HealthUS & Canada

மொன்றியல் | சிறுபான்மையினர் வாழும் பகுதிகளில் பாதிப்பு அதிகம் – ஆய்வு

கோவிட்-19 பரவலுக்கும், இனம், வருமானம், குடியிருப்பு ஆகியவற்றுக்கும் நெருங்கிய தொடர்புண்டு

மொன்றியல், கனடா ஜூன் 11, 2020: கனடாவின் மாகாணங்களில் ஒன்றான கியூபெக்கின், மொன்றியல் நகரில் கோவிட்-19 நோய்த் தொற்றின் பாதிப்புக்கள் தொடர்பாக, கிடைக்கப்பெற்ற தரவுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டது. இதன் முடிவாக, நோய்ப்பரவலுக்கும், மக்களின் இன விகிதாசாரம், வாழும் குடியிருப்புகள், வருமானம் ஆகியவற்றுக்கும் தொடர்பிருப்பதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. இது மத்திய, மாகாண, மாநகர அரசுகளுக்குச் சங்கடங்களை ஏற்படுத்தியுள்ளன என அறியப்படுகிறது.

சி.பி.சி. செய்திகள் பிரிவு செய்த இந்த ஆய்வின்படி, மொன்றியல் நகரில், கறுப்பின மக்கள் பெரும்பான்மையாகவும், நெரிசலான குடியிருப்புக்களிலும் வாழ்பவர்களைப் கொண்ட மாவட்டங்களில் வைரஸ் தொற்று மிக அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது.

வருமானம் குறைந்த , பல்லின மக்கள் செறிந்து வாழும் வடக்கு மொன்றியல் பகுதியில், ஏன் அதிக கோவிட் மரணங்கள் நிகழ்ந்துள்ளன என்பதற்கு நகர நிர்வாகம் சந்தேகித்த காரணங்களை இந்த ஆய்வு உறுதி செய்துள்ளது.

வடக்கு மொன்றியலில் மட்டும் இதுவரை 222 பேர் கோவிட்-19 நோயால் மரணமாகியிருக்கிறார்கள். இது மொத்த பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண இறப்புக்களைவிட (167) அதிகம்.

வட அமெரிக்காவின் பல நகரங்களின் கோவிட் மரணங்களை ஒப்பிடும்போது, இந்நோயால் இறந்தவர்கள் பெரும்பாலும் வறியவர்களாகவும், இனரீதியாக ஒடுக்கப்பட்டவர்களுமேயாவர். இதையேதான் மொன்றியல் ஆய்வுகளும் உறுதிசெய்துள்ளன.“மக்களின் வாழ்முறைகள், சூழ்நிலைகள் என்பன அவர்களை எப்படி நோய்த்தொற்றுக்கு இலகுவில் ஆளாக்கிவிடுகின்றன என்பதற்கு இது நல்லதொரு உதாரணம்” என கோட்-டெ-நேஜ் கறுப்பின சமூகச் சங்கத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரிஃபனி கலெண்டெர் இவ்வாய்வு பற்றிக் கருத்துக்கூறியுள்ளார்.

கனடாவின் இதர பல்லின சமூகங்கள் வாழும் பகுதிகளைப் போலல்லாது, மொன்றியல் நகர நிர்வாகம், கோவிட் -19 நோய்த்தொற்று விடயங்களை இன ரீதியாக வேறுபடுத்துவதை விரும்பவில்லை என்பது ரிஃபனி போன்றோருக்கு அதிருப்தியைக் கொடுத்துள்ளன. இத் தகவல்கள் பரிமாறப்பட்டிருந்தால் நோய்ப்பரவலுக்கான மூலகாரணங்களை முன்னராகவே அறிந்து நடவடிக்கைகளை எடுத்திருக்க முடியும் என அவர் கருதுகிறார்.

“கறுப்பின மக்களின் நெரிசலான வாழ்க்கை முறைக்கும் நோய்த் தொற்றின் தீவிரத்துக்குமுள்ள தொடர்பை அறிவதற்கு, இன ரீதியான தகவற் பிரிக்கை அவசியமானது” என்கிறார் ரிஃபனி.

இன ரீதியான தகவற் சேர்க்கை, மே மாத ஆரம்பத்தில் ஆரம்பமாகும் என, மாகாணத்தின் சுகாதாரப் பணிப்பாளர் டாக்டர் ஹொறாச்சியோ அரூடா அறிவித்திருந்தாலும் , மாகாண அமைச்சு அப்படியான எதுவித திட்டங்களையும் உத்தேசிக்கவே மறுத்து வருகிறது.

“இதன் முக்கியத்துவம் பற்றி எங்களுக்குப் புரிகிறது. ஆனாலும் மாகாணத்தின் நோய்த்தொற்றுக்குள்ளானவர்களைப் பாதுகாப்பதே இப்போது எங்கள் குறி” என சுகாதார அமைச்சின் அறிக்கை தெரிவிக்கிறது.

சில புள்ளி விபரங்கள்

நன்றி : CBC News


நன்றி :CBC News

வடக்கு மொன்றியல் பகுதியில் ஹெயிட்டியைப் பூர்வீகமாகக் கொண்ட கறுப்பின மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றார்கள். அவர்களது தாய் மொழி, பிரஞ்சு மற்றும் பிரஞ்சுக் கலப்பான கிறியோல் ஆகியன என்பதால் அவர்கள் கியூபெக் மாகாணத்தைத் தமது குடிவரவுத் தேர்வாக வரித்திருக்கிறார்கள்.

இதை விட, கியூபெக்கில் கறுப்பின மக்கள் செறிந்து வாழும் மாவட்டங்கள், றிவியே-டெ-பிறெயறீ-பொயிண்ட்-ஓ-ட்றாம்பிளே மற்றும் லசால் ஆகியன. இப் பகுதி மக்களுக்கு முகக் கவசங்களையோ, கிருமியகற்றிகளையோ விநியோகிக்க அரசு எவ்வித முயற்சிகளையும் எடுக்கவில்லை. ஹூட்ஸ்டொக் போன்ற சிறிய அமைப்புக்களும், சமூக குழுக்களும் தாமாக முன்வந்து இவர்களுக்கு இப் பாதுகாப்பு உபகரணங்களை வழங்கவேண்டியிருந்தது.இதர காரணிகள்

வருமானம்:

வடக்கு மொன்றியல் போலவே மொன்றியல் தீவின் கிழக்குப் பக்கமான குடியிருப்புக்களில் வாழும் மக்கள் வருமான ரீதியாகக் குறைந்த அடுக்கில் வைத்துக் கணிக்கப்படுபவர்கள். மொன்றியல் புறநகர்ப் பகுதிகளான வெஸ்ட் ஐலண்ட், பொய்ண்ட் கிளேயர், கேர்க்லாண்ட் ஆகிய இடங்களில் வாழ்பவர்கள் ஒப்பீட்டளவில் வசதியானவர்கள். நோய்ப்பரவலைப் பொறுத்தவரையில் இந்த இரண்டு வெவ்வேறு பகுதிகளிலும் எண்ணிக்கைகள் பாரதூரமான வித்தியாசத்தைக் காட்டுகின்றன. குறைந்த வருமானம் தரும் வேலைகள் பொதுவாக வீடுகளில் இருந்துகொண்டே செய்ய முடியாதவை எனபதும் இதற்கு ஒரு முக்கிய காரணமாகும்.

ரோஸ்மொண்ட்-லா-பிற்றிற்-பற்றீ, வில்-மறீ, தென்-மேற்கு, மொன்றியல் மத்தி மற்றும் கிழக்கு போன்ற குடியிருப்புகளில் நோயின் பாதிப்பு மிகவும் குறைவாக இருப்பதற்குக் காரணம் அங்கு தான் கியூபெக் மாகாணத்தின் வசதிபடைத்தவர்கள் வாழ்கிறார்கள்.

கல்வி, தொழில்கள்

பெரும்பாலான வருமானம் குறைந்த மக்கள் கட்டாயப் பணிகள் என வரையறுக்கப்பட்ட தொழில்களையே செய்துவந்தார்கள். சுகாதாரம், நகர சுத்தி, போக்குவரத்து, உற்பத்தி போன்றவை இவற்றில் சில. இவற்றினால் கிடைக்கும் வருமானமும் சொற்பமானதே. இவற்றிற்கான கல்வித் தேவைகளும் குறைவானவை. கல்வியில் அதிகம் படித்தவர்கள் சமூக இடைவெளியை அனுசரிக்கக்கூடிய தொழில்களைச் செய்துகொண்டார்கள். அதிகம் கல்வியறிவைக் கொண்டவர்கள் வாழும் வெஸ்ட் ஐலண்ட் பகுதியில் நோய்த் தொற்று மிகவும் குறைவாக இருந்தது.

நெரிசலான வாழ்க்கைமுறை

வடக்கு மொன்றியலிலும், அஹுண்ட்சிக்-கார்ட்டியர்வில் பகுதிகளில் வாழ்ந்த மக்களில் பெரும்பாலானோர் சிறிய வீடுகளில் நெரிசலாக வாழ்ந்து வருவதும் தொற்றுக்கு முக்கியமான காரணங்களில் ஒன்று. இரண்டு, மூன்று பரம்பரையினர் கூட்டுக் குடும்பமாக வாழும் கலாச்சாரம் ஹெயிட்டிய மக்களிடம் இருக்கிறது. அவர்களிடத்தே நோயின் தீவிரம் அதிகமாகவிருந்ததற்கு அதுவும் ஒரு முக்கிய காரணம்.

அரசாங்கம்

இவை எல்லாமே நோய்த்தொற்றின் காரணிகளாகவிருப்பினும், அரச மட்டங்களில் காணப்படும் சிறுபான்மைப் புறக்கணிப்பு என்பது கியூபெக் மாகாணத்தில் கொஞ்சம் அதிகமாகவே தென்படுகிறது எனபது, பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காமை, இனரீதியான தரவுகளைச் சேகரிக்காமை போன்ற பல விடயங்களால் வெளிப்படுகிறது.