Health

மொடேர்ணா தடுப்பு மருந்து எடுத்தவர்களுக்கு இருதய அழர்ச்சி (heart inflammation) அதிகம் – ஆய்வு

ஃபைசர் தடுப்பு மருந்து எடுத்தவர்களைவிட மொடேர்ணா மருந்தை எடுத்தவர்களில் இருதய அழர்ச்சி இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிகம் என புதிய கனடிய ஆய்வொன்று கூறுகிறது. குறிப்பாக 40 வயதுக்குட்பட்ட ஆண்களில் இரண்டாவது டோஸ் மொடேர்ணா தடுப்பு மருந்து எடுத்து 21 நாட்களுள் அவர்களது இருதயம் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என இருதயவியலுக்கான அமெரிக்க கல்லூரி வெளியிட்ட சஞ்சிகையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இருதயத் தசைகளின் பாதிப்பு (myocarditis) மற்றும் இருதயத்தின் வெளிச்சவ்வு பாதிப்பு (pericarditis) ஆகியவற்றை மொடேர்ணா தடுப்பு மருந்து தோற்றுவிக்கிறதென இவ்வாய்வு கூறுகிறது.

போலி வைரஸ்களை அல்லது வீரியம் குறைக்கப்பட்ட வைரஸ்களை உடலுக்குள் அனுப்புவதன் மூலம் உடல் இக் கிருமிகளுக்கெதிரான தடுப்பாற்றலை உருவாக்கிகொள்ளவேண்டுமென்பதே பெரும்பாலான தடுப்பு மருந்துகளின் நோக்கம். ஃபைசர் மற்றும் மொடேர்ணா மருந்துகள் வீரியம் குறைக்கப்பட்ட வைரஸுகளுக்குப் பதிலாக அவற்றின் கட்டமைப்பைப் பிரதிசெய்து (mRNA) அதை உடலுக்குள் அனுப்பி அதன் மூலம் எதிர்ப்பு சக்திகளை உருவாக்கும் பொறிமுறையைப் பின்பற்றுகின்றன. இதனால் சிலரது உடல்கள் தேவைக்குமதிகமான எதிர்ப்பாற்றலை உருவாக்கிவிடுகின்றன. இவை கிருமிகளை மட்டுமல்ல மனிதரின் உடலுறுப்புக்களையும் தாக்கத் தொடங்கிவிடுகின்றன. இருதயம், சிறுநீரகம், குருதிக் கலங்கள் போன்ற பல முக்கியமான உறுப்புக்களை இவை தாக்குவதால் அவை அழர்ச்சிக்குள்ளாகி அவற்றின் செயற்பாடுகள் பாதிப்புக்குள்ளாகின்றன. இரத்தத்தை உடல் முழுவதற்கும் பாய்ச்சுவதற்குத் தேவையான பலத்தைத் தருவன இருதயத்தின் தசைகளாகும். அழர்ச்சியினால அவை செயலிழக்கும்போது திடீர் மாரடைப்பு ஏற்படுகிறது. இதே போன்று சிறுநீரகம் கழிவுகளை அகற்றும் முக்கிய உறுப்பு அவை செயலிழக்கும்போது உடலில் நச்சுத் தேக்கம் அதிகரித்து மரணம் ஏற்படக் காரணமாகிறது.

mRNA தடுப்பு மருந்துகளின் செயற்திறமை பற்றி அவற்றைப் பாவித்தவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி இம்முடிவுக்கு ஆய்வாளர்கள் வந்திருக்கிறார்கள். ஜனவரி 1, 2021 முதல் செப்டம்பர் 9, 2021 வரை பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திலுள்ள 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 2.2 மில்லியன் ஃபைசர் டோஸ்களும் 870,000 மொடேர்ணா டோஸ்களும் கொடுக்கப்பட்டிருந்தன. இவற்றை எடுத்து 21 நாட்களுக்குள் ஃபைசர் மருந்தை எடுத்த 21 பேர்களுக்கும், மொடேர்ணா மருந்தை எடுத்த 31 பேர்களுக்கும் இருதயத் தசைப் பாதிப்பு (myocarditis) ஏற்பட்டிருந்தது. அதே வேளை ஃபைசர் மருந்தை எடுத்த 21 பேர்களுக்கும் மொடேர்ணா மருந்தை எடுத்த 20 பேர்களுக்கும் இருதய சுற்றுச்சவ்வுப் பாதிப்பு (pericarditis) ஏற்பட்டிருந்தது. மொத்தமான கணிப்பீட்டில் 1 மில்லியன் பேர்களில் மொடேர்ணா எடுத்தவர்களில் 35.6 பேருக்கும் ஃபைசர் எடுத்தவர்களில் 12.6 பேருக்கும் இப்பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. 18 முதல் 39 வயதுடைய ஆண் பெண் இருபாலாரிலும் இப்பாதிப்பு அவதானிக்கப்பட்டிருக்கிறது. ஒப்பீட்டளவில் 2018 இல் எடுக்கப்பட்ட் கணிப்பின்படி 2.2 மில்ல்யன் பேரில் 2.01 பேருக்கே இருதயத் தசைபாதிப்பு நோய் ஏற்பட்டிருந்தது. அமெரிக்காவில் ஃபைசர் மற்றும் மொடேர்ணா மருந்துகளை எடுத்த 1 மில்லியன் மக்களில் முறையே 52.4 / 56.3 பேர்களுக்கு இருதய அழர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. இவர்கள் அனைவரும் 18-24 வயதுகளுக்குட்பட்டவர்களாவர். மொடேர்ணா மருந்து இதர வயதினரிலும் இருதயப் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்ற எச்சரிக்கையை அமெரிக்க நோய்க்கட்டுப்பாட்டு மையம் ஜூன் மாதம் விடுத்திருந்தது.

பக்க விளைவுகள்

இது மட்டுமல்லாது mRNA தடுப்பு மருந்துகளை எடுத்தவர்களில் பலருக்கு கோவிட்-19 நோயினால் மட்டுமல்ல சாதாரண ஃபுளூ தொற்றின்போதும் இருதய அழர்ச்சி ஏற்படுவதாக அறியப்பட்டுள்ளது. அதே வேளை தடுப்பு மருந்துகள் எடுத்தவர்களை விட எடுக்காதவர்களில் கோவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் 7 மடங்கு அதிகம் இருதய அழர்ச்சிக்குள்ளாகியிருக்கிறார்கள் என இன்னுமொரு ஆய்வு கூறுகிறது.

இருப்பினும் இப்படியான ஆய்வுகளின் மூலம் ஃபைசர் மற்றும் மொடேர்ணா தயாரிப்பாளர்கள் தமது தயாரிப்பில் சில மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என இவ்வாய்வுகளைப் பகுப்பாய்ந்த பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகப் பேராசிரியரும் நோய்க்கட்டுப்பாட்டு மையத்தின் பணிப்பாளர்களில் ஒருவருமான டாக்டர் ஜான்ஜுவா தெரிவித்துள்ளார். இருதயப் பாதிப்புக்களின் நேரடிக் காரணம் மருந்துகளா அல்லது கோவிட்-19 தொற்றா என்பது முற்றுமுழுதாக பிரித்தறியப்படவில்லை என்பதையும் அதே வேளை பல நோயாளிகளில் சாதுவான இருதயப் பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதை மருத்துவமனை பதிவேடுகளிலிருந்து இந்த ஆய்வுகள் இணைத்துக்கொள்ளவில்லை என்பதையும் பேராசிரியர் சுட்டிக்காட்டுகிறார்.

கனடாவில் இதுவரை 93 மில்லியன் ஃபைசர் டோஸ்களும் 62 மில்லியன் மொடேர்ணா டோஸ்களும் வழங்கப்பட்டிருக்கின்றன. இரண்டு நிறுவனங்களும் இம் மருந்துகளால் ஏற்படும் நீண்டகாலப் பாதிப்புகள் பற்றி ஆய்வுகளை மேற்கொண்டுவருகின்றன.

இருதயத் தசைப் பாதிப்பு அல்லது சவ்வுப் பாதிப்பு இருக்கிறதென அறியப்பட்டவர்கள் mRNA தடுப்பு மருந்துகளை எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது என கனடிய பொதுச்சுகாதார ஆணையம் கருத்து வெளியிட்டுள்ளது. Booster டோஸ் எடுத்தவர்களில் இப்பாதிப்புகள் குறைவு எனக் கூறப்படுகிறது.