மூலஸ்தானம் -

மூலஸ்தானம்

Spread the love

சமீபத்தில் எனது நண்பர் ஒருவர் கனடாவில் மரணமானார். சிலகாலமாகப் புற்று நோயால் பீடிக்கப்பட்டிருந்த அவரது மரணம் எனக்குள் சில கேள்விகளை எழுப்பிd.

இவரது மரணத்தின் சில வாரங்களின் பின் ஒரு நாள் கனடிய சீ.பி.சீ. வானொலியில் ஒரு நிகழ்ச்சி ஒலிபரப்பாகியது. இந்த இரண்டு நிகழ்வுகளையும் இணைத்துப் பார்த்தபோது என் கேள்விகளுக்கு விடை கிடைத்திருப்பதாக நான் நினைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

மரணம் கொடியது எனச் சிலர் நினைப்பதுண்டு. மனித உறவுகளைப் பொறுத்த வரையில் இழப்பு கொடியதாக இருக்கலாம். நண்பர் மரணப்படுக்கையில் இருந்த நிலையில் மரணம் சில வேளைகளில் அவசியமானது என எண்ணவேண்டியிருந்தது.

இறப்பதற்கு சில வாரங்களுக்கு முன்னர் நான் அந்த நண்பரை அவரது வீட்டில் சந்தித்திருந்தேன். ‘முது வேனில் பொழுதொன்றில் அவர் தன் வீட்டு முற்றத்து மர நிழலில்’ அமர்ந்திருந்தார். நாட்கள் குறுகிவிட்டதென உணர்ந்திருந்தும் முகத்தில் நம்பிக்கை வேடத்தைத் தரிக்க முற்பட்டுத் தோற்றுவிட்ட களையுடன் உரையாடினார்.

நான் ஒரு மருத்துவரில்லை. ஆனாலும் மருத்துவ மனை உரையாடல்களிலிருந்து ஒன்று புரிந்தது. புற்று நோய் அவரின் உயிரைக் குடிக்கவில்லை. மூளையில் இரத்தக் குழாய் வெடித்திருக்கலாம் அதனால் ஸ்ட்றோக் வந்திருக்கலாம் என்றும் சொன்னார்கள். மருத்துவ மனையில் என்ன நடைபெற்றிருக்கலாம் என்பதை ஊகிக்க எவருக்கும் நேரமுமில்லை அவசியமுமில்லை.

மரணம் வாசலில் நின்று எட்டிப்பார்க்கும் போது ஒருவருக்கு இருக்கும் மனநிலையைப் புரிந்துகொள்வது இயலாத விடயம். அதுவும் எதிர்காலம் பற்றிய நிறைய வரைபடங்களோடு நிற்கும் ஒரு படைப்பாளியின் மனநிலை மிகவும் பரிதாபமானது.

திகதி குறிக்கப்பட்ட மரணத்தை எதிர்நோக்கி வாழ்வை நகர்த்தும் மனிதர்களது மனநிலை பற்றிய சீ.பீ.சீ. உரையாடலை இங்கு இணைப்பது பொருத்தமானது.

புற்று நோயின் பிடியில் இருக்கும் ஒரு மாது தன் இயலாமை பற்றி விளக்குகிறார். தன்னைக் கொன்றுகொண்டிருக்கும் கொடிய வியாதி புற்று நோயல்ல என்றும் தன்மீது விலங்குகளைப் போட்டிருக்கும் பதட்டமும் மன அழுத்தமுமே தன்னைக் கொல்கின்றன என அவர் விளக்கினார்.

மரணம் குறித்து திகதி நிர்ணயிக்கப்பட்ட எல்லோருக்குமே நிலைமை இப்படித்தான் இருந்திருக்கும் என நான் நினைக்கிறேன்.

நோய் தீர்ப்பில் மனத்தினுடைய பங்கு பற்றி நிறைய ஆராய்ச்சிகள் நடைபெற்று விட்டன. இசை, யோகாசனம், கடவுள் நம்பிக்கை, மாந்திரீகம் என்று ஒவ்வொன்றும் நோய் தீர்ப்பில் தத்தம் வீராப்புகளைப் பறை சாற்றிக்கொண்டும் இருக்கின்றன. நோய் தீர்ப்பதில் பலமான நிர்ப்பீடன (immune system) ஆற்றலின் பங்கும் அதைப் பலப்படுத்துவதில் தன்னம்பிக்கையின் அவசியம் பற்றியும் மருத்துவ/ விஞ்ஞான உலகம் தொடர்ந்து பீற்றிக்கொண்டுதான் இருக்கிறது.

Related:  வாழ்க்கை கனவுகள் நிறைந்தது...

ஆனால் மரணத்தை முன்னால் நிறுத்தி வைத்துக்கொண்டு அதை எதிர் கொள்பவனிடம் நம்பிக்கை பற்றிப் பேசிப்பாருங்கள்.

சில வருடங்களுக்கு முன்னர் ஒரு கனடிய – இத்தாலிய வம்சாவளிப் பெண்ணொருவரைத் தொழில் நிமித்தம் சந்திக்கவேண்டி வந்தது. அப்போது அவர் கர்ப்பிணியாக இருந்தார். அருகில் சுமார் ஆறு / ஏழு வயது மதிக்கத்தக்க பெண் குழந்தை நின்றுகொண்டிருந்தது. அவரது குசினியில் இருந்த குளிரூட்டியில் சாயி பாபாவின் படம் ஒட்டப்பட்டிருந்தது. அது பற்றி விசாரித்தபோது அவர் சொன்ன விடயம் ஆச்சரியமாகவிருந்தது.

“நான் முதல் தடவை கர்ப்பிணியாகவிருந்தபோது எனக்கு புற்றுநோய் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது மருத்துவர்கள் என் முன் இரண்டு விருப்புக்களை முன்வைத்தனர். ‘நீ உயிர் வாழ விரும்புகிறாயா அல்லது குழந்தை உயிர் வாழ வேண்டுமெனெ விரும்புகிறாயா?'”

வயிற்றுள் வளரும் சிசு கருவழிப்புக்கான கால எல்லையைத் தாண்டிவிட்டிருந்தது. அதையும் விட நான் ஒரு தீவிர கத்தோலிக்க சமயத்தவள். கருவழிப்பு என்பது மறுக்கப்பட்ட விடயம். எனவே என் முன் இருந்தது ஒரே தேர்வு தான்.

அப்போது நான் யோர்க் பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்தேன். எனது மனம் பதட்டப்பட்டுக் கொண்டது நித்திரையில்லை. மனவழுத்தம் உள்ளே பேயாட்டம் ஆடிக்கொண்டிருந்தது. அப்போது என் சக மாணவி ஒருத்தியுடன் இது பற்றிப் பேசினேன். அவள் ஒரு ‘இந்திய’ வம்சாவளியினள். ‘எங்கள் சமூகத்தில் சாயி பாபா என்றொருவர் பற்றிப் பேசிக்கொள்கிறார்கள். அவரை வழிபடுபவர்களின் நோய்களைத் தீர்த்து வைப்பதாகப் பேசிக்கொள்கிறார்கள். விரும்பினால் முயற்சித்துப் பார்.’ என்று அவள் சொன்னாள்.

அப்போது நான் சாய் பாபா பஜனைக்குப் போக ஆரம்பித்தவள் இன்னும் போகிறேன். இவள் தான் அந்தக் ‘கரு’ “என்று அருகில் நின்ற பெண் குழந்தையை அணைத்துக் கொஞ்சிக் கொண்டாள்.

கடவுளா? நம்பிக்கையா? எதனாலும் விளக்கம் தரமுடியாது. பதட்டமும் (anxiety) மன அழுத்தமும் (depression) இங்கே சிகிச்சைக்குட்படுத்தப்பட்டனவா? அல்லது ஆராதனையும் கடவுள் நம்பிக்கையும் இவற்றுக்குச் சிகிச்சையளித்தனவா? விஞ்ஞானம் தரவுகளோடு வந்திறங்கும்வரை யாராலும் சொல்ல முடியாது.

என் நண்பர் கடவுள் நம்பிக்கை இல்லாதவர் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். சீ.பீ.சீ. உரையாடலில் வந்த பெண் தன்னைக் கடவுள் மறுப்பாளரெனவே கூறினார். ஆனால் அவருக்கு அளிக்கப்பட்டது ஒரு பரீட்சார்த்தமான சிகிச்சை. அவரை வருத்திய பதட்டத்திற்கான சிகிச்சை.

மரணத்தை எதிர்நோக்கி நிற்கும் பல நோயாளிகளின் முதலாந்தரப் பிரச்சினையே தம் எதிர்காலம் குறித்த பயம் தான் என அப் பெண்ணுக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர் கூறினார். முதலில் அவருக்கு அளிக்கவேண்டியிருந்தது புற்று நோய்க்கல்ல இந்த மனப் பிராந்தியைத் தீர்ப்பதற்குத்தான் என்கிறார் அவர்.

Related:  மத்திய கிழக்கு | தோற்றுப்போனது யார்?

தீர்க்க முடியாதென முடிவெடுக்கப்பட்ட நோய்களைக் கொண்டவர்களை மருத்துவ மனைகள் ‘இறுதி நாட்களைக் குடும்பத்தோடு கழியுங்கள்’ என சிகிச்சை ஏதுமின்றி வலி குறைக்கும் மருந்துகளொடு ஏதோ ஒரு அறையுள் போட்டு விடுவதே வழக்கம். இது ஒரு வகையில் கருணையற்ற கொலை எனவே நான் கருதுவதுண்டு. இந்த சீ.பீ.சீ. பெண்ணும் அப்படியான ஒருவர் தான். ஆனால் அவரும் ஒரு மருத்துவராக இருந்ததனால் இப்படியான பரீட்சார்த்த சிகிச்சை ஒன்றுக்கு உடன்பட்டதாக அவர் கூறியிருந்தார்.

அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை ஒன்றும் புதிதான விடயமல்ல. அறுபதுகளில் பொதுவாகக் களிப்பிற்காகப பாவிக்கும் எல்.எஸ்.டி போன்ற பரவசம் தரும் மருந்து தான். தமிழில் உன்மத்தம் எனப்படும் போதை தரும் வகை. இப்படியான மருந்துகள் மூலிகைகளில் இருந்து எடுக்கப்படுகின்றன. நமது நாட்டு வைத்தியத்தில் உள நோய் மற்றும் பேய் பிடித்தவர் எனப்படுபவர்களுக்குச் சிகிச்சை செய்ய ஊமத்தை (உன்மத்தை) பாவிக்கப்படுவது வழக்கம். தென்னமெரிக்க சுதேசிகள் பெயோட்டி (பேயோட்டி?) மற்றும் மஜிக் மஷ்ரூம் போன்ற மூலிகைகளை இதற்காகப் பயந்படுத்துவார்கள். சீ.பீ.சீ. நிகழ்ச்சியில் வந்த பெண்ணுக்கு ‘மஜிக் மஷ்ரூம்’ எனப்படும் ஒருவகைக் காளானிலிருந்து எடுக்கப்பட்ட சைலோசைபான் (Psilocybin) என்ற மருந்தே கொடுக்கப்பட்டது. அதே சமயத்தில் இம் மருந்து இன்னுமொரு மன அழுத்த நோயாளிக்கும் பரீட்சார்த்த சிகிச்சைக்காகக் கொடுக்கப்பட்டது.

இரண்டு பேரினதும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன. இருவரும் இப் பரீட்சார்த்த சிகிச்சையால் நல்ல பெறுபேறுகளைப் பெற்றவர்களெனவே அவர்களது வாக்குமூலங்கள் இருந்தன. இருவருமே தம் எதிர்காலம் பற்றிய அச்சங்களைத துறந்திருந்தனர். வாழ்வு பற்றிய அவர்களது பார்வை முற்றிலும் மாற்றம் கண்டிருந்தது. சக மனிதர் மீதும் சூழல் மீதும் அதிக பாசம் கொண்டவர்களாகவும் மரணம் குறித்த எந்தவித அச்சமும் இல்லாதவர்களாகவும் எல்லாவற்றிலும் ஒருமைத்தன்மையைக் (oneness) காண்பவர்களாகவும் காட்டிக் கொண்டனர். இருவரது உரையாடலுமே ஆன்மீக வலையத்தில் தான் இருந்தன.

எனது நண்பரும் இப்படியான ஆன்மீக வலயத்தில் இருந்து உரையாட முயற்சித்திருப்பாரோ? அவர் சார்ந்திருந்த கடவுள் மறுப்பு நண்பர்கள் கூடாரத்தில் அதற்கான வெளி இருந்திருக்காத நிலையில் அவரும் வாழ்வு குறித்த பயம் பற்றி யாருடனும் பேசிக்கொண்டாரா?

‘நான் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தபோது என் உடலுக்குள் ‘பயம்’ ஒளிந்துகொண்டிருந்தது. இருளான ஒரு பாதாள உலகத்துள் இருந்து அது என்னை உள்ளே இழுத்தது. அதை நான் ஏசிக் துரத்தி விட்டேன். அதன் பிறகு நான் ஒரு பிரகாசமான பால்வெளியில் கிரகம் கிரகமாகத் தவிக்கொண்டிருந்தேன். எல்லாமே ஒன்று பிரமை. பிரபஞ்சம் ஒந்றுதான். எனது உடலுக்கு ஆதி எது அந்தம் எது என்று தெரியாத நிலை. நான் சிகிச்சையிலிருந்து மீண்ட பின்னரும் என் மனநிலை இப்படித்தான் இருக்கிறது. நான் இந்த உலகத்திலுள்ள எல்லாவற்றையும் நேசிக்கக் கற்றுக்கொண்டுள்ளேன். எனக்கும் என்னைச் சூழவுள்ளனவற்றிற்கும் எந்தவித பேதமுமில்லை.” என அந்தப் பெண் கூறினார். இப்படியான போதை மருத்துவம் பெற்ற பலரின் வாக்குமூலங்களின் பொதுமை என்னவென்றால் அவர்கள் தங்களை அறிந்துகொண்டதுதான் எனக் கூறுகிறார் சிகிச்சையளித்த மருத்துவர்.

Related:  5G | எளிய முறையில் தகவல் தொழில்நுட்பம் - பாகம் 2

மரணத் தருவாயில் இருப்பவர்களின் மனநிலையைப் படம்பிடித்துக் காட்ட முடியாது. இப்படியான பலவித வாக்குமூலங்கள் வரலாற்றில் நிறையவே உண்டு. மாந்திரிகத்தினால் ‘பேயகற்றி’ சிகிச்சை பெற்றுக் குணமாகியவர்களின் கதைகளும் நிறையவுண்டு. கடவுள் நம்பிக்கையினால் குணமாகியவர்களின் கதைகளும் ஏராளமுண்டு.

சீ.பி.சீ. உரையாடலையும் நண்பரின் கதையையும் இணைத்துப் பொருத்தி அறிந்துகொண்டது. இதுதான். வாழ்வின் மீதுள்ள பிடிப்பு எவ்வளவோ அந்தளவுக்கு மரணம் குறித்த அச்சமும் இருக்கும். இந்த இரண்டிலிருந்தும் விடுபடுவதே உண்மையான சிகிச்சை. அதற்கான பாதை எது?

மாந்திரீகம், ஆன்மீகம், போதை மருந்து எல்லாமுமே இறுதியில் மூளையின் இரசாயனத்திடம்தான் மண்டியிட வேண்டும். மனத்தால் முடியாதபோதுதான் மற்றவை எல்லாம்.  விஞ்ஞானமும் ஆன்மீகமும் குலாவிக் கொள்ளும் இந்த இடம்தானா பேரின்பத்தின் மூலஸ்தானம்?

தெரியாது ஆனால் நம்ப விரும்புகிறேன்.

நவம்பர்  2015 – தமிழர் தகவல் சஞ்சிகை (2016) யில் பிரசுரமானது

Print Friendly, PDF & Email
Please follow and like us:
error