் நினைத்துக்கொண்டிருக்கும் ரணில் விக்கிரமசிங்க எந்திரம் திடீரென்று பலத்த ஒலியுடன் ஸ்தம்பித்து நிற்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.

அரசியலமைப்பின் ஓட்டையைப் பாவித்து ஜனாதிபதி தேர்தலை ரணில் பின்போடலாம் என்றொரு குறட்டை ஒரு அரசியல்வாதி எந்திரத்துக்குள் எறிந்து பார்த்தார். அது பட்டுத் தெறித்து அவரையே காயப்படுத்தி விட்டது. ரணில் எந்திரம் தப்பித்துக் கொண்டது. இப்போது ரணில் தேர்தலில் நிற்கப்போவது almost உறுதியாகிவிட்டது. அவர் அறிவித்ததும் அவருக்கு சார்பாக பக்ச குடும்பம் வரிந்துகட்டிக்கொண்டு இறங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. முன்னே போல் பக்சக்கள் தனித்து நின்று ‘புலிகளிடமிருந்து நாட்டைக் காப்பாற்றினோம்’ என்று இனியும் வாளைச் சுழற்றிக் காரியங்களைச் சாதிக்க முடியாது. இளவரசர் நாமல் அப்பாவைப் போல் நாக்குப் புரட்டலில் வல்லவராயினும் அவர் இன்னும் முடி தாங்கத் தயாரில்லை. அவர் தயாராகும்வரை ‘மாமா’ ரணிலே அவருக்காக சிம்மாசனத்தைப் பாதுகாப்பார் என பக்ச இராச்சியத்தினர் நம்பிக்கொண்டிருக்கின்றனர்.

எங்கிருந்தோ வந்த அரகலயர்கள் எறிந்த அல்லது அவர்கள் மூலம் எறியப்பட்ட குறடு பக்ச இராச்சியத்தைத் துவம்சம் செய்ததன் காரணமாக பின்வரிசையில் நின்ற ஜே.வி.பி. தற்செயலாக முன்னுக்கு தள்ளி வரப்பட்டது. பாவம் முன்னணி சோசலிஸ்ட் கட்சி, பல்கலைக்கழக மாணவர் அமைப்பு, குமார் குணரட்ணம் et al இங்கு பலிக்கடாவாக்கப்பட்டிருந்தார்கள்.

கருத்துக்கணிப்புகளும், அவை தயாரிக்கப்பட்டவையோ அல்லது உண்மையானவையோ, ஜே.வி.பி.யை படு வேகமாக முன்தள்ளிக்கொண்டு வந்தன. இந்த மோக வலையில் மாட்டிய ஜே,வி.பி.யும் ‘தாய்த் திரு நாட்டைப் பயங்கரவாதத்திலிருந்து காப்பாற்றியமைக்கு நாமே காரணம்’ என வாள்களைச் சுழற்றிக்கொண்டு தென்னிலங்கை முழுவதும் சவாரி செய்து வந்தனர். விஜேவீர காலத்து குதிரைகள் சிவப்பு நிறத்துடன் காணப்பட்டவையாயினும் 1987 இந்திய-இலங்கை ஒப்பந்தம் கையெழுத்திட்டதன் பின்னர் ஜே.வி.பி. சித்தாந்தத்தை ஒதுக்கிவிட்டு ஒரு இந்திய எதிர்ப்பு இயக்கமாகவே மாறிப்போனது. இன்றுவரை அவர்கள் தமது உள்ளாடைகளை மாற்றிக்கொள்ளவில்லை. இப்போது வேறு வழியில்லாமல் அனுர குமாரவுக்கு அழகான ஆடைகளை அணிந்து பவனியில் வர விட்டிருக்கிறது அந்த அமைப்பு. 13 ஆவது திருத்தத்தையோ அல்லது அதன் வழி வந்த மாகாணசபைத் தேர்தல்களையோ அவர்கள் புறக்கணித்தமைக்கு இந்த ‘இந்திய ஆதிக்க எதிர்ப்பு’ மட்டுமே காரணம். ஆனால் அரகலயர்களால் மாற்றப்பட்ட களச்சூழலில் இந்திய எதிர்ப்பு எதிர்பார்த்த அளவு விசில்களைக் கொண்டுவரவில்லை என்றதும் என்.பி.பி. என்ற புதிய ஆடையை அணிந்துகொண்டு ஜே.வி.பி. வலம் வருகிறது. அப்படியிருந்தும் லால் காந்த போன்ற சிலர் இன்னமும் ஜே.வி.பி. ஆடையில் இடைக்கிடை காட்சியளித்து வருவது எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பதையே காட்டுகிறது.

எப்படியிருந்தாலும் இந்த மந்திர தந்திர விளையாட்டுக்களில் ரணிலைப் போல எவரும் விண்ணர்கள் இல்லை. பக்சக்கள் மாதிரி அவர் ஞானாக்காவிடம் சாத்திரம் கேட்டு தேர்தல் திகதிகளை தீர்மானிப்பவரல்லர். தாய்த்திருநாட்டைப் பொருளாதாரப் பயங்கரவாதத்திலிருந்து தானே காப்பாற்றினேன் என்பதை அவர் தீர்க்கமாக நம்புகிறார். மக்களும் ஓரளவு அதை நம்புகிறார்கள். இதனால் அவர் சுழற்றக்கூடிய ஒரே வாள் பொருளாதாரம் மட்டுமே. துர்ப்பாக்கியமாக சஜித் தரப்பிடமோ அல்லது என்.பி.பி. தரப்பிடமோ இப்படியான வாள்கள் எதுவும் இப்போதைக்கு இல்லை.

சென்ற சில வாரங்களாகக் கிடைக்கும் கருத்துக் கணிப்புகள் ரணில்-சஜித்-என்.பி.பி. மும்முனைப் போட்டியாகவே இருக்கும் எனப் பல தரப்புகளாலும் கூறப்படுகிறது. அப்படியானால் மீண்டுமொரு தடவை தமிழர்களது வாக்குகளே ஜனாதிபதி யாரென்பதைத் தீர்மானிக்கப் போகிறது என்பது கள யதார்த்தமாகி விட்டது. இந்நிலையில் தமிழர்களின் வாக்குகளுக்காக 13 ஆவது திருத்தத்தைத் தூக்கிக்கொண்டு சஜித், ஜே.வி.பி. யினர் வடக்கே ஓடிவருவது ஒன்றும் ஆச்சரியம் தரவேண்டியதில்லை. எல்லோருக்கும் கூட்டமைப்பும் சுமா என்னும் சுமந்திரனும் இப்போது அவசர தேவையாகி விட்டது. சிவாஜிலிங்கம், பிரேமச்சந்திரன், விக்கினேஸ்வரன் போன்ற கோமாளிகளிடம் இவர்கள் செல்லாமை குறித்து நாம் அதிசயப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஆனால் இவ்விடயத்தில் ரணில் ஒரு புதிய நகர்வையும் எடுக்கவில்லை. அது அவருக்குத் தேவையும் இல்லை.

ஜே.வி.பி. யின் சுழல் வீச்சு சுற்றுப்பயண நாயகன் ஏ.கே.டி. அவரின் பொலிற்பீரோவின் கட்டளைக்கிணங்க இந்திய, புலம் பெயர்ந்த தமிழர்களைச் சந்திப்பதைத் தவிர்த்து வந்தார். கிளிநொச்சி, வவுனியா, யாழ்ப்பாண வரவுகளின்போதும் ‘எல்லோரும் இலங்கையர்’ என்ற வாய்ப்பாட்டுக்கு அப்பால் அவரால் நகர முடியவில்லை. ‘பயங்கரவாதம் ஒழிக்கப்படுவதற்கு நாமே காரணம்’ என்ற வாய்ப்பாடு தென்னிலங்கையிலுள்ள 6.9 மில்லியன் ‘கோதா வாக்குகளைக்’ கொண்டுவந்து குவிக்குமெனப் பொலிற்பீரோ கண்ட கனவு மெய்ப்பட இயலாது என்றதும் இப்போது 13 ஆவது திருத்தத்தைத் தூக்கிக்கொண்டு ஓடி வருகிறார். அந்த வகையில் “13 யாவது கொடுக்கவேண்டுமென” சஜித் அவ்வப்போ கிசு கிசுத்திருந்தார்.

இவ்விடயத்தில் ரணில் கொஞ்சம் பரவாயில்லை. 2002 இலும் சரி, நல்லாட்சி அரசாங்கத்தின்போதுஞ்சரி, இப்போதும் சரி தமிழருக்கு நியாயமான அரசியல் தீர்வொன்றைக் கொடுக்கவேண்டுமென உளமாரக் கூறி வருபவர். ஆனால் அவரது பலவீனம் எதிர் தரப்பின் உரத்த குரலுக்கு இலகுவில் பணிந்துவிடுவது. டிசம்பர் 2022 இல் இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வொன்றைக் கொடுப்பதற்காக பேச்சுவார்த்தைக்கு வரும்படி அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்திருந்தார். இதனடிப்படையில் 2023 பெப்ரவரியில் கொண்டாடப்படவிருந்த 75 ஆவது சுதந்திர தினத்தில் தமிழருக்கான தீர்வொன்று வழங்கப்படுமெனவும் அறிவித்திருந்தார். ஆனால் சஜித், ஏ.கே.டி. உட்பட எந்தத் தலைவருமே ரணிலின் கோரிக்கையைச் செவிமடுக்கவில்லை. ரணில் தனது சுய இலாபங்களுக்காக ஆடும் அரசியல் சித்து எனக்கூறி இம்முயற்சியை அவர்கள் புறந்தள்ளியிருந்தார்கள். அப்போது ஜனாதிபதி தேர்தலோ அல்லது பாராளுமன்றத் தேர்தலோ அறிவிக்கப்படாத நிலையில் ரணிலுக்கு என்ன சுய இலாபம் இருந்திருக்க முடியும்? இருந்தாலும் இந்த ரணில் என்ற விக்கிரமாதித்தன் ஜூலை 26, 2023 அன்று மீண்டுமொரு தடவை தமிழர் பிரச்சினையைத் தீர்க்கவென சர்வ கட்சி மாநாடொன்றிற்கு அனைத்துக் கட்சிகளையும் அழைத்திருந்தார். இப்போதும் அக்கட்சிகள் அவரது அழைப்பை நிராகரித்து விட்டன.

இப்போது தமிழர் வாக்குகளின் அவசியத்தை உணர்ந்து சஜித், ஏ.கே.டி. தரப்புகள் 13 ஐத் தூக்கிக்கொண்டு வடக்கே ஓடி வருகின்றன. மாகாண சபைகளைப் புறக்கணித்த ஜே.வி.பி. “தமிழர்கள் போராடிப் பெற்ற இப்பெருஞ்செல்வத்தை நாம் பறிக்க மாட்டோம்” என சவுண்ட் விடுகிறது. இதே வேளை தென்னிலங்கையின் தேசியத் தலைவர்கள் பலர் ஜே.வி.பி. யின் மக்களாதரவு என்ற எந்திரத்துக்குள் குறட்டை எறிய ஆயத்தமாகிறார்கள். அது ஜே.வி.பி. யைப் பலவீனப்படுத்துமென ஜே.வி.பி. உணர்ந்தால் 13 ஐக் கைவிட்டாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை.

இவ்வேளையில் நமது மோடி ஜி யின் வரவு தென்னிலங்கையின் தேசியத் தலைவர்களுக்கு வரப்பிரசாதமாக அமையப் போகிறது. காரணம் இது தான். மோடி ஜி வந்ததும் வராததுமாக அறிவிக்கப்போகும் ‘சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம், சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்’ என்ற பாரதியின் கனவு நிச்சயமாக மீண்டுமொரு தடவை இந்திய எதிர்ப்பு சக்திகளை உருக்கொள்ள வைக்கும். இதுவே தான் மோடி ஜி எறியப்போகும் குறடு. இதனால் ரணில் என்ற எந்திரத்தின் சுமுகமான இயக்கம் பாதிக்கப்பட நேரிடும். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து ஜே.வி.பி. மீண்டும் இந்திய எதிர்ப்புக் கொடியை உயரப்பிடித்தால் கோதாவின் 6.9 மில்லியன் வாக்குகள் அவர்களை நோக்கி ஓட வாய்ப்புண்டு. அப்போது தமிழரது வாக்குகள் பலமற்றுப் போய்விடும்.

இச்சூழ்நிலையில் மோடி ஜி யின் பயணத்தைப் பிற்போடுவது தமிழருக்கு நல்லது. அதற்கு அவரது விமானத்தின் எந்திரத்துக்குள் யாராவது குறடொன்றை எறிய வேண்டும். பழம் நழுவும் நேரத்தில் பாற்கிண்ணம் தட்டுப்படுவது தஹ்மிழருக்குப் பழகிப்போன ஒன்று. இந்திரா காந்தி மரணம், சுனாமி, 9/11 என்று பலதடவைகள் எங்களை நோக்கி குறடுகள் வீசப்பட்டன. இனுமொரு தடவை என்னத்தைக் கிழித்துவிடப்போகிறது என மீண்டும் T20 இற்குள் நுழையவேண்டியது தான். (Image Credit: Daily Mirror)