News & AnalysisSri Lanka

“மூலோபாய ரீதியாகவும் ஒற்றுமையாகவும் செயற்படுவதே இத் தருணத்தில் அவசியமானது”- போரின் முடிவின் 12 வது ஆண்டு நிறைவு பற்றி உலகத் தமிழர் பேரவை அறிக்கை

இறுதிப் போரின் 12 வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் விதமாக உலகத் தமிழர் பேரவை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. ஆங்கிலத்தில் வெளியான அவ்வறிக்கையின், தமிழ் சாரம்சம் இங்கே தரப்படுகிறது:

“இக் கொடிய நிகழ்வை, சமீபகால வரலாற்றின் மிக மோசமான மனிதப் பேரழிவை, தமிழர்கள் மீது திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்களை நினவுகூரும் உலகத் தமிழர்களுடன் உலகத் தமிழர் பேரவையும் இணைந்து கொள்கிறது. இறுதி மாதங்களில், 40,000 முதல் 70,000 வரை பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. 70 வருட காலமாக இலங்கையில், தமிழ் மக்கள் நீதியான, சமத்துவமான வாழ்வுக்காக மேற்கொண்டு வரும் போராட்டத்தில் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட மொத்த உயிரிழப்பு, சீரழிவு, இடப்பெயர்வு என்பவற்றில் இது ஒரு மிகச் சிறிய பங்கு மட்டுமே.

இந்த வன்முறை சார்ந்த இனப்போராட்டத்தினால் ஏற்பட்ட உயிரிழப்பும் பேரழிவும் தமிழ் மக்களுக்கு மட்டும் உரித்தானது அல்ல என்பதை உலகத் தமிழர் பேரவை மனதில் கொண்டு, இப் போராட்டத்தினால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் தனது அஞ்சலியைத் தெரிவித்துக்கொள்கிறது.

போர் முடிவுற்று 12 வருடங்கள் ஆகியும், இலங்கை தனது கடந்தகாலத் தவறுகளை உணர்ந்து அவற்றை சீர்செய்யமுடியாதுள்ளமை துன்பம் தருவது. உலகத்துக்கு உண்மை என்ன என்பது தெரிந்திருந்தும், இலங்கையின் அரச படைகள் மிக மோசமான குற்றங்களைப் புரிந்தன என்பதையோ, பல வருடங்களாகத் தமிழ் மக்கள் மீது திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட பாகுபாடு, ஒரங்கட்டல், வன்முறை ஆகியவற்றின் தொடர் விளைவே ஆயுதப்போராட்டமாகப் பரிணமித்தது என்பதையோ அரசாங்கம் ஏற்றுக்கொள்ளத் தொடர்ச்சியாக மறுத்து வருகிறது.

அரசியல் வரலாற்றில் என்னதான் வெற்றிகளையும், தோல்விகளையும் பெற்றிருந்தாலும், தமிழ் மக்கள் சார்பாக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளினால் சகல சமூகங்களும் எதிர்கொண்ட வலிகளையும், இடர்களையும் தமிழ்ச் சமூகமும் உணர்ந்துகொள்தல் வேண்டும்.

வருடாந்த முள்ளிவாய்க்கால் நினைவுகூர்தல் நாளுக்கு முதல்நாள், அதற்காக நிறுவப்பட்டிருந்த நினைவுத் தூபியை இடித்தழித்த, ஒரு நியாயமான மனிதப் பிறப்பால் நினைத்துப்பார்க்கவே முடியாத, காட்டுமிராண்டித் தனமான செயலைச் செய்ததன் மூலம் சிறுபான்மை இனங்களுக்கு எதிராக அரசாங்கம் கொண்டுள்ள நிலைப்பாட்டையே காட்டியிருக்கிறது.

இப்படி, இறந்தவர்களை நினைவுகூரும் சின்னங்களைத் தகர்க்கும் பொறுப்பற்ற நடவடிக்கைகள், இலங்கையில் தமிழ் மக்கள் தமக்குரிய நீதியையும், அரசியல் சமத்துவத்தையும் பெறுவதற்கான முனைப்புகளை மேலும் தீவிரப்படுத்துவதோடு, அவர்களின் செயற்பாடுகளை இரட்டிக்க வழிவகுக்குமெனவே பார்க்கப்படவேண்டும்.

எப்படியான ஒரு ஆட்சியாளரோடு தாம் பேசவேண்டியுள்ளது என்பதைச் சர்வதேச சமூகம் அறிந்துகொள்வதற்கு, இதைவிட வேறு நிகழ்வுகள் தேவையில்லை.

இப்படியான நாகரிகமற்ற நடவடிக்கைகள் சர்வதேச உலகின் கண்களில் இலங்கையை மிக மோசமான ஒரு நாடாகச் சித்தரிக்கும் என்பதைப் பெரும்பான்மை சிங்கள சமூகம் உணர்ந்து கொள்ளவேண்டும். அரசாங்கத்தின் சர்வாதிகார பெரும்பான்மை மனப்பான்மைக்கு எதிராகக் குரலெழுப்பாது விட்டால் அவர்களும் சர்வதேசங்களால், ஒரு தோற்றுப்போன நாட்டின் குடிமக்களாகவே பார்க்கப்படவேண்டி ஏற்படும்.

இவ்வேளையில், பல தசாப்தங்கள் நடைபெற்ற போராட்டத்தின் காரணமாக தமிழ்ச் சமூகத்தின் பெரும்பங்கினர் அளவில்லாத துன்பங்களை அனுபவித்தும், தியாகங்களைச் செய்துமுள்ளனர் என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். அதே வேளை தமிழ் மக்களும், அவர்களது தலைவர்களும் தங்கள் முன்னுள்ள சவால்களையும், சந்தர்ப்பங்களையும் கணக்கிலெடுத்து, தற்போதுள்ள அரசியல் சூழலில், இலங்கையிலுள்ள சகல சமூகங்களுடனும், சர்வதேச சமூகத்துடனும், மூலோபாய ரீதியில் இணைந்து செயற்படவேண்டிய காலமிது என்பதையும் உணர்ந்துகொள்ள வேண்டும். தமிழ் மக்களது அரசியல், பொருளாதார அபிலாட்சைகளைப் பெறும் நோக்கில் நடைமுறைச் சாத்தியமுள்ள, பெறக்கூடிய வழிகளைப் பின்பற்றுவதற்கான முக்கியத்துவமும், அவசியமும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவை என்பதை நாம் இடித்துக்கூற வேண்டுமென்பதில்லை” என உலகத் தமிழர் பேரவை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

ஆங்கிலத்திலான அதன் அறிக்கையைப் பார்க்க: