Spread the love

மொசாம்பிக் மார்ச் 24, 2020: மொசாம்பிக் நாட்டின் வடமேற்கில் அமைந்துள்ள டேட் மாகாணத்தில் பொதிகளை ஏற்றி அனுப்பும் இரும்புக் கலனொன்றில் (container) 64 பேர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாகத் தெரியவருகிறது.

மரணத்துக்கான காரணம் மூச்சுத் திணறியதாக இருக்கலாமென மருத்துவ மனையைச் சேர்ந்த, பெயர் குறிப்பிடப்பட விரும்பாத மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக ஏ.எஃப்.பி. செய்தி ஸ்தாபனம் இன்று (செவ்வாய்) செய்தி வெளியிட்டுள்ளது.

“மாலாவி நாட்டில் இருந்து சட்டவிரோத குடியேற்றக்காரர்களைக் கொண்டு வந்த இக் கொள்கலத்தில் இருந்தவர்கள் எதியோப்பியாவைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படுகிறது. இக் கொள்கலன் டேட்டிலுள்ள, முசக்கானா என்னுமிடத்தில் நிறுத்தப்பட்டுப் பரிசோதிக்கப்பட்டபோது 64 பேர் மரணமாகியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 14 பேர் உயிரோடு மீட்கப்பட்டுள்ளனர்.

தென்னாபிரிக்காவிற்குச் செல்லும் சட்டவிரோத குடியேற்றக்காரரைக் கடத்தும் பாதையாக மொசாம்பிக் நாடு நீண்டகாலமாகப் பாவிக்கப்படுகிறது.



ஆபிரிக்கக் கண்டத்தில் மிகவும் அபிவிருத்தியடைந்த தொழிற்சாலைகளைக் கொண்ட நாடு தென்னாபிரிக்காவாகும். இதனால் இதன் அயல்நாடுகளான லெசோத்தோ, சிம்பாப்வே போன்ற நாடுகளிலுமிருந்தும், எதியோப்பியா போன்ற தூரநாடுகளிலுமிருந்தும் பலரும் வேலை தேடி தென்னாபிரிக்காவிற்குச் சட்டவிரோதமாக நுழைய முனைகிறார்கள். இதனால் தென்னாபிரிக்கர்களுக்கும் வந்தேறு குடிகளுக்குமிடையில் அடிக்கடி பிரச்சினைகள் மூள்வது வழக்கம்.

தற்போது கண்டுபிடிக்கப்பட்ட சட்டவிரோத குடியேற்றக்காரர்கள் நீல நிறக் கொள்கலனொன்றினுள் வைத்துப் பூட்டப்பட்டு இழுவை வண்டியில் ஏற்றப்பட்டிருந்தார்கள் எனவும் அதிகாரிகள் தெரிவித்ததாக ஏ.எஃப்.பி. தெரிவித்துள்ளது.

Print Friendly, PDF & Email
Related:  நிரூபிக்கப்பட்டுவிட்டது - பெண்களே சிறந்த தலைவர்கள்!