‘மொழிப் போரைத் திணிக்காதீர்’: மு.க. ஸ்டாலின் எச்சரிக்கை!
மீண்டும் தலையெடுக்கும் இந்தித் திணிப்பு
மத்திய அரசின்கீழுள்ள பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்வி நிறுவங்களில் கற்கை மொழியாக இந்தியை அறிமுகப்படுத்துவது தொடர்பான அறிக்கையொன்று இன்று (அக்டோபர் 11) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “மத்திய அரசு புதிதாக இந்தித் திணிப்பை ஆரம்பிக்கிறதா?” எனக் கேள்வியெழுப்பியதோடு ஏனைய மொழிகளைப் புறந்தள்ளி இந்திமொழிக்குச் சிறப்புரிமை கொடுப்பது நாட்டின் அரசியலமைப்புக்கு எதிரானது எனவும் அது நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு ஆபத்தானது எனவும் எச்சரித்துள்ளார்.
இந்திய அரசியலமைப்பின் 8ம் இணைப்பின் பிரகாரம் இந்தியாவின் 22 மொழிகளுக்கு சம அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. 1965 இல் இந்தி மொழியைத் திணிக்க முயற்சி எடுக்கப்பட்டபோது இளம் போராட்டக்காரர்கள் தங்களைத் தீயிட்டும், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியும் தமிழுக்காக மரணமாகியிருந்தார்கள். 1968 இல் இந்தியும் ஆங்கிலமும் இந்தியாவின் உத்தியோகபூர்வ மொழிகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டன.
“பன்முகத் தன்மையே இந்தியாவின் பலம். ‘ஒரு நாடு, ஒரு மதம், ஒரு கலாச்சாரம்’ என்ற கொள்கையைத் திணிப்பதன் மூலம் பா.ஜ.க. அரசு இந்த பன்முகத் தன்மையைச் சிதைக்க முயல்கிறது. இதன் மூலம் ஒரு அரசாங்க அதிகாரி இந்தி மொழியில் பேசமுடியாவிட்டால் அவர் மீது மேலதிக நடவடிக்கை நடவடிக்கை எடுக்கப்படுமென அரசு கூறுகிறது. இந்தி மொழிக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படுகிறது. இது அரசியலமைப்புகு முரணானது மட்டுமல்ல நாட்டின் ஒருமைப்பாட்டுக்கே ஆபத்தானதாக முடியும்” என முதல்வர் ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
“இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியைத் திணிக்க மோடி அரசு தீர்மானம் எடுத்துள்ளது. இத இந்தி பேசாத மாநிலங்கள் எதிர்க்கும். இதன் விளைவுகள் நாட்டிற்கு பெரும் ஆபத்தை விளைவிப்பனவாக இருக்கும்” என தமிழ்நாடு பா.உ. பி.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.