BusinessScience & Technology

மூழ்கும் முகநூல் – காப்பாற்றப்படுமா?

ஒருநாள் இழப்பு US$ 230 பில்லியன்!

வியாபாரம் – சிவதாசன்

நேற்று முகநூலுக்குக் கரிநாள். ‘மெற்றா பிளாட்ஃபோர்ம்ஸ்’ எனப் பெயர் மாற்றப்பட்டு ‘மெற்றா’ எனச் செல்லமாக அழைக்கப்படும் முன்னாள் முகநூல் நிறுவனத்தின் சந்தைப் பெறுமதி நேற்று 26% த்தால் சரிந்திருக்கிறது. இந்நிறுவனத்தின் 18 வருட வரலாற்றில் இதுவே அதி பாரிய இழப்பு எனவும் தெரிகிறது.

இதற்கு காரணம் அதன் நிறுவனர் மார்க் சர்க்கபேர்க்கின் நிறுவனம் தொடர்பான தலைக்கனம் மிக்க எதிர்காலத் திட்டம் எனச் சிலரும், அதே வேளை கூகிள் போன்ற போட்டியாளர்கள் விளம்பரச் சந்தையில் பாரிய பங்கை அபகரித்துக்கொண்டு வருவது மற்றும் வாடிக்கையாளர்கள் பெருவாரியாக தளங்களை மாற்றிக்கொள்வது எனச் சிலரும் கூறுகிறார்கள்.

‘முகநூல்’ , ஏனைய பல நிறுவனங்களைப் போல பங்குச் சந்தை முதலீட்டினால் தனது மூலதனத்தைத் தேடிக்கொள்கிறது. ஏனைய நிறுவனங்களைப் போலவே அதன் வருடாந்த நிதியறிக்கையை அது புதனன்று வெளியிட்டிருந்தது. அதன் பிரகாரம் நிறுவனத்தின் எதிர்காலம் பிரகாசமாக இல்லையெனக் காணப்பட்டு, பங்குச்சந்தையில் அதன் பங்குகளின் பெறுமதி வெகுவாகக் குறைய ஆரம்பித்திருக்கிறது. இந்நடவடிக்கையின் காரணமாக நேற்று மட்டும் ‘முகநூல்’நிறுவனம் US$ 230 பில்லியன்களை இழந்திருக்கிறது.

இதே வேளை, இன்னுமொரு அதி பெரிய தலைக்கனப் பணக்காரரான ரெஸ்லா நிறுவனத்தின் முதன்மை நிர்வாகி இலான் மஸ்க்கைப் போல சர்க்கபேர்க்கும் நிறுவனத்தை விஸ்தரிக்கும் அதிரடித் திட்டங்களைச் சமீபத்தில் அறிவித்திருந்தார். இலான் மஸ்க்கைப் போலல்லாது, சர்க்கர்பேர்க்கின் நிறுவனம் பாவனையாளரின் பிரத்தியேக தகவல்களைத் ‘திருடி’ (data mining) விளம்பரதாரர்களுக்கு விற்பதன் மூலம் தனது பணத்தைச் சேகரிக்கும் ஒன்று. இதற்காகவே அது WhatsApp, Instagram போன்ற இதர சமூக வலைத்தளங்களையும் வாங்கி வைத்திருக்கிறது. ‘முகநூலின்’ அடுத்த திட்டமாக தற்போதுள்ள சமூக வலைத்தளமென்ற (சிறிய வலை) முறையிலிருந்து முழு இண்டெர்னெட் உலகையும் (பெரிய வலை) தன்னகப்படுத்தும் (metaverse), மிகவும் ஆபத்தான, முயற்சியில் சர்க்கபேர்க் இறங்கியிருந்தார். இந் நோக்கத்தில்தான் அவர் தனது நிறுவனத்தின் பெயரை ‘Meta’ எனவும் மாற்றியிருந்தார்.

சர்க்கர்பேர்க்கின் இந்த விக்கிரமாதித்த முயற்சியினால், கடைசிக் காலாண்டில் மட்டும் சுமார் அரை மில்லியன் பாவனையாளர்களை இழந்திருக்கிறார். நிறுவனத்தின் 18 வருட கால வரலாற்றில் இது ஒரு பாரிய இழப்பு. முகநூல் நிறுவனம் தனது உச்சத்தை எட்டிவிட்டது; இனிமேல் வளர்ச்சியில்லை என முதலீட்டாளர்கள் எண்ணும்போது இப்படியான பாய்ச்சல்கள் நடைபெறுவது வழக்கம். முகநூலின் இதர ‘வலை’ களான ‘இன்ஸ்டாகிராம்’ போன்ற தளங்களும் அவற்றின் முதிர்ச்சியை எட்டிவிட்டிருக்கலாம் என்ற எண்ணமும் முதலீட்டாளர்களிடம் பரவி வருகிறது என்பதும் இப் பாவனையாளர்களின் பாரிய பாய்ச்சலுக்குக் காரணம் என ஊகிக்கப்படுகிறது.

Apps இலே தோய்ந்து…

முகநூல் நிறுவனத்தின் பணம் திரட்டும் முயற்சியில் பல திருடர்கள் (Apps developers) பங்காளிகளாக இருக்கிறார்கள். உதாரணத்துக்கு உங்கள் முகத்தை ‘இப்படி மாற்றிக்கொள்ளலாம்’ என்றொரு இலவச App உங்கள் முகநூலில் துள்ளி வருகிறது; நீங்களும் வயப்பட்டுப்போய் அதை அமுக்கி உங்கள் ஆசையைத் தீர்த்துக் கொள்கிறீர்கள். இந்நடவடிக்கையின்போது உங்கள் பிரத்தியேக தகவல்களை அந்த App மூலம் முகநூல் திருடி விளம்பர நிறுவனங்களுக்கு விற்று இலாபத்தைச் சம்பாதிக்கிறது என்னும் விடயம் உங்களில் பலருக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை; அதைப் பெற்றுக்கொள்ளும் அனுமதியை ‘முகநூல்’, ‘வட்ஸப்’,’இன்ஸ்டகிராம்’ நிறுவனங்கள் உங்களிடமிருந்து ஏற்கெனவே பெற்றுவிட்டன. எனவே மீண்டும் அவற்றை அவை உங்களுக்கு ஞாபகப்படுத்தத் தேவையில்லை. இன்னுமொரு விடயம் ‘வட்ஸப்’ இல் நீங்கள் அனுப்பும் குறுந்தகவல்கள் ‘பாதுகாப்பானவை’ என்பதை அது ‘end to end encrypted’ என்ற சொல்லாடலின் மூலம் உத்தரவாதம் தருகிறது. அதாவது அனுப்பும் தகவலை யாரும் திருட முடியாது என்பதே அது. இத் தகவல் அனுப்பப்படும்போது திரிபு படுத்தப்பட்டு அனுப்பப்பட்டு மறுபக்கத்தில் இத் தகவலை எடுத்துக்கொள்பவர் அதைப் புரிந்துகொள்ளும் வகையில் தகவல் மீண்டும் மாற்றிக்கொடுக்கப்படுவதே இந் நடைமுறை. ஆனால் இத் தகவலுக்கு மட்டும்தான் இப் பாதுகாப்பு. இதை அனுப்புபவர், அனுப்பும் இடம், பெறுபவர், பெறும் இடம் போன்ற இன்னோரன்ன பிற விடயங்களைச் சேகரிக்க ‘வட்ஸப்’புக்கு நீங்கள் ஏற்கெனவே அனுமதி கொடுத்துவிட்டீர்கள். இந்த ‘இன்னோரன்ன’ தகவல்களையே meta data என்கிறார்கள். இதையே இந் நிறுவனங்கள் விற்று மகிழ்கின்றன.

ஆனால், இதற்கும் விரைவில் முற்றுப்புள்ளி வைக்க பல அரசாங்கங்கள் திட்டமிட்டுள்ளன. பாவனையாளரின் பிரத்தியேக தகவல்களைத் திருடுவது குற்றம் என்ற பெயரில் பல சட்டங்களை அவை இயறவுள்ளன. ‘அப்பிள்’ நிறுவனம் தன் பாட்டிற்கு ‘App Tracking Transparency’ என்றொரு update ஐ கடந்த வருடம் தனது iPhone களில் சேர்த்திருந்தது. இதன் மூலம் ‘ஐஃபோன்’ பாவனையாளர்கள் ‘முகநூலின்’ திருட்டுகளைக் கண்காணித்துக் கொள்ளலாம். ‘ஐஃபோனின்’ இந்த நடவடிக்கை ‘முகநூலின்’ வருமானத்தில் மண்ணை அள்ளிப் போட்டுவிட்டது எனக் கூறப்படுகிறது.

அதே வேளை ‘முகநூல்’ போன்ற நிறுவனங்கள் இனிமேல் தமது நடவடிக்கைகளை வெளிப்படையாக அவற்றின் பாவனையாளருக்குத் தெரிவிக்கவேண்டுமெனச் சட்டங்கள் வரவிருக்கின்றன. இதனால் ‘முகநூல்’ நிறுவனத்துக்குக்கும் அதன் முதலீட்டாளர்களுக்கும் பலத்த அடி விழுந்திருக்கிறது. ஒப்பீட்டளவில் iPhone பாவனையாளர்கள், Android phone பாவனையாளர்களை விடவும் அதிக பணத்தை முகநூல் விளம்பரதாரர்களுக்குக் கொடுப்பதாகக் கூறப்படுகிறது. iPhone இன் இந்த நடவடிக்கை ‘முகநூலுக்கு’ $10 பில்லியன் நட்டத்தைக் கொண்டுவருமென ‘முகநூல்’ கூறுகிறது. அத்தோடு ‘அப்பிளின்’ இந்த நடவடிக்கையால் பல விளம்பரதாரர்கள் ‘முகநூலை’ விட்டு ‘கூகிள்’ போன்ற இதர வலைகளை நோக்கி ஓடுகின்றனர் என ‘முகநூலின்’ முதன்மை நிதி நிர்வாகி கூறியிருக்கிறார். ‘முகநூல்’ பெறுமதியின் வீழ்ச்சிக்கு இதுவுமொரு காரணம்.

அதே வேளை, ‘முகநூல்’ தனது விளம்பரப்பணத்துக்காக ‘அப்பிளில்’ தங்கியிருப்பதுபோல, ‘கூகிள்’ ‘அப்பிளில்’ தங்கியிருக்கத் தேவையில்லை; ‘கூகிள் தேடுதல்’ மட்டும், அதன் பாவனையாளர் பற்றிய ‘தகவல் திருட்டுக்குப்’ போதுமானது.

‘முகநூலின் இன்னுமொரு எதிரி ‘டிக் டொக்’. சீன நிறுவனத்தின் தயாரிப்பான இந்த App, ‘முகநூலின்’ ‘இன்ஸ்டகிராம்’ போல குறும் காணொளிகளைப்பதிவிடும் ஒன்று. இளையோர் மத்தியில் பிகப் பிரபலமான இந்த App ‘இன்ஸ்டாகிராம்’ மூலம் வரும் வருமானத்தைத் தின்று விடுகிறது.

இந் நிலையில், சர்க்கர்பேர்க் ‘metaverse’ எனப்படும் சொந்தமான ‘இன்ரெர்நெட்’ தளத்தை உருவாக்கும் முயற்சியில் பணத்தை அள்ளி இறைக்கிறார். இது மற்றவர் வாய்க்காலில் நம்பியிராது கிணற்றையே வாங்குதற்கு ஒப்பானது. அதற்காக அவர் கடந்த வருடம் மட்டும் $10 பில்லியன்களைச் செலவழித்திருக்கிறார். இது இலகுவில் சாத்தியமாகக்கூடிய விடயமல்ல என வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள். அதே வேளை ‘முகநூல்’ நிறுவனம் மீதான வழக்குகள் அமெரிக்க அரசாங்கத்தின் கைவசம் இருக்கின்றன.இப்படிப் பல வழிகளாலும் மூலைக்குள் தள்ளப்பட்டு மூழ்கும் சர்க்கர்பேர்க்கை யார் காப்பாற்றப் போகிறார்களோ தெரியவில்லை.