Spread the love

நவம்பர் 10, 2019

கடந்த வியானன்று (7) நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் 70 ஆசனங்களில் பிரவிந்த் ஜாக்னோத் தலைமையிலான லதுசாரி கூட்டணி 40 ஆசனங்களைப் பெற்று வெற்றியீட்டியுள்ளது.

மொறீசியஸ் தேர்தல் | பிரவிந்த் ஜக்னோத் கூட்டணி வெற்றி 1
மொறீசியஸ்

“இன்னும் ஐந்து ஆண்டுகள் ஆட்சி செய்வதற்கான தெளிவான ஆணையை நான் பெற்றிருக்கிறேன். மொத்த மொரீசியஸ் மக்களையும் நான் பிரதிநித்திதுவப் படுத்துவேன்” என அவர் பொதுமக்களுக்கான விடப்பட்ட செய்தியில் குறிப்பிட்டார்.

மொரீசியஸ் தெர்தல் நடைமுறைப்படி மொத்தம் 70 பாராளுமன்ற உறுப்பினர்களில் 62 பேர் மக்களால் தெரிவுசெய்யப்பட்டும், மீதி எட்டுப் பேரும் அதிக வாக்குகளைப் பெற்று ஆனால் தேர்தலில் வெற்றி பெறாதவர்களிடையே இருந்து தேர்தல் ஆணையத்தால் தெரிவு செய்யப்பட்டு நியமிக்கப்படுவதும் வழக்கம்.

இத் தேர்தலில் பிரவீந்த் ஜாக்னோத்தின் ‘மொறீசியன் அலையன்ஸ்’ கூட்டணி முன்பிருந்ததை விட 4 ஆசனங்களை அதிகமாகப் பெற்று 42 ஆசனங்களையும், இடதுசாரி ‘நஷனல் அலையன்ஸ்’ மூன்று ஆசனங்களை அதிகமாகப் பெற்று 17 ஆசனங்களையும், ‘மொறீசியன் மிலிற்றன்ற் மூவ்மெண்ட்’ (MMM), ஒரு ஆசனத்தை அதிகரித்ததன் மூலம் மொத்தம் 9 ஆசனங்களையும் பெற்றுள்ளன.

நாட்டின் வாக்களிக்கத் தகுதிபெற்ற 1 மில்லியன் வாக்காளர்களில் கிட்டத்தட்ட 75 வீதமான மக்கள் வாக்களித்திருக்கிறார்கள் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மொரீசியஸ் நாட்டின் பெரும்பான்மை இந்துக்கள் ஆயினும் 1968இல் சுதந்திரம் பெற்றபோது உருவாக்கப்பட்ட அரசியலமைப்பின் படி, கணிசமான எண்ணிக்கையுள்ள சிறுபான்மையினரான முஸ்லிம்களும், சீனரும், ஐரோப்பிய வம்சாவளியினரும் சமாதானமாக வாழ்கின்றனர்.

ஜாக்னோத், இதற்கு முன்னர் பிரதமராக இருந்தாலும் 2017இல் அவரது தந்தையாரின் மரணத்தைத் தொடர்ந்து தேர்தல் நடத்தப்பட்டாமலேயே பிரதமராக ஆக்கப்பட்டவர். அந்த வகையில் அவருக்கு இதுவே முதல் தேர்தல்.

57 வயதுடைய ஜாக்னோத், நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதிலும், சமூக சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதிலும், உட்கட்டமைப்பு விடயங்களில் கவனம் செலுத்துவதிலும் அக்கறை செலுத்துவேன் எனப் பிரசாரம் செய்திருந்தார்.

அத்தோடு, மக்களின் அதிகுறைந்த சம்பளமாக மாதமொன்றுக்கு $240 வழங்கப்படுவதை அறிமுகப்படுத்தியும், முதியவர்களின் ஓய்வூதியத்தை அதிகரித்தும், தொழிலாளர் சட்டங்களைச் சீர்திருத்தியும் பல மாற்றங்களைக் கொண்டுவந்திருந்தார். புதிய ரயில் போக்குவரத்துச் சேவையொன்றின் (New Light Rail Service), முதலாம் கட்டம் இந்த டிசம்பர் மாதம் ஆரம்பிக்கிறது.

இருப்பினும், 1.3 மில்லியன் சனத்தொகையுள்ள நாட்டில் பிரச்சினைகள் இல்லாமலுமில்லை. வேலையில்லா இளையவர்கள் தொகை 22 வீதத்தில் இருக்கிறது. சம்பள இடைவெளி படிப்படி அதிகரித்து வருகிறது. மேற்கு நாடுகளிலிருந்து பெரும் பணக்காரர்கள் தமது பணத்தை வரிகளிலிருந்து பாதுகாத்து வைத்திருக்கும் நாடாக மொறீசியஸ் வந்துகொண்டிருக்கிறது. இது அயலிலுள்ள ஆபிரிக்க நாடுகளின் உறவைக் கெடுத்து வருகிறது.

Print Friendly, PDF & Email