News & AnalysisSri Lanka

மேற்கு மாகாண முதலமைச்சர் பதவிக்கு ஹிருணிகா போட்டி

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரா, எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில், மேற்கு மாகாண மூதலமைச்சர் பதவிக்குப் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.

பிரதான எதிர்க்கட்சியான சமாகி ஜன பலவேகய கட்சியின் சார்பில் இப் பதவிக்குப் போட்டியிடுமாறு கட்சி தன்னைக் கேட்டிருந்தது எனவும் அதற்கிணங்கத் தான் போட்டியிடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மாகாணசபைத் தேர்தல்களை நடத்துவதற்கான திகதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. தற்போதய ஆட்சியாளர்களுக்கு நாடு முழுவதிலும் மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் பலத்த எதிர்ப்பு வளர்ந்து வருவதனால், மாகாணசபைத் தேர்தல்களை அரசாங்கம் பின் போடுமா அல்லது புதிய அரசியலமைப்பை உருவாக்கிய பின்னர் அதை நடத்துமா என்ற பல சந்தேகங்கள் எழுந்துள்ளன.

இதே வேளை, பசில் ராஜபக்சவின் மனைவியார் புஷ்பா ராஜபக்ச மேற்கு மாகாண முதலமைச்சர் பதவிக்குப் போட்டியிடலாம் எனச் சமீபத்தில் செய்திகள் வெளியாகியிருந்தன.

33 வயதுடைய ஹிருணிகாவின் தந்தையார் பாரத் லக்ஸ்மன் பிரேமச்சந்திராவின் மகளாவார். ராஜபக்சக்களின் நண்பரும், பாராளுமன்ற உறுப்பினரும், தற்போது சிறைவாசம் அனுபவிப்பவருமான துமிந்த சில்வா பாரத் லக்ஸ்மன் பிரேமச்சந்திராவைக் கொலைசெய்தார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டுச் சிறைக்கு அனுப்பப்பட்டார்.