Science & Technology

மூளையில் பொருத்தும் ‘சிப்’ (Chip) தொழில்நுட்பத்தில் இலான் மஸ்க்!

உடலியக்கத்தை இழந்தவர்களுக்கு விரைவில் நிவாரணம்

மனித இயக்கத்தை இயந்திரப்படுத்தும் முனைப்புகளில் ஈடுபட்டுவரும் ரெஸ்லா அதிபர் இலான் மஸ்க் தற்போது அதற்கான ‘சிப்ஸ்’ (chips) தயாரிக்கும் நிறுவனங்களோடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இப்படியான சிப்ஸ் தயாரிக்கும் Neuralink என்னும் நிறுவனத்துக்கு சொந்தக்காரராக இருந்தும்கூட மஸ்க் நியூ யோர்க்கிலுள்ள Synchron என்னும் போட்டி நிறுவனத்தின் தலைமை அதிகாரியுடன் இணை நடவடிக்களுக்காகப் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருக்கிறார்.

©  BSIP / Universal Images Group via Getty Images

மனித மூளையுடன் தொடர்பாடல்களை மேற்கொண்டு அவற்றை இயக்க வல்ல chips களைப் பாவிக்கும் தொழில்நுட்பத்தில் உலகின் பல நிறுவனங்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன. இத் தொழில்நுட்பத்துக்குத் தேவையான chips ஐத் தயாரிப்பதில் முன்னணியில் இருக்கும் சில நிறுவனங்களில் ஒன்றே Synchron. இந் நிறுவனத்துடன் இணைந்து செயற்பட விரும்பும் மஸ்க் அந் நிறுவனத்தின் ஸ்தாபகரும் முதன்மை அதிகாரியுமான தோமஸ் ஒக்ஸ்லியைச் சமீபத்தில் சந்தித்திருக்கிறார். மஸ்கின் Neuralink நிறுவனத்தைவிட இத் தொழில்நுட்பத்தில் பன்மடங்கு முன்னேற்றம் கண்டுள்ள Synchron மனித மூளையில் chips களைப் பொருத்தி ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கான அனுமதியை அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடமிருந்து (FDA) ஏற்கெனவே பெற்றிருக்கிறது. இதற்கு முன்னர் இந் நிறுவனம் (Synchron) அவுஸ்திரேலியாவில் நான்கு மனிதர்களில் இப் பரிசோதனைகளை மேற்கொண்டு வெற்ரிபெற்றதுடன் அதற்கான மிக முக்கியமான தகவல்களையும் சேகரித்து வைத்திருக்கிறது. இதே வேளை மஸ்கின் Neuralink நிறுவனத்துக்கு இப்படியான பரிசோதனைகளுக்கான அனுமதியை FDA இதுவரை வழங்கவில்லை. இந்நிறுவனத்தைத் தன்னுடன் இணைத்துக்கொள்வதன் மூலம் பல அமெரிக்க கட்டுப்பாடுகளை மஸ்கின் நிறுவனம் தவிர்த்துக்கொள்ள முடியும் என நம்பப்படுகிறது.

Neuralink தொழில்நுட்பத்தின்படி இப்படியான chips களை மனித மூளையில் பொருத்துவதற்கு மனித கபாலத்தை சத்திரசிகிச்சை மூலம் திறந்து அதற்கான செயற்பாடுகளை மேற்கொல்ள வேண்டும். இதற்கான அனுமதியை வழங்குவதில் அமெரிக்க நிர்வாகம் தாமதமாகவே செயற்படுகிறது. ஆனால் Neuralink தொழில்நுட்பம் இப்படியான சத்திரசிகிச்சைகள் இல்லாமலேயே செயற்படும் வல்லமை கொண்டது எனக் கூறப்படுகிறது.

மூளைக் கட்டுப்பாட்டுத் தொழில்நுட்பம் தொடர்பாக மஸ்க் இதற்கு முன்னர் இன்னுமொரு அமெரிக்க நிறுவனமான Paradromics Inc. உடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டிருந்தார். இப் பேச்சுவார்த்தை பின்னர் முறிவடைந்துவிட்டது.

கலிபோர்ணியாவில், 2016 இல் ஆரம்பிக்கப்பட்ட Neuralink தற்போது $363 மில்லியன் முதலீட்டுடன் சுமார் 300 பணியாளர்களைக் கொண்டு இயங்குகிறது. உலகின் அதிசிறந்த நரம்பியல் நிபுணர்கள், பொறியியலாளர்களைக் கொண்டியங்கும் இந் நிறுவனம் மேலும் நிபுணர்கள் தேவை என விளம்பரம் செய்துவருகிறது. இதே வேளை Synchron, $65 மில்லியன் முதலீட்டுடனும் 60 பணியாளர்களுடனும் நியூ யோர்க்கைத் தளமாகக்கொண்டு இயங்குகிறது.

விபத்துக்கள் மற்றும் மூளை / நரம்பு வியாதிகளால் உடலியக்கத்தை இழந்தவர்களின் மூளையில் இச் chips ஐப் பொருத்துவதன் மூலம் செயலிழக்கத்தை இழந்த சில அவயவங்களை இயங்கவைக்க முடியுமென விஞ்ஞானிகள் நம்புகின்றனர். தனது திட்டம் நிறைவேறுமானால் செயலிழக்கம் கொண்டவர்கள் எதிர்காலத்தில் ஸ்மார்ட் ஃபோன் போன்றவற்றை இயாக்கிக்கொள்ள முடியுமெனத் தான் எதிர்பார்ப்பதாக மஸ்க் தெரிவித்திருக்கிறார். மூளையின் பெரும்பாலான தொழிற்பாடுகள் செய்லைழப்பதற்கு காரணம் மூளையின் நரம்புக் கலங்களிடையான (neurons) தொடர்புகள் இழக்கப்படுவதனால் என்பது பொதுவான கருத்து. மஸ்க் போன்றவர்கள் தயாரிக்கும் chips இழக்கப்பட்ட தொடர்புகளை மீள செயற்பட வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மூளையின் நரம்புக்கலங்களும், எலெக்ட்றோனிக் chips களைப் போலவே மின்சாரம் மூலமே தொடர்பாடல்களை மேற்கொள்கின்றன.

மஸ்கின் Neuralink நிறுவனம் தனது பரிசோதனைகளை குரங்கு, பன்றி ஆகிய மிருகங்களில் பொருத்தி பல வெற்றிகளைக் கண்டிருக்கிறது. சமீபத்தில் குரங்கொன்று வீடியோ விளையாட்டு ஒன்றை மேற்கொண்டிருந்த காணொளி ஒன்றை Neuralink வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அடுத்ததாக கழுத்துக்கு கீழோ அல்லது இடுப்புக்குக் கீழோ உடலியக்கத்தை இழந்தவர்கள் முழுமையான இயக்கத்தைப் பெற வைப்பதே தனது கனவு என மஸ்க் தெரிவித்துள்ளார்.

இதே வேளை Synchron நிறுவனம் அவுஸ்திரேலியாவில் மேற்கொண்ட பரிசோதனையின்போது அமியோட்றோஃபிக் லற்றெறல் சிலறோஸிஸ் (Amyotrophic Lateral Sclerosis (ALS)) எனக்கூறப்படும் அவயக்கட்டுப்பாட்டிழப்பு ( motor neuron decease) நோயைக் கொண்ட 62 வயதுள்ள ஒருவர் தனது கைகளைப் பாவிக்காமலேயே தனது ஸ்மார்ட் ஃபோனில் செய்த ருவீட் ஒன்று உலகெங்கும் விஞ்ஞானிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. தனது எண்ணத்தை அப்படியே ருவீட் செய்தியாக அவரால் அனுப்ப முடிந்தது.

“நான் எனது எண்ணத்தின் மூலமாகவே மட்டும் இந்த ருவீட்டைச் செய்ய முடிந்தது” என இந்த நோயாளியான ஃபிலிப் ஓகீஃப் Synchron ஸ்தாபகரான தோமஸ் ஓக்ஸ்லிக்கு தனது முதலாவது ருவீட்டைச் செய்து மகிழ்ந்திருந்தார்.

மஸ்கின் Neuralink தொழில்நுட்பத்தைப் போலல்லாது Synchron நிறுவனத்தின் தொழில்நுட்பம் மனித கபாலத்தைத் திறக்காமலேயே கழுத்தில் பொருத்தப்படும் கொம்பியூட்டர் இடைக்கருவி (computer interface) மூலம் தசை இயக்கம் எதுவுமின்றி ஸ்மார்ட் ஃபோன்கள் போன்ற கருவிகளோடு wireliess முறையில் தமது எண்ணங்களைச் செயற்படுத்த முடிகிறது.