மெல்லக் கசியும் உண்மை: கோதா ஜனாதிபதியாவதற்கு ரணிலே காரணம்
இருவரையும் இணைத்து வைப்பவர் இஷினி விக்கிரமசிங்க
கோதாபய ராஜபக்ச அமெரிக்க குடியுரிமையையைத் துறந்தால் இலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு தடங்கல்கள் எதுவும் இருக்கமாட்டாது என ரணில் விக்கிரமசிங்க 2019 இல் உறுதியளித்திருந்தததாக ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்ததாக கொலொம்பொ ரெலிகிராஃப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
2019 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தகமையைப் பெறுவதற்கு முன்னர் அமெரிக்கக் குடியுரிமை துறக்கப்பட்டு இலங்கைக் குடியுரிமை பெற்றாகவேண்டும் என்பது தேர்தல் விதிகளில் ஒன்று. ஆனால் அமெரிக்கக் குடியுரிமையைத் துறப்பதில் காலதாமதம் ஏற்பட்ட காரணத்தால் அதற்கு முன்னரே இலங்கைக் குடியுரிமை விண்ணப்ப அலுவல்கள் இங்கு பூர்த்தியாகி அவருக்கு இலங்கைக் கடவுச்சீட்டும் தயார் செய்யப்பட்டுவிட்டது என அப்போது சந்தேகிக்கப்பட்டது. இதற்கு ஒத்தாசையாக இருந்தது ரணில் விக்கிரமசிங்கவின் மருமகளான இஷினி விக்கிரமசிங்க எனச் செய்திகள் கசிந்திருந்தன. தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவும் வேட்பாளர்களின் தகமைகளைப் பரிசீலிப்பதில் முறையாகச் செயற்படவில்லை எனவும் குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தன. இச் செயற்பாடுகளுக்கெல்லாம் பின்னணியில் ரணில் விக்கிரமசிங்கவே இருந்திருக்கிறார் எனவும் அவரது அனுசரணை இல்லாமல் கோதாபய ராஜபக்ச ஜனாதிபதியாக வந்திருக்க முடியாது எனவும் இப்போது உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.
அமெரிக்க குடியுரிமை துறக்கப்ட்ட மறுநாளே ஆட்பதிவு மற்றும் குடிவரவுத் திணைக்களத்தின் பதிவாளரான அபெயவர்த்தனா கோதாபயவுக்கு ஒரு தேசிய அடையாள அட்டையையும் கடவுச் சீட்டையும் தயார் செய்துவிட்டார். இதற்கான விண்ணப்பப் பத்திரங்கள் திணைக்கள அலுவலகம் மூடப்பட்ட பின்னரே கணனியில் பதியப்பட்டன எனவும் கோதாபய இவ்வலுவலகத்துக்கு நேரடியாகச் செல்லாமலேயே அவருக்கு அடையாள அட்டையும் கடவுச் சீட்டும் வழங்கப்பட்டன எனவும் தற்போது தெரியவந்துள்ளது. இதன் பின்னர் கணனியில் ஏற்றப்பட்ட தரவுகள் அழிக்கப்பட்டு விட்டதாகவும் இதை முன்னின்று நடத்தியவர் இஷினி விக்கிரமசிங்க எனவும் கருதப்படுகிறது.
ரணில் விக்கிரமசிங்க செய்த இந்த உதவிக்குப் பிராயச்சித்தமாக தேர்தல்கள் முடிந்த பின்னர் அவரையும் அவரது ஐ.தே.கட்சியையும் காப்பாறுவதோடு ரணிலைத் தொடர்ந்தும் எதிர்க்கட்சித் தலைவராக இருக்க வழிசெய்யவேண்டுமென்பதும் இருவரும் செய்துகொண்ட ஒப்பந்தமெனக் கூறப்படுகிறது. தற்போது ரணிலின் அலுவலகத்தில் ஆலோசகராகப் பணியாற்றும் இஷினி விக்கிரமசிங்க, 2018 இல் நடைபெற்ற நல்லாட்சி அரசின் இழுபறிகளின்போது, தனது மாமாவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க மறுக்கும் பட்சத்தில் தாங்கள் கோதாபயவை ஜனாதிபதியாக ஆதரிப்போம் எனப்பகிரங்கமாக எச்சரித்திருந்தவர். இதே போன்று மொட்டுக் கட்சி கோதாபயவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க மறுக்கும் பட்சத்தில் தாம் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக்குவோம் என கோதாபய தரப்பு மகிந்த ராஜபக்ச தரப்பை எச்சரித்திருந்ததாகவும் தற்போது செய்திகள் வெளிவந்துள்ளன.
இதை விடவும், பணமுறி மோசடியில் (bond scam) குற்றம் சாட்டப்பட்ட அர்ஜுன் அலோசியஸுடன் ரணிலின் நண்பர் டிலித் ஜயவீரா மூலமாக, கோதாபய நெருக்கமான உறவைப் பேணிவருவதாகவும், அர்ஜுனே கோதாபயவின் தேர்தல் செலவுகளைக் கவனித்து வந்ததாகவும் இவ்வுதவிக்குப் பதிலாக கோதாபய ஜனாதிபதியாக வரும் பட்சத்தில் அவர் அர்ஜுன் குடும்பத்தையும் ரணில் விக்கிரமசிங்கவையும் பாதுகாப்பார் என்பதும் இவர்களிடையே செய்யப்பட்ட ஒப்பந்தங்கள் எனக் கூறப்படுகிறது.
கொலைசெய்யப்பட்ட சண்டே ரைம்ஸ் பத்திரிகை ஆசிரியர் லசந்தா விக்கிரமதுங்கவின் மகள் கலிபோர்ணியா நீதிமன்றத்தில் கோதாபயவுக்கு எதிராகப் போட்ட வழக்கின்மீதான அழைப்பணையை கோதாபயவுக்கு கலிபோர்ணிய வாகனத் தரிப்பு நிலையமொன்றில் வைத்துக் கையளிக்க அதிகாரிகள் முயன்றபோது அவர் உடனடியாக டிலித் ஜயவீர மூலம் ரணிலோடு தொடர்புகொண்டு இலங்கை பொலிஸ் அதிகாரிகள் அஹிம்சா விக்கிரமதுங்கவின் சட்டத்தரணிகளோடு ஒத்துழைக்க மாட்டார்கள் என்ற உத்தரவாதத்தைப் பெற்றுக்கொண்டார். இதைச் செயற்படுத்திக் கொடுத்தவரும் இஷினி விக்கிரமசிங்கவே தான்.
2018இல் நல்லாட்சி அரசாங்கத்தில் மகிந்த ராஜபக்சவைப் பிரதமராக்கும் முயற்சியில் மைத்திரி தரப்பு ‘சதி’ செய்தபோது ரணிலையும் கோதாபயவையும் அலரி மாளிகையில் சந்திக்க வைத்து பேச்சுவார்த்தை நடத்தியதும் இஷினி விக்கிரமசிங்கதான். இச்சந்திப்பின்போது என்ன பேசப்பட்டது என்பது இதுவரை வெளிவராத மர்மம்.