NewsWorld

மெக்சிக்கோ: தங்கள் வாய்களைத் தைத்து எதிர்ப்புத் தெரிவிக்கும் குவாட்டமாலா அகதிகள்

தங்களை அமெரிக்காவுள் செல்ல அனுமதிக்கும்படி கோரி 10 குவாட்டமாலா அகதிகள் மெக்சிக்கோவில் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனரெனச் செய்திகள் தெரிவிக்கின்றன.

தென்னமெரிக்க நாடுகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான அகதிகள் அமெரிக்காவின் தென் எல்லையினூடு உள்ளே புகுவதற்கு முயன்று வருகின்றனர். பல வருடங்களாக நடைபெற்றுவரும் இக்குடிவரவாளரின் முயற்சிகளை அமெரிக்காவின் அழுத்தத்திந் பேரில் மெக்சிக்கோ அரசு தடுத்து வருகிறது. மெக்சிக்கோ அரசிந் இந் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக தற்போது அகதிகள் சிலர் ஊசிகளையும், பிளாஸ்டிக் நூல்களையும் கொண்டு தமது வாய்களைத் தைத்துக்கொள்வதன் மூலம் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர்.

அமெரிக்க எல்லைகளை அடைவதானால் மெக்சிக்கோ நாட்டினூடு பயணம் செய்ய வேண்டும். இதற்கு தேசிய குடிநகர்வு நிலையத்தில் (National Migration Institute) பதிந்து அதன் அனுமதியைப் பெறவேண்டும். ஆனால் பலர் இந்த அனுமதியைப் பெற மாதக் கணக்காகக் காத்திருக்க வேண்டியிருக்கிறது என்கிறார் குடிநகர்வாளர்களுக்கு உதவிகளைச் செய்யும் ஐரீனியோ முஜீக்கா.

இதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்காக சில தென்னமெரிக்க அகதிகள் தங்கள் வாய்களைத் தைத்துக்கொள்வதன் மூலம் புதுவகையான வழியில் உலக அவதானத்தை ஈர்க்கின்றனர்.

அமெரிக்காவுக்குள் புகுவதற்கு முயற்சித்து தோல்வி கண்ட பல்லாயிரக் கணக்கானவர்கள் மெக்சிக்கோவிலேயே தமது புகலிடக்கோரிக்கைகளைப் பதிவுசெய்து வருகின்றனர். சென்ற வருடம் (2021), மெக்சிக்கோவின் வரலாற்றிலேயே அதிகமான புகலிடக் கோரிக்கைகள் பதிவாகியுள்ளன. இவர்களில் பெரும்பாலானவர்கள் அமெரிக்காவிற்குச் செல்வதற்கான முயற்சிகளிலேயே ஈடுபட்டு வருகின்றனர்.