மைத்திரேயி விவகாரம்
சிவதாசன்
Identity entertainment இலிருந்து identity politics இல் வந்து தொங்கி நிற்கிறது மைத்திரேயி விவகாரம். “என்ன நடந்தது” ரக ஆய்வுச் சுரங்கங்கள் சமூக வலைத் தளங்களைச் சப்பித் துப்புகின்றன. அடுத்த மாத புள்ளி விபரத்தில் அதிகம் பரவலாகிய ‘படப் போட்டியில்’ ட்றம்பரை மைத்திரேயி வீழ்த்தினாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை. இதில் எனது 2P.
மைத்திரேயிக்கு 24 வயது. அவர் வளர்ந்த வீடு தமிழ்த் தேசிய சிந்தனை வயப்பட்ட ஒன்று. மைத்திரேயியின் பெற்றோர் கனடிய தொழிற்சங்க வட்டாரங்களில் அறியப்பட்டவர்கள். சமூக சிந்தனை வயப்பட்ட குடும்பத்தில் வளரும் குழந்தை தன் சுய சிந்தனை வயப்படும்வரை அதற்கு காட்டப்பட்ட பாதையில் தான் செல்லும். மைத்திரேயிம் தனது பல்கலைக்கழகக் கல்வியில் மனித உரிமைகள் தொடர்பான பாடங்களைக் கற்றதாகக் கேள்வி. விதைகள் தாய் மரத்திலிருது அதிக தூரத்தில் முளைப்பதில்லை என்பார்கள். மைத்திரேயியின் வயதில் அவரை வித்தியாசமான ஒருவராக எதிர்பார்த்திருக்க முடியாது.
எனக்கு இரண்டு பெண்கள். மனைவி தமிழரல்ல. இரண்டு பெண்களும் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் ஸ்காபரோவில் இருந்த நட்புள்ள ஒரு வெள்ளைக்காரக் குடும்பத்துடன் (babysitting) வளர்ந்தார்கள். “நான் ஒரு பெண் தான் ஸ்காபரோவில் இருக்கக்கூடிய தங்கமுடிப் பெண்ணாகவிருக்கும்” என பார்பரா என்னும் வளர்ப்புத்தாய் சொல்வார். அவருக்கும் இரண்டு பெண்கள், என் பெண்களின் வயதுகளை ஒத்தவர்கள். இனத்துவேஷம், நிறத்துவேஷம் என்பன பற்றி அறியாத பருவம் அவர்களது.
உயர் பள்ளிக்குச் சென்றதும் நாங்கள் மார்க்கம் நகருக்கு இடம்பெயர்ந்துவிட்டோம். மூத்தவள் பள்ளி சென்ற முதலாம் நாள் நான் கேட்டேன் “யார் உனது வகுப்பு மாணவர்கள்? நிற பேதம், மத பேதம் என உணர்வுகள் மாணவர்களிடையே வெளிப்பட்டதை உணர்ந்தாயா?”. “Yes, Tamils with Tamils, Chinese with Chinese, Whites with Whites, Blacks with Blacks. The segregation is alive and well” எனப் பதில் வந்தது. இதன் பிறகு அவளது நட்பு வட்டம் முற்றிலும் தமிழ் தான். பார்பரா குடும்பம் வருடத்தில் ஒருநாள் எப்போதாவது நினைவுக்கு வரும். எனது பிள்ளைகளுக்கு மதத்தையோ, (நானும் மனைவியும் வெவ்வேறு மதங்கள், வெவ்வேறு மொழி பேசுபவர்கள்) மொழியையோ திணிக்கவில்லை.
2009 இறுதிப்போர் களேபரத்தில் ரொறோண்டோ பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் ஒட்டாவா பாராளுமன்றத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட நிகழ்விற்குச் சென்றிருந்தார்கள். எனது இரண்டு பெண்களும் அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டார்கள். வீடு திரும்பியதும் நிகழ்வு எப்படி இருந்தது என்று கேட்டேன். சின்னவள் சொன்னாள் “Appa, you know what the biggest moment in my life? Seeing the Tamil Flag going up on the baloon”. நன்றாக உணர்ச்சிவசப்பட்டிருந்தாள். தனது பட்டதாரிக் கல்வியும் மனித உரிமைகள் தொடர்பாகவே இருக்கும் என்பதையும் உறுதியாகக் தெரிவித்து விட்டாள். வயதுக்கோளாறு என நினைத்துக்கொண்டு “மகளே ஒருநாள் இல்லாவிட்டால் இன்னுமொருநாள் நீ எடுத்த முடிவுக்காக நீ கண்கலங்குவாய். உன் தமிழுணர்வை நான் மெச்சுகிறேன். உன் வயதில் நானும் கொடி தூக்கியவந்தான். எனது புத்திமதி இதுதான். “கவனமாகப் படித்து உச்சத்தை எட்டு. அங்கிருக்கும போது “நான் தமிழ் என்று சொல். அது மட்டும் எனக்குப் போதும். அது மேலும் பல தமிழர்களை உற்சாகப்படுத்தினால் அது உனது வெற்றி” பயணம் இன்னும் தொடர்கிறது.
“நான் ஒரு ஈழத் தமிழச்சி” என மைத்திரேயி கூறியதைப் புரிந்துகொள்ளக்கூடியாதாக இருக்கிறது. அவள் இன்னும் வளர்ந்துகொண்டிருக்கிறாள். அவளுக்கு இப்போதுதான் 24 வயது. உச்சம் இன்னும் வெகுதூரத்தில் இருக்கிறது. உணர்வு கலந்த எமது கூப்பாடுகள், கொந்தளிப்புகள் அவளின் தடத்தை மாற்றிவிடக்கூடாது. வழியெங்கும் கயவர் கூட்டம். அவளை வீழ்த்தி வசைபாட பார்த்துக்கொண்டிருக்கிறது.
சில வருடங்களுக்கு முன் எமது இன்னுமொரு நட்சத்திரம் இந்த identity politics இன் தாக்கத்திற்குள்ளாகியது. மாயா என அழைக்கப்படும் மாதங்கி அருட்பிரகாசம். MIA என்ற சுருக்கெழுதினால் சிலவேளைகளில் அடையாளப்படுத்தப்படும் இக்கலைஞரும் தமிழ் உணர்வலைக்களால் வயப்படுத்தப்பட்ட்வர்தான். தந்தையார் அருளர் எனப்படும் அருட்பிரகாசம், தாயார் கலா ஆகியவர்களின் பெயர்களினால் ‘அருளர்’ , ‘கலா’ பின்னர் தனது பெயரான ‘MIA’ ஆகிய பெயர்களில் இசை அல்பங்களை வெளியிட்டவர். அமெரிக்காவின் அதியுயர் விளையாட்டு நிகழ்வான Superbowl’ நிகழ்ச்சியின் இடைவேளையில் பாட ழைக்கப்பட்டதன் மூலம் தனது உச்சியைத் தொட்டவர்.
மைதிரேயியைப் போல் மாதங்கியும் தநது தமிழ் அடையாளத்தை என்றுமே பின் வைத்ததில்லை. அவரது அல்பங்களில் விடுதலைப் புலிகளின் சின்னங்கள் (அருளர் ஈரோஸ் அமைப்பினராக இருந்தாலுங்கூட) கலை வடிவங்களாக காட்சிப்படுத்தப்படும். அது மட்டுமல்லாது ஈராக் போர், ஆபிரிக்க கலாச்சாரம் போன்ற இன்னோரன்ன அடையாளங்களைத் தனது அல்பங்களின் வடிவமைப்பில் புகுத்தி புரட்சிகளைச் செய்து வருபவர். இதனால் அவருக்கு அமெரிக்க விசா மறுக்கப்பட்டதும் வரலாறு.
மைத்திரேயியின் “நான் ஒரு தமிழ் ஈழப்பெண்’ விவகாரம் சற்று சிக்கலான வளைவுகளை எடுத்துக்கொண்டிருக்கிறது. ‘Best of the Best’ படத்தில் அவர் ஓரிடத்தில் “I am a Tamil, my family is from Sri Lanka’ எனக்கூறுகிறார். பின்னர் இப்படம் தொடர்பான ஊடக நேர்காணலின்போது அவர் தன்னை ஒரு ‘Eelam Tamil’ என வகைப்படுத்துகிறார். இதுதான் சமூக வலைகளினால் பிடிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டது.
‘Best of the Best’ படத்தை அமெரிக்காவில் பிரபல நகைச்சுவை மன்னன் ஹஸான் மினாஜ் தயாரித்திருந்தார். இதன் கதை வசனங்களை ஹசான் மினாஜும், பிரசாந்த வெங்கடராமானுஜமும் இணைந்து எழுதியிருந்தார்கள். படத்தின் theme ஹொலிவூட் – இந்திய fusion. ஒரு குத்தாட்ட ரூட்டீன். இக்காலத்து இளசுகளுக்கு பிரியமான ஒன்று. இந்த theme இன் நெழிவு சுழிவுகளூடு கதை ஓடுகிறது.
ஹசான் மினாஜ்ஜின் பெற்றோர் இந்திய முஸ்லிம்கள். ஹசான் அமெரிக்காவில் பிறந்தவர். மிண்டி கைலிங்க் இன் தந்தையார் ஒரு தமிழ்நாட்டு தமிழர், தாயார் ஒரு பெங்காளி. மைத்திரேயின் கலைப்பயணத்தின் முதற்படி மிண்டி கைலிங்க் தான். ஹொலிவூட் உலகத்தில் மண் தோல் நடிகர்களின் பங்கு டாக்ஸி ட்றைவர்களுக்கு மேல் உயராமலிருந்தபோது இவ்விருவரும் தமது முயற்சிகளால் தத்தம் வழிகளில் சிகரங்களை அண்மித்தவர்கள். ஹொலிவூட்டின் இந்த மண் தோல் உதாசீனத்தின் ஒரு வெளிப்பாடுதான் ‘Best of the Best’. இது அவர்களது உரிமைப் போராட்டம். இது அவர்களது ‘விடுதலை இயக்கம்’. வெள்ளைத்தோல் அதிகாரத்திற்கு எதிரான தோற் போராட்டம். அந்த வகையில் மைத்திரேயி உணர்ச்சிவசப்பட்டதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
பிரபல தமிழ்த் தேசிய மன்னராக வலம் வந்த சேரனின் படங்களில்கூடஹீரோயின் வெளிர் தோல்காரியாகவே இருக்கும். அதுகூடப் பரவாயில்லை அவரது படங்களில் வரும் வேலைக்காரி காத்தாயியாகவும் அவரது பெண் கருப்பு நிறமும் எண்ணை முகத்துடனும் இருக்கும். பிரான்ஸில் கமல்ஹாசன் எடுத்த ஒரு படத்தில் டாக்ஸி ட்றைவர் ஒரு ஈழத் தமிழர் (OK இலங்கைத் தமிழர், if you want) இந்த stereotype தமிழ்த் திரையுலகத்தையே ஆக்கிரமித்திருக்கும்போது ஹொலிவூட் எந்த ரகம். இதற்குள்ளிருந்தும் சில ‘விடுதலைக் குரல்கள்’ எழுகின்றன. இலகுவாக இதை ஒரு அடையாள அரசியல் பதத்திற்குள் அடக்கிவிட முடியாது.
புலம் பெயர்நாடுகளில் தமிழர்கள் மத்தியில் இந்த ‘அடையாள அரசியல்’ முன்னிடம் வகிப்பது தற்செயலான ஒன்றல்ல. இரண்டாம் தலைமுறை, Z-தலைமுறை இளசுகள் தமது அடையாளத்தை நிறுவும் காலமிது. அது அவர்கள் விரும்பி ஏற்பதல்ல இதர அதிகார இனங்களின் நிராகரிப்பினால் ஏற்பட்ட ஒரு வகையான ‘விடுதலை உணர்வு’. அவர்களது வயதுகளில் அவர்கள் அப்படித்தான் நடந்து கொள்வார்கள். ஆனால் அவர்களது உணர்வுகளை ‘பெரிசுகள்’ தமது தேவைகளுக்காக பாவிப்பதுதான் அபத்தம். இது இப்போதல்ல ஐம்பதுகளில் திராவிட /தமிழரசு இயக்கங்களினால் ஆரம்பிக்கப்பட்ட ஒன்று. நாற்பதுகளில் ஹிட்லரினால் ஆரம்பிக்கப்பட்ட ஒன்று. இப்போதும்கூட ட்றம்பரின் கூடாரங்களில் நிரந்தரமாக வாழும் ஒன்று.
மொத்தமாக, மைத்திரேயியை வாழ விடுங்கள். அவளது பயணம் இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறது. உணர்ச்சி அரசியலால் அவளைச் சாயப்படுத்திவிட வேண்டாம். She has a long way to go. நன்றி.
(Image Credit: Getty Images, Tamil Canadian, Canadian Press)
