Entertainment

மெய்யழகன்

முகநூல் நண்பர் பிரபு ராஜதுரை சிலாகித்து எழுதியிருந்தமையின் உந்துதலினால் பார்த்தேன். தமிழ்நாடு கதைப் பஞ்சத்தால் வரண்டுபோய் அதிக காலம். அதற்குள் G.O.A.T. , வேட்டையன் போன்ற நெடுங்கோடைகள் வந்து கதைக் களத்தை மேலும் வரட்டிவிட்டுப் போகும். இடைக்கிடை மெய்யழகன் போன்ற சிறு மழைகள் பெய்தால் தானுண்டு.

கதை ஒரு புள்ளிக்குள் அடங்கிவிடுகிறது. அதை வைத்து artistical extrapolation மூலம் இழுத்து விரித்து ஒரு அழகான கலைப் படைப்பைத் தந்திருக்கிறார் இயக்குனர் C. பிரேம்குமார். சொத்துப் பிரிவினையால் மனமுடைந்து தன் கிராமத்தை விட்டு சென்னைக்கு வந்து 22 வருடங்களுக்குப் பிறகு வேண்டா வெறுப்பாக தன் கிராமத்துக்கு வரும் அருண்மொழி வர்மனைச் (அரவிந்தசாமி) சென்னையிலிருந்து இழுத்து வந்து தஞ்சாவூர் நீடமங்கலத்தில் வாழும் ‘அந்த பெயரறியாச் சீவனோடு’ (கார்த்தி) இணைத்துப் புள்ளிக் கதையைப் பெருவட்டமாக்கியிருக்கிறார் இயக்குனர். இப்பெருவட்டத்துள் சிக்கும் கிராம nostalgia வில் உருகிக் கலக்காத பார்வையாளரே இருக்க முடியாது.


வாழை போன்ற திரைப்படங்களும் கிராமிய வாழ்வைக் காட்டினாலும் அது ஒரு segment மக்களை வைத்துப் பின்னப்பட்ட பிரசாரப் படம் என்ற எண்ணத்தை இயக்குனர் ஆரம்பத்திலேயே அறைந்து சொன்ன பிறகு காட்சியமைப்புகளெல்லாம் செயற்கை வேடம் பூண்டது போன்ற ஒரு அனுபவம் கிடைக்கிறது. ஆனால் மெய்யழகனில் மிகவும் சாதுரியமாக கதையின் கருவை இயக்குனர் அசைக்காமல் பார்வையாளரே தூக்கிச் செல்லுமளவுக்கு கற்பனை வலயத்தில் கட்டாக்காலியாக (open ended ) விட்டுவிடுகிறார் இயக்குனர்.

பெரும்பாலான காட்சிகள் மிகவும் எளிமையான, கிராமிய வாழ்வொன்றின் தின நிகழ்வுகளை மட்டுமே காட்டுகின்றன. ஆரம்பத்தில் இது சற்று ‘போரடிப்பதாகவே’ தோன்றினாலும் அரவிந்தசாமி நீடமங்கல மண்ணில் கால் வைத்ததுமே கதை களைகட்டி விடுகிறது. அதற்கு கார்த்தியே பொறுப்பேற்க வேண்டும். கார்த்தியின் கிராம வீடும், கருமிருளில் சிறு ஒளியில் தாளம் போடும் மரக்கிளைகளும், தரையிலிருந்து முட்டியில் பியர் குடித்து …..ஐயோ, ஆளை விடு சாமி. அங்கேதான் கிளைமாக்ஸ். கிராம வாழ்வை அனுபவிக்காதவர்களுக்கு இது அமிர்தமில்லை என்பதை இங்கு எரிச்சலோடு பதிவு செய்கிறேன். கார்த்தியின் டோனி (எருது), பச்சை ‘ரீ சேர்ட்’, ஜல்லிக்கட்டு போன்றவற்றில் நம்மாழ்வார் மணம் இருந்தாலும் அதுவே தான் கிராமத்தின் அடையாளம் என்றெடுத்து அப்பால் போகலாம். குளக்கட்டில் பியர் குடித்தல், வெறியில் உளறுதல், பாட்டு… அடடா “உனக்கெல்லாம் இனி அந்த வாய்ப்பே இல்லை ராஜா” என்று ஓங்கி முகத்தில் அறைந்து சொல்வதுபோல் படம் வெறுமையில் விட்டுச் சென்றது பெருங்கவலை.

கார்த்தி, அரவிந்தசாமி, ராஜ் கிரண், திவ்யா ஆகியோரின் நடிப்பு முற்றிலும் இயல்பாக இருந்தது. என்னவோ பொன்னியின் செல்வனாகவிருந்தாலென்ன மெய்யழகனாகவிருந்தாலென்ன குறும்பு பாத்திரமென்றால் கார்த்தி என்றே ஆகிவிட்டது போலும். “உண்மையாகவே சொல்றியா அத்தான், என் பேர் உனக்குத் தெரியாதா” என்று சொல்லும்போது கார்த்தியின் முகம்? அது வேறு லெவெல். Just superb.

படத்தில் கை, கால் விசுக்கல்கள், அவை சண்டையோ அல்லது ஆட்டமோ எதுவானாலும், இல்லவே இல்லை. இரண்டு பாட்டுக்கள் பின்னணியில் போகின்றன. வசனங்கள் தேவைக்கேற்றபடி. புகுத்தப்படாத இயல்பான நகைச்சுவை. ஒளி, ஒலி இத்தியாதிகள் professional.

தமிழ் நாட்டில் தஞ்சாவூருக்கென்று ஒரு அழகு இருக்கிறது. சோழன் காலத்துச் சதுப்பு நிலத்தை அவாள் பொன்விளையும் பூமியாக்கித் தந்தமையால் ரசனைக்கும் இங்கு ஒரு கிறுக்குத்தான். கண்ணுக்குள் கோபுரமும், காதுக்குள் நாதஸ்வரமும், வாய்க்குள் வாழை இலைச் சோறும் நுழையத்தந்த தஞ்சாவூருக்கு கோடானு கோடி நன்றி.

தயாரித்தது வேறு யாருமில்லை நம்ம ஜோதிகா-சூர்யா தம்பதி தான். ஓஹோ என்று ஓடுகிறதாம். ரூ.35 கோடியில் தயாரித்து செப்டம்பர் 27 இல் வெளிவந்தது. வருமானம் இதுவரை ரூ.52 கோடியைத் தாண்டிவிட்டது.

பரவசமடையும் பாக்கியமிருந்தால் நீங்களும் பார்ப்பீர்கள்