மேற்கு மாகாணத்தில் ஒவ்வொரு 12 நிமிடத்துக்கும் ஒரு கோவிட் மரணம் நிகழ்கிறது

  • ஓட்டமாவடி விசேட புதை நிலத்தில் நாடெங்கிலுமிருந்து கொண்டுவரப்படும் உடல்கள் புதைக்கப்படுகின்றன

இலங்கையின் அதிக சனப்பெருக்கம் நிறைந்த மாகாணமான மேற்கு மாகாணம் கோவிட் தொற்றிலும் மரணங்களிலும் முன்னணியில் இருப்பதாகவும் அங்கு ஒவ்வொரு 12 நிமிடத்துக்கும் ஒரு மரணம் நிகழ்ந்துகொண்டிருப்பதாகவும் அரசாங்க தரவுகள் தெரிவிக்கின்றன. ஆகஸ்ட் 19 தரவின்படி நாளொன்றுக்கு 118 பேர் இங்கு மரணமாகியிருக்கிறார்கள்.

தற்போது இராணுவத்தின் தலையீட்டால் தற்போது தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது. சுகாதாரத் திணைக்களத்தால் நாளொன்றுக்கு 2,500 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுவந்தன எனவும் தற்போது இராணுவத்தினால் நாளொன்றுக்கு 500,000 தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன எனவும் பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ந தெரிவித்துள்ளார்.

இருப்பினும் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றவர்கள் நாட்டில் 20 வீத்மானோர் மட்டுமே. ஒரு தடுப்பூசியை மட்டும் பெற்றவர்கள் 50% எனக் கூறப்படுகிறது.

தற்போது நெருக்கடியைத் தந்துவரும் டெல்ட்டா திரிபு மிக வேகமாகப் பரவும் வகை எனவும் நாளொன்றுக்கு 2,500 முதல் 2,800 தொற்றுக்கள் ஏற்படுகின்றன என அரசாங்க புள்ளிவிபரங்கள் தெரிவித்தாலும், இதன் எண்ணிக்கை 4,000 த்தும் மேல் என மருத்துவர்கள் தெரிவிப்பதாகவும் அடுத்துவரும் 10 நாட்களில் இவ்வெண்ணிக்கை மேலும் பலமடங்காக அதிகரிக்கலாமென அவர்கள் அஞ்சுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளகத் தகவல்களின்படி, திங்கள் (09) வரை நாடெங்கிலுமுள்ள மருத்துவமனைகளில் 614 நோயாளிகள் சுவாசத்திற்காக ஒக்சிசன் ஆதரவு தேவைப்பட்டவர்களாக உள்ளார்கள். பலர் மருத்துவமனைக்கு கொண்டுவரும் பாதையிலும், அனுமதிக்காகக் காத்திருக்கும்போதும் மரணமடைந்திருக்கிறார்கள் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஒக்சிசன் ஆதரவு தேவைப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அடுத்து வரும் சில நாட்களில் 1,000 த்தைத் தாண்டலாம் என அவர்கள் கூறுகிறார்கள்.

மேற்கு நாடுகளில் ஒக்சிசன் வழங்கல் மருத்துவமனையின் பொதுவான தயாரிப்பு நிலையத்திலிருந்து குழாய்கள் மூலம் நோயாளிகளின் கட்டில்களுக்கு கொண்டுவரப்படுகிறது. ஆனால் இலங்கையில் ஒக்சிசன் சிலின்டர்களில் வாங்கப்பட்டு தனித் தனியாக ஒவ்வொரு நோயாளிக்கும் விநியோகிக்கப்படுகிறது. தற்போது இலங்கையில் ஒக்சிசன் சிலின்டர்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

தற்போது இலங்கையில் அதிகம் நொற்றாளர்கள் மேற்குமாகாணத்தைச் சேர்ந்த கரப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் உள்ளார்கள் எனவும் அடுத்ததாக கண்டி, நுவரேலியா, பதுளை, கேகாலை, அநுராதபுரம் மற்றும் பொலனறுவ மாவட்டங்களில் உள்ளார்கள் எனவும், நாடளாவிய பொது முடக்கம் ஒன்றின் மூலமாகவே டெல்ட்டா திரிபின் பரவலைக் கட்டுப்படுத்த முடியுமென மருத்துவர்கள் நம்புவதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் நாடளாவிய முடக்கத்துக்கு அரசாங்கம் தயாராக இல்லை என இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் தடுப்பூசி வழங்கும் திட்டங்கள் பின்வரும் இடங்களில் நடைபெறவுள்ளன:

  • கொழும்பு மாவட்டம்: ஆகஸ்ட் 11,12, 13ம் திகதிகளில் நாரஹேன்பிட்டியிலுள்ள இராணுவ மருத்துவமனையில் இடம்பெறும்
  • கம்பஹா மாவட்டம்: ஆகஸ்ட் 12,13,14 ம் திகதிகளில் கமபஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் இடம்பெறும்
  • களுத்துறை மாவட்டம்: ஆகஸ்ட் 12 இல் களுத்துறை மாவட்ட பொது வைத்தியசாலையில் இடம்பெறும்

மேலதிக தகவல்களைப் பெற விரும்புவோர் மற்றும் மேற்குமாகாணத்திலுள்ள தடுப்பூசி பெறாத 60 வயதுக்கு மேற்பட்டவர் ஆகியோர்1906 என்ற இலக்கத்தை அழைப்பதன் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கு மாகாணங்கள்

அதே வேளை, வடக்கு கிழக்கு மாகாணங்களின் நிலைமை பற்றி உறுதியான புள்ளிவிபரங்கள் எதையும் ஒருங்கிணைந்த முறையில் அரசாங்கமோ அல்லது ஊடகங்களோ வெளியிடுவதாக இல்லை. சில் தனிப்பட்ட அக்கறையுள்ள மனிதர்கள் சமூக வலைத் தளங்கள் மூலம் வெளியிட்டுவரும் செய்திகள் கவலை தருவனவாக உள்ளன. முகநூலில் வெளிவந்த உறுதிப்படுத்தாத செய்தியொன்று இப்படிச் சொல்கிறது:

“மட்டக்களப்பு ஓட்டுமாவடி சூடுபத்தினசேனையில், ஞாயிறு (08) வரை, கோவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் 1437 உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. அதேவேளை நாளாந்தம் 25க்கு மேற்பட்ட உடல்கள் வந்த வண்ணமுள்ளதால் இனிவரும் நாட்களில் உடல்கள் அடக்கம் செய்ய இடம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது என ஓட்டுமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம் நௌவ்பர் கவலை தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இந்த உடல்களை அடக்கம் செய்வதற்கு 3 ஏக்கர் காணியை அடையாளப்படுத்தி அதில் உடல்கள் அடக்கம் செய்துவந்த நிலையில் இந்த காணி போதாது என அதனுடன் இணைந்த மேலும் இரண்டு ஏக்கர் காணியை அடையாளப்படுத்தி 5 ஏக்கர் காணியில், 40 இந்துக்கள் , 28 கிறிஸ்தவர்கள், 21 பௌத்த மதங்களைச் சேர்ந்தவர்கள் உட்பட 1437 உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. அடக்கம் செய்யப்பட்ட இடங்களில் அடையாள கற்கள் நாட்டப்பட்டு இலக்கங்கள் இடப்பட்டு அந்த இலக்கங்களின் உடல்கள் யாருடையது என்ற பெயர் விபரங்கள் தயாரிக்கப்பட்டு பிரதேச சபையில் வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த 5 ஏக்கர் காணியிலே இன்னும் சுமார் 500 உடல்கள் மட்டுமே அடக்கம் செய்யமுடியும். இருந்தபோதும் தற்போது கோவிட் தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ளதால் நாளாந்தம் 25 அல்லது 30 உடல்கள் நாடளாவிய ரீதியிலிருந்து வருகின்றதன் காரணமாக இன்னும் ஒரு சில நாட்களில் இந்த இடம் முடிந்துவிடும். எனவே மாற்று இடத்துக்கு எங்கு செல்வது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக ஒரு இடத்தை தெரிவு செய்ய வேண்டிய அவசர நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்”.

யாழ்ப்பாணத்திலிருந்து கிடைத்த ஒரு முகநூல் பதிவின்படி ஒரு இளம் கற்பிணிப் பெண் திடீரென்று மயக்கமடைந்து இறந்ததாகவும் அவர் மீது மேற்கொள்ளப்பட்ட மரண பரிசோதனயின்போது அவரது மரணத்திற்குக் காரணம் கோவிட் தொற்று என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. மருத்துவ மனைகளில் நடைபெறாத பெரும்பாலான மரணங்கள் கோவிட் தொற்றினால் ஏற்படுவதாகவும் மரண விசாரணை அதிகாரிகள் அறிவித்து வருவதாகவும் தெரிகிறது. இதன் காரணமாக, தேவையற்ற ஒன்றுகூடல்களையும், சமய சடங்குகள், ஆலய வழிபாடுகளைத் தவிர்க்குமாறும் யாழ் மாவட்ட வைத்திய சேவைகள் பணிப்பாளர் டாக்டர் கேதீஸ்வரன் பொது அறிவிப்பொந்றினை வெளியிட்டுள்ளார்.