‘மூப்பிலாத் தமிழே தாயே’ – இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் புதிய பாடல்
‘இசைப் புயல்’ ஏ.ஆர். ரஹ்மானின், தமிழ் மொழியின் புகழையும் பாரம்பரியத்தையும் போற்றும், ‘மூப்பிலாத் தமிழே தாயே’ என்னும் புதிய பாடல் தமிழ்ப் புதுவருடத்துடன் வெளிவந்திருக்கிறது.
‘எஞ்ஞோய் எஞ்ஞாமி’ பாடலின் பிரமாணடமான வெற்றியைத் தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் உருவாக்கிய தென்னாசிய சுயாதீன இசைக்கலைஞர்களுக்கான மேடையான ‘மாஜா’ வில் அரங்கேறுகிறது ‘மூப்பிலாத் தமிழே தாயே’ என்னும் தமிழைப் போற்றும் இப்பாடல். தமிழ்ப் புத்தாண்டான ஏப்ரல் 14 அன்று இப்பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டுள்ளார்.
‘புயல் தாண்டிய விடியல், புது வானில் விடியல்’ என்ற வரிகளுடன் ஆரம்பிக்கும் இப் பாடல், முகிலைத் துளைத்துக்கொண்டு, பிறக்கும் புதுநாளைக் கூட்டிவரும் ஒளிக்கற்றையுடனான காட்சிப் படிமங்களோடு அழகான காணொளியாக வெளிவந்துள்ளது.
கடலின் நடுவே தோணியில் நின்றபடி “பூபாளமே வா, தமிழே வா, தரணி ஆளத் தமிழே வா” என்று, இனிய நாதஹ்ஸ்வரம் மற்றும் மங்கள வாத்தியக் கருவிகளின் இசையின் மத்தியில் ஏ.ஆர். ரஹ்மானின் கொள்ளை கொள்ளும் அந்த இளங்காற்றி இசை மயிர்க்கூச்செறிய வைக்கிறது.
இக் காணொளியின் முற்கூறு இங்கே:
தமிழ் மொழியின் புகழையும், பாரம்பரியத்தையும் கொண்டாடும் உலகமெங்கும் பரந்துவாழும் தமிழருக்கு நம்பிக்கையையும் பெருமிதத்தையும் வரவிருக்கும் இப் பாடல் தரும் என நிச்சயமாக நம்பலாம்.
ஏ.ஆர்.ரஹ்மான் தென்னாசிய சுயாதீன இசைக் கலைஞர்களுக்கென அமைத்துத் தந்திருக்கும் ‘மாஜா’ என்ற இந்த மேடையில் சமீபத்தில் பின்னணிப் பாடகர் தீ மற்றும் றாப் பாடகர் அறிவு ஆகியோரின் ‘எஞ்ஞாய் எஞ்ஞாமி’ என்ற பாடல் அரங்கேறி பிரமாண்டமான வெற்றியைப் பெற்றுத் தந்தது. அம்க்த் கிருஷ்ணனின் இயக்கத்தில், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தயாரித்த இந்த இசைத் தட்டு உலகம் பூராவும் பாரிய வெற்றியைத் தேடித்தந்தது. சமூக வலைத் தளங்களில் 3 மில்லியன் விருப்புக்களைப் பெற்றும், 100 மில்லியன் பேர்களால் பார்க்கப்பட்டும் உள்ள இப் பாடல் சுயாதீன தமிழிசைத் தட்டு வெளியீட்டில் வரலாறு படைத்த ஒன்றாகும்.
இதே வேளை, ஏ.ஆர்.ரஹ்மானின் தயாரிப்பிலும், இணை எழுத்திலும் உருவான ’99 பாடல்கள்’ என்ற இசை நாடகம் ஏப்ரல் 16 அன்று பெருந்திரைகளுக்கு வந்திருக்கிறது.