CultureLIFE

மெக்சிக்கோ: குலங்கள் தழைக்க முதலையைத் திருமணம் செய்த நகர முதல்வர்!

230 வருடங்களாகத் தொடரும் சடங்கு

இரு குலங்களிடையே இருந்த நெடுநாட் பகை நீங்கி உறவு மலர்ந்ததைக் கொண்டாடும் முகமாக தென் மெக்சிக்கோ நகர முதல்வரொருவர் முதலையொன்றைத் திருமணம் செய்திருக்கிறார். இதன் மூலம் இரு குலங்களுக்கும் நல்லதிர்ஷ்டம் கிடைக்குமென்பது ஐதீகம் எனவும் இச்சடங்கு 230 வருடங்களாகத் தொடர்கிறது எனவும் கூறப்படுகிறது.

இத்திருமணத்தில் சான் பெட்றோ ஹுவாமலூலா நகரத்தின் நகர முதல்வர் விக்டர் ஹியூகோ ஸோஸா மணமகனாவார். இவர் சொண்டால் குலத்தைச் சேர்ந்தவர். மணமகளுக்குப் பெயர் அலிசா ஏட்றியானா. அவர் ஹுவாவே குலத்தைச் சேர்ந்தவர். இவ்விரு குலங்களுக்கிடையேயும் இருந்த நீண்டகாலப் பகையை முடித்துவைக்கும் இத் திருமணச் சடங்கு பிரமாதமாகக் கொண்டாடப்பட்டிருக்கிறது. உள்ளூர் மக்களால் “இளவரசி” என அழைக்கப்படும் அலிசாவுக்கு தான் உண்மையானவராகவும், ஒழுக்கமானவராகவும் இருப்பேன் என ஸோஸா உறுதிபூண்டிருக்கிறார் எனவும் கூறப்படுகிறது. 230 வருடங்களுக்கு முன்னர் சொண்டால் குல அரசர்கள் இதர குல முதலை இளவரசிகளை இப்படித்தான் மணம் புரிந்து பகைமையைப் போக்குவார்களாம்.

“நாங்கள் இருவரும் மனமாரக் காதலிக்கிறோம். நான் அவளைப் பொறுப்போடு பார்த்துக்கொள்வேன். அதுதான் முக்கியம். காதல் இல்லாது கல்யாணம் என்று ஒன்று இருக்கமுடியாது. இளவரசியுடனான எநது திருமணம் நிரந்தரமானது” என மணமகன் ஸோஸா கூறியிருக்கிறார்.

“இத்திருமணத்தின் மூலம் விவசாய குலமான சொண்டாலுக்கும் கரையோரக் குலமான ஹுவாவேயிற்குமிடையில் ஏற்படும் உறவால் இரு நிலங்களும் பூமாதாவுடன் பிணைக்கப்பட்டு மும்மாரி பொழிந்து விதைகள் முளைத்துப் பயிராகி மக்களைச் செழிப்பாக்குவதன் மூலம் அமைதி தழைக்கும் என்பது ஐதீகம்” என சான் பெட்றோ ஹுவாமெலூலாவைச் சேர்ந்த வரலாற்றாசிரியர் ஜெய்மீ சராட்டே தெரிவித்துள்ளார்.

திருமணத்துக்கு முன் பச்சைப் பாவாடை , தலைக்கவசம் போன்ற ஆடை அணிகளால் அலங்கரிக்கப்பட்ட இளவரசியைக் கிராமத்து மக்கள் ஆசீர்வசித்து ஆடிப் பாடி அனுப்பி வைத்தார்களாம். இந்நடவடிக்கைகளின்போது இளவரசியின் வாய் இறுகக் கட்டப்பட்டிருந்தது. பின்னர் முழுமையான வெண்ணாடை தரித்த இளவரசியை நகரமண்டபத்திற்குக் கொண்டுசென்று திருமணப்பதிவு செய்யப்பட்டது.

இச்சடங்கின்போது ஹுவாவே குலத்து மீனவர் ஒருவர் தனது வலையை எறிந்து இத் திருமணத்தின் மூலம் இனிவரும் காலங்களில் மீன்பிடி அதிகமாக இருக்குமெனவும் இதன் காரணமாக இருகுலங்களும் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என வாழ்த்துவது வழக்கமாம்.

பதிவு முடிவுற்றதும் நகர முதல்வர் (அரசர்) இளவரசியுடன் உள்ளூர் இசைக்கேற்ப நடனமாடியபின் அரசர் இளவரசியைக் கொஞ்சுவதோடு திருமணம் இனிதே முடிவுற்றதாம்.

வாசகர்களுக்கு எழக்கூடிய இதர கேள்விகளுக்கு இப்போதைக்குப் பதில் இல்லை…. (Pic: AFP)