மேலும் $2 பில்லியன் கடன் வழங்குகிறது இந்தியா!
ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்புவதற்கு மக்கள் திரண்டெழும் இந்த வேளையில் மேலு $2 பில்லியன் டாலர்களை இலங்கைக்குக் கடனாக வழங்க இந்தியா தயாராகி வருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இலங்கை சுதந்திரமடைந்ததிலிருந்து முதன் முதலாக சர்வதேச கடனாளிகளிடம் பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமையால் வங்குரோத்து நிலைமையைப் பிரகடனப்படுத்தியுள்ளது. நிர்வாகச் சீர்கேடு, ஊழல் போன்ற காரணங்களினால் இலங்கை மக்களை மிக மோசமான நிலைமைக்குள் தள்ளிவிட்ட இந்த ஆட்சியாளரைப் பதவியிலிருந்து விலகும்படி கேட்டு பொதுமக்கள் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்துவரும் வேளையில் இந்தியா உணவு, பெற்றோல், டீசல் போன்றவறறை வழங்கியதுமல்லாமால் கடனாகப் பல பில்லியன் டாலர்களையும் கொடுத்து உதவியிருக்கிறது. சீனாவிடம் தாவவிருந்த இலங்கையைத் தன்பக்கம் சார வைப்பதற்கான முயற்சி இதுவென சர்வதேச அவதானிகள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
இதே வேளை சர்வதேச தரம் காக்கும் நிறுவனமான ஃபிட்ச் இலங்கையின் சில வர்த்தக வங்கிகளை ‘CCC’ இலிருந்து ‘C’ இற்குத் தரம் குறைத்தமையால் இலங்கைக்கு அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் இவ் வங்கிகளைப் பாவிக்கமுடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இறக்குமதிக்குத் தேவையான வெளிநாட்டு நாணயம் இல்லாமையால் 350 க்கும் மேற்பட்ட அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதிகளை அரசு தடைசெய்திருக்கிறது. ஒட்டு மொத்தமாக இந்நடவடிக்கைகள் மூலம் இலங்கை இந்தியாவின் தயவில் மேலும் மேலும் தங்கியிருக்கும் நிலையை உருவாக்கியுள்ளது.
இதே வேளை காலிமுகத் திடலில் அமைக்கப்பட்டுள்ள ‘கோதாபோகிராம’ த்தில் போராட்டக்காரர்கள் கடந்த ஆரு நாட்களாக முகாம்களை அமைத்துத் தங்கவாரம்பித்திருக்கிறார்கள். அவர்களோடு பேசுவதற்கு பிரதமர் ராஜபக்ச விடுத்த அழைப்பை அவர்கள் நிராகரித்திருக்கிறார்கள்.