மேன்முறையீட்டு நீதிமன்றம் கோதபாயவுக்கு எதிரான மனுவைத் தள்ளுபடி செய்தது

Spread the love

ஒக்டோபர் 4, 2019

நீதிபதிகள் யசந்தா கொடாகொட, அர்ஜுனா ஒபயசேகரா, மஹிந்த சமயவர்த்தன ஆகியோரைக் கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றம் கோதபாயவுக்கு எதிராகப் போடப்பட்ட வழக்கை ஏகமனதாகத் தள்ளுபடி செய்தனர். முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்சவின் குடியுரிமை தொடர்பாக தொடரப்பட்ட இவ் வழக்கின் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இறுதியில் இத் தீர்ப்பை வழங்கினர். நான்கு நாட்களாக இவ் வழக்கு விசாரிக்கப்பட்டது.

நவம்பர் 18, 2005 இற்கு முதல் மஹிந்த ராஜபக்ச பிரதமராக இருந்தார் எனவும் அதன் பிறகு மந்திரிசபையைக் கலைத்துவிட்டு னவம்பர் 18 அன்று ஜநாதிபதியாகப் பதவியேற்றார் டிசம்பர் 8ம் திகதியே புதிய மந்திரிசபை நியமிக்கப்பட்டது எனவும், மந்திரிசபை இல்லாத காலப்பகுதியில் நவம்பர் 21 அன்று கோதபாய ராஜபக்சவின் இரட்டைக் குடியுரிமைப் பத்திரத்தில் மஹிந்த ராஜபக்ச கையெழுத்திட்டது தவறென்றும் அதனால் கோதாவின் இரட்டைக் குடியுரிமை செல்லுபடியாகாதென்றும் வழக்குத் தொடுத்தவர்களது வழக்கறிஞர்கள் வாதாடியிருந்தனர்.

ஆனால் கையெழுத்திட்டபோது, மஹிந்த ராஜபக்ச நிறைவேற்று அதிகாரங்களைக் கொண்ட ஜனாதிபதியாக இருந்தபடியால் மந்திரிசபை இல்லாதபோதும் பாராளுமன்றத்தின் மேல் அவருக்கு இருந்த அதிகாரத்தைக் கொண்டு மந்திரிசபைக்காகக் கையெழுத்திட அரசியலமைப்பு அவருக்கு அந்த அதிகாரத்தை வழங்குகிறதென்று கோதபாய சார்பாகத் தோன்றிய வழக்கறிஞர்களான றொமேஷ் டி சில்வா வும் , காமினி மரப்பாணவும் தம் வாதத்தை முன்வைத்தனர்.

1972 இல் வரையப்பட்ட அரசியலமைப்பின் 44 வது கட்டளையின் பிரகாரம் ஒரு மந்திரி இல்லாதவிடத்து அவருக்கான ஜனாதிபதி கையிலெடுக்கலாம் என இருந்ததாகவும் 19 வது திருத்தம் கொண்டுவரப்பட்டபோது தான் இந்த அதிகாரம் பறி போனது எனவும் இவ் வழக்கறிஞர்கள் வாதாடினர்.

இருப்பினும் கட்டளை உப பிரிவுகள் 44(1), 44(2) இன் பிரகாரம் ஜனாதிபதி உடனடியாக மந்திரிசபையை நியமித்திருக்க வேண்டும் எனவும் அதை விட்டு விட்டுத் தானே அதிகாரத்தைக் கையிலெடுக்க முடியாது, கையெழுத்திடும் அதிகாரம் அவருக்கு இல்லை என்று வாதிகளின் வழக்கறிஞர் சுரேன் ஃபெர்ணாண்டோ வாதிட்டார்.

வாதப்பிரதிவாதங்களின் முடிவில் மூவர் கொண்ட நீதிபதிகளின் குழு கோதபாய ராஜபக்சவின் குடியுரிமைப் பத்திரம் சட்டபூர்வமானதென்று தீர்ப்பளித்து வழக்கைத் தள்ளுபடி செய்தது.

Print Friendly, PDF & Email
>/center>