மேற்கு கொள்கலன் முனையம் அதானி குழுமத்துக்குச் செல்கிறது
கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையத்தை இந்தியாவின் அதானி குழுமத்துக்கு வழங்க இலங்கை முடிவெடுத்துள்ளது. நிர்மாணம் – நிர்வாகம் – மீளளிப்பு (Build, Operate, Transfer (BOT)) திட்டத்தின் கீழ் இம் முனையம் இந்திய நிறுவனத்துக்கு வழங்கப்படவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
இலங்கையின் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் லிமிட்டட் நிறுவனத்துடன் இயங்கும் விசேட பொருளாதார வலைய லிமிட்டட் நிறுவனம், இந்தியாவின் அதானி குழுமத்துடன் இணந்து இம் முனையத்தை அபிவிருத்தி செய்யும் எனவும் அதே வேளை முனையத்தின் 100 % உரிமமும் இலங்கையின் துறைமுக நிர்வாகத்திடமே இருக்குமெனவும் அவர் தெரிவித்தார்.
இந்தியாவின் அதானி குழுமமும், யப்பானும் இணைந்து கட்டுமானப்பணிகளை ஆரம்பிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. பெப்ரவரி 1 இல் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இக் கையளிப்பு பற்றித் தீர்மானிக்கப்பட்டது என ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
அமைச்சரவையின் அங்கீகாரத்தைத் தொடர்ந்து, திட்டமிடுதலுக்காகவும், பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்காகவுமென ஒரு குழுவொன்று அமைச்சரவையால் நியமிக்கப்பட்டிருக்கிறது என ரம்புக்வெல மேலும் தெரிவித்தார்.
இக் குழுவினால் தயாரிக்கப்பட்ட BOT திட்டம் முதலீட்டாளர்களைத் தேடுவதற்காக, தற்போது இந்திய, யப்பானிய தூதரகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்திய தரப்பில் முதலீட்டாளராக அதானி குழுமம் உறுதிசெய்யப்பட்டுள்ளது எனவும் யப்பானிய தரப்பில் ஒரு முதலீட்டாளரும் இன்னமும் முன்வரவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த BOT ஒப்பந்தம் 35 வருடங்களுக்கு நடைமுறையிலிருக்கும்.
இந்தியா-யப்பான் நாடுகளுக்கு ராஜபக்சக்களினால் வாக்குறுதியளிக்கப்பட்டிருந்த கிழக்கு கொள்கலன் முனையம் கடும் தேசியவாதிகளின் எதிர்ப்பால் மீளப்பெறப்பட்டு விட்டது. இம் முனையத்தின் ஒரு பகுதி ஏற்கெனவே அபிவிருத்தி செய்யப்பட்டு வருமானமீட்டிக்கொண்டிருந்தது. அதே வேளை மேற்கு முனையம் முற்று முழுதாக அபிவிருத்தி செய்யப்படவேண்டுமென்பதோடு நிறைய முதலீடு தேவைப்படும் ஒன்றாகவும் உள்ளது. இம் முனையம் வருமானமீட்டத் தொடங்க ஏறத்தாள மூன்று அல்லது நாங்கு வருடங்கள் பிடிக்கலாமெனவும் கூறப்படுகிறது.
Related posts:
- பசில் ராஜபக்சவின் இந்திய வருகை | நான்கு அம்ச நிபந்தனைகளின்கீழ் இலங்கைக்கு இந்தியா கடனுதவி
- கிழக்கு கொள்கலன் முனைய விவகாரம் – ஆளும் கூட்டணிக்குள் கருத்து மோதல்?
- விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவுக்கும் அங்கொட லொக்காவுக்கும் தொடர்பு – இந்திய தேசிய விசாரணை ஆணையம்
- இந்திய, தமிழக அரசுகளுடனான உறவுகள் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (TNA), உலகத் தமிழர் பேரவை (GTA) வெளியிட்டுள்ள இணை அறிக்கை