AnalysisWorld

‘மூன்று பாஷா’க்களும், ‘மூன்று பக்சா’க்களும் | 1915 ஆர்மீனியப் படுகொலையின் வரலாறும் தமிழினப் படுகொலையுடனான ஒப்பீடும்

‘மூன்று பாஷா’க்களும், ‘மூன்று பக்சா’க்களும் | 1915 ஆர்மீனியப் படுகொலையின் வரலாறும் தமிழினப் படுகொலையுடனான ஒப்பீடும்

மாயமான்

1915 இல் ஒட்டோமான் சாம்ரச்சிய அதிகாரிகளினால் ஆர்மீனியர்கள் படுகொலைசெய்யப்பட்ட சம்பவம் ஒரு இனப்படுகொலை என சனியன்று (ஏப்ரல் 24), அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனால் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது. 106 வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற இச் சம்பவம் உண்மையில் ஒரு இனப்படுகொலை அல்ல எனவும் ஜனாதிபதி பைடனின் இந்த அறிக்கை, அறிவார்ந்த ரீதியிலோ அல்லது ஆதாரங்களோடு கூடிய சட்டபூர்வமானதாகவோ இல்லை எனக்கூறி துருக்கி அதை நிராகரித்திருக்கிறது. அதே வேளை ஜனாதிபதி பைடனின் இந்த அறிக்கை ஈழத் தமிழரின் வடுக்களை மீண்டும் உராய்ந்து பார்ப்பதையும் ‘நாமும் இருக்கிறோம்’ என்று குரல்கள் எழுவதையும் இந்நேரத்தில் கடந்து செல்ல முடியாதுள்ளது. இந் நிலையில் ஆர்மீனியப் படுகொலையின் வரலாறு, பின்னணி ஆகியவற்றுடன் தமிழினப் படுகொலையை ஒப்பிடும் நோக்கில் எழுதப்படுகிறது இக்கட்டுரை.

இனப்படுகொலையின் வரைவிலக்கணம்

இனப்படுகொலை பற்றி டிசம்பர் 1948 இல் வரையப்பட்ட ஜெனிவா ஒப்பந்தத்தின் இரண்டாவது கட்டளை இப்படிச் சொல்கிறது: “ஒரு தேசிய, இனக்குழும அல்லது மதக்குழுமம் ஒன்றை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ, திட்டமிட்டு இல்லாதொழிக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கை” இனப்படுகொலை எனக் கருதப்படலாம்.

ஆர்மீனியப் படுகொலைகள்

மினெசோட்டா பல்கலைக் கழகத்திலுள்ள ஹொலோகோஸ்ட் மற்றும் இனப்படுகொலைக் கற்கைகளுக்கான மையத்தின் ஆய்வுகளின்படி, 1914 இல் முதலாம் உலகப் போர் வெடிப்பதற்கு முன்னர், ஒட்டோமான சாம்ராச்சியத்தில் 2 மில்லியன் ஆர்மீனியர்கள் வாழ்ந்தார்கள். 1922 இல், போர் முடிவுற்று 4 வருடங்களுக்குப் பின்னர் இப் பிராந்தியத்தில் 387,800 ஆர்மீனியர்களே வாழ்ந்ததாகக் கணிக்கப்பட்டது. இதை வைத்துக்கொண்டுதான் 1.5 மில்லியன் ஆர்மீனியர்கள் படுகொலை செய்யப்பட்டுவிட்டதாக வரலாற்றாசிரியர்கள் கணிப்பிடுகிறார்கள்.

ஆர்மீனியர்கள், பெரும்பாலும், ஒட்டோமான் சாம்ராஜ்யத்தின் கிழக்கு எல்லையிலேயே வாழ்ந்தார்கள். ஒட்டோமான் – ரஷ்ய போரின்போது ஆர்மீனியர்கள் ரஷ்யர்களுக்கு உதவினார்கள் என்ற காரணத்துக்காக அவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பழிவாங்கல்களே ஆர்மீனியப் படுகொலைகள் எனக் கூறப்படுகிறது. இப் போரில் ஒட்டோமான் பெருந் தோல்வியைத் தழுவ சாம்ராஜ்யத்தின் அங்கங்களான துருக்கியரும், குர்திஷ் இனத்தவரும் சேர்ந்து ஆர்மீனியரைக் கொன்றொழித்தார்கள் என்கிறது வரலாறு.

இதன்போது, பல இலட்சம் ஆர்மீனியர்கள் அனற்றோலியாவிலிருந்து (தற்போதைய துருக்கி) நாடுகடத்தப்பட்டு, சிரிய பாலைவனத்தில் அமைக்கப்பட்ட தடுப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டு கொல்லப்பட்டார்கள் எனக் கூறப்படுகிறது. பெரும்பாலானவர்கள் தடுப்பு முகாம்களுக்கு கொண்டுசெல்லப்படும்போதே கொல்லப்பட்டுவிட்டார்கள். மலைப் பிரதேசங்களூடும், பாலைவனங்களூடும் உணவும் தண்ணீருமின்றி நடத்தியே கொண்டுசெல்லப்பட்ட அவர்களில் பெரும்பாலோனோர் பாதைகளிலேயேயே மரணமடைந்தார்கள். பல பெண்கள் வன்புண்ர்வுக்குட்படுத்தப்பட்டார்கள் என ‘A Peace to End All Peace’ என்ற தனது நூலில் ஆசிரியர் டேவிட் ஃப்றொம்ளின் கூறுகிறார்.

வரலாறு

19ம், 20 நூற்றாண்டுகளின் அரசியற் போட்டிகளால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டவர்கள் ஆர்மீனியர்கள். 19ம் நூற்றாண்டின் நாலாம் கூற்றில் ஒட்டோமான் சாம்ராஜ்யத்தின் அழிவு தொடங்கிவிட்டது. அதன் அழிவுக்கு ஐந்தாம் படைகளான ஆர்மீனியர்களே காரணம் என கொன்ஸ்ரன்ரினாப்போலிலிருந்த ஆட்சியாளர் நம்பினர். 1877-78 இல் நடைபெற்ற ரஷ்ய-துருக்கி போரில் துருக்கி தோல்வியைத் தழுவியதிலிருந்து துருக்கியின் எல்லைகள் சுருங்க ஆரம்பித்திருந்தன. இதற்குக் காரணமானவர்கள் ஆர்மீனியர்கள் என்பதிலிருந்து இரு சாராருக்க்மிடையேயான பகைமை ஆரம்பித்திருந்தது.

தோல்வியைச் சந்தித்த துருக்கி பேர்லின் ஒப்பந்தத்தின் பிரகாரம் அதிகார சக்திகளின் நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட வேண்டி ஏற்பட்டது. சேர்க்கேசியர்கள் மற்றும் குர்திஷ் படைகளிடமிருந்து ஆர்மீனியர்கள் வாழ்ந்த மாகாணங்களில் அவர்களுக்கான பாதுகாப்பை சுல்தான் அப்துல்ஹமிட் உறுதி செய்யவேண்டுமென்பது அதிலொரு நிபந்தனை. ரஷ்யா உட்படத் தனது எதிரி நாடுகளுடன் ஆர்மீனியர்களது உறவை வலுப்படுத்தும் ஒரு செயலாக சுல்தான் இதைக் கருதினார். அப்போதிருந்து துருக்கியர்களாலும், குர்திஷ் படைகளாலும் ஆர்மினியர்கள் மீதான தாக்குதல்கள் முடுக்கிவிடப்பட்டது.

1908 இல் இளம் துருக்கியர்கள் சுல்தானிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றினர். துருக்கி இழந்த பெருமையை மீட்டெடுப்போம் என்பது அவர்களது சுலோகமாகியது. துருக்கியர்களின் ஆட்சியில் நிர்வாகம் ‘மூன்று பாஷா’ க்களின் கைகளுக்கு மாறியது (இலங்கையின் ‘மூன்று பக்சா’ க்களிடம் தற்போதைய ஆட்சி சென்றதைப் போல) பிரதமர்: மெஹ்மெட் ரலாற் பாஷா; போரமைச்சர்: இஸ்மாயில் என்வெர் பாஷா; கடற்படை அமைச்சர்: அஹ்மெட் கெமால் பாஷா. சாம்ராஜ்யம் இப்போது ஏறத்தாள துருக்கியர்களின் கைகளில் வீழ்ந்தது. இதிலிருந்து ஏனைய இனத்தவர்களின் மீதான பழிவாங்கள் ஆரம்பமாகியது.

1914 இல் ஆரம்பித்த முதலாம் உலகப் போரில், ஒட்டோமான் (துருக்கி) சாம்ராஜ்யம், ஜேர்மனியுடன் அணி சேர்ந்தது. கோக்கசஸ் பிரதேசத்தில் அது தமது ‘முதலாம் எதிரியான’ ரஷ்யாவை எதிர்த்துப் போரிட்டது. ஜனவரி 1915 இல் சரிகாமிஷ் என்ற இடத்தில் நடைபெற்ற சண்டையில் அது பேரிழப்பைச் சந்தித்தது.

சரிகாமிஷ் தோல்விக்கு, ‘ஐந்தாம் படையாகப்’ பயன்படுத்தப்பட்ட ஆர்மீனியர்கள் மீது ஒட்டோமான் குற்றம் சுமத்தியது. முதல் பழிவாங்கலாக ஒட்டோமான் இராணுவத்தில் பணிபுரிந்த அத்தனை ஆர்மீனியர்களுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஏப்ரல் 24 அன்று 250 ஆர்மீனிய புத்திஜீவிகள் கைது செய்யப்பட்டுப் பின்னர் கொலைசெய்யப்பட்டார்கள். இதுவே ஆர்மீனியப் படுகொலை நினைவுநாளாக உலகம் முழுவதும் பரந்துவாழும் ஆர்மீனியர்களால் இன்றுவரை அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

போர் தொடர்ந்தது. கிழக்கு அனற்றோலியாவில் வாழும் ஆர்மீனியர்கள் ரஷ்யாவுடன் சேர்ந்து ஒட்டோமான் பிரதேசங்களில் ஊடுருவக்கூடுமெனப் பயந்த ஒட்டோமான் அரசாங்கம், ‘பாதுகாப்புக்குக் அச்சுறுத்தலாக இருக்கக்கூடிய அனைவரையும் நாடுகடத்தும்’ சட்டமொன்றை நடைமுறைக்குக் கொண்டுவந்தது. இச் சட்டத்தைப் பாவித்து குழந்தைகள் உட்பட, பல்லாயிரக் கணக்கான ஆர்மீனியக் குடும்பங்களை சிரிய பாலைவனத்துக்கு நாடு கடத்தியது. அதுவே அவர்களது இறுதியான மரண ஊர்வலம்.

ஆர்மீனியரின் பழிவாங்கல்

போர் ஓட்டோமான் சாம்ராஜ்யத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தது. அனற்றோலியா ஆளுனர் உட்பட, ஆர்மீனியர்களின் இன்னல்களுக்குக் காரணமான, ஓட்டோமான் அரசாங்க அதிகாரிகள் பலருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் ‘மூன்று பாஷாக்களும்’ தப்பியோடி ஜேர்மனியிடம் தஞ்சம் புகுந்தனர். அவர்களது பிரசன்னம் இலாமலேயே அவர்கள் மீதும் மரண தண்டனைக்கான தீர்ப்பு வழங்கப்பட்டது.

ஆர்மீனிய விடுதலைப் படையினரும் தமது பழிவாங்கல்களைத் தொடர்ந்தனர். ‘ஒப்பெறேஷன் நெமெசிஸ்’ என்ற பெயரில், எஞ்சியிருக்கும் ஒட்டோமான் அதிகாரிகளைத் தேடியழித்தனர். மார்ச் 15, 1921 அன்று, ஒட்டோமானின் கடைசிப் பிரதமரும், ஆர்மீனியப் படுகொலைகளின் சூத்திரதாரியுமான ரலாட் பாஷா. பேர்லின் வீதியொன்றில் வைத்து சோஹமான் ரெஹ்லீரியன் எனும் ஒரு மாணவனால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

துருக்கியின் நிலைப்பாடு

ஆர்மீனியர்கள் மீது அட்டூழியங்கள் புரியப்பட்டன என்பதை இன்றய துருக்கியின் ஆட்சியாளர் ஏற்றுக்கொள்கின்றனர். ஆனால் அது ஒரு இனப்படுகொலையல்ல என்பதையும் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.5 மில்லியன்கள் அல்லவெனவும் துருக்கி வாதிடுகிறது. அது ஒரு இனப்படுகொலை என்பதை ஏற்றுக்கொண்டால் அது மேலும் பல சட்டப் பிரச்சினைகளுக்குள் துருக்கியை மாட்டிவிடுவதற்கான சாத்தியங்களுண்டு. இதனால் தான் அமெரிக்க ஜனாதிபதியின் அறிக்கை “அறிவார்ந்த ரீதியிலோ அல்லது ஆதாரங்களோடு கூடிய சட்டபூர்வமான ரீதியிலோ” எடுக்கப்பட்ட முடிவல்ல என அது நிராகரிக்கிறது.

ஒப்பீடு

ஜனாதிபதி பைடனின் இவ்வறிவிப்பு துருக்கிக்கு எவ்வளவு அதிர்ச்சியைத் தந்துள்ளதோ அதேயளவு அதிர்ச்சியை, இனப்படுகொலைகளை மேற்கொண்ட, மேற்கொண்டுவரும் நாடுகளுக்கும் கொடுதுத்துள்ளது என நம்பலாம். நேட்டோவினால் ஒரு காலத்தில் நிராகரிக்கபப்ட்ட துருக்கி இன்று அதன அங்கத்துவ நாடாக இருந்தும்கூட ரஷ்யாவுடனான அதன் நெருக்கமும், சிரியப் போரில் அமெரிக்க நேசப் படைகளான குர்திஷ் போராளிகளை அழித்ததும், எர்டோகனின் எகத்தாளமான போக்கின் வெளிப்பாடுகள். இக் காரணங்களுக்காக அமெரிக்காவின் பழிவாங்கல் இப்படியான ஒரு வடிவத்தில் வருமென துருக்கி எதிர்பார்த்திருக்க மாட்டாது. ஆர்மீனியர்களுக்கு நடைபெற்றது இனப்படுகொலையே என்பது நிரூபிக்கப்பட்டால் விளைவுகள் பாரதூரமாகவிருக்கும். ஜனாதிபதி பைடனின் அறிக்கை இனி வரப்போகும் நடவடிக்கைகளுக்கான முதல் எச்சரிக்கையா என்பது தெரியாது. ஆர்மீனியப் படுகொலைகள் பற்றிய எத்தகைய ஆதாரங்கள் அமெரிக்காவிடம் இருக்கின்றன என்பதும் தெரியாது.

ஆனால் இலங்கை போன்ற நாடுகளுக்கு இது அச்சம் தரக்கூடிய ஒன்று. தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலைகள் தொடர்பாக இன்னும் வெளிவராத தடயங்கள் ஏராளமாக உள்ளன. பூகோள அரசியல் காரணமாக ‘இப் படைக் கலங்கள்’ பாவிக்கப்படாமல் இருக்கின்றன. ஜனாதிபதி பைடன் போன்ற, மனச்சாட்சியுள்ள, துணிச்சலான ஒருவர் அவற்றைப் பாவிப்பதற்கான சாத்தியங்கள் அதிகமுண்டு.

துருக்கியில் எப்படி ‘மூன்று பாஷா’க்கள் ஆர்மீனியப் படுகொலைகளின் பின்னணியில் இருந்தார்களோ அதே போன்று இலங்கையிலும் ‘மூன்று பக்சா’ க்கள் இனப்படுகொலைக்குக் காரணமாக இருந்திருக்கின்றனர். ஒரு ஐரோப்பிய நாடாக இருந்துகொண்டு, எர்டோகன் எப்படி ‘எகத்தாளமாக’ ரஷ்யாவோடு கூட்டணி வைத்து மேற்கைப் பகைத்தாரோ அதே போலவே கோத்தாபய ராஜபக்சவும், தனது எகத்தாளமான போக்கினால், சீனாவோடு கை கோர்ப்பதன் மூலம் மேற்கைச் சீண்டுகிறார்.

மறைந்த மன்னார் ஆயர் ராயப்பு அவர்கள், போர் முடிந்த கையோடு கொல்லப்பட்டவர்கள் தொடர்பாக ஒரு கணிப்பை வெளியிட்டிருந்தார். போருக்கு முதல் அப் பிரதேசங்களில் வாழ்ந்த மக்களின் எண்ணிக்கையையும் போர் முடிந்த கையோடு கைவிடப்பட்ட மக்களின் எண்ணிகையும் குறிப்பிட்டு அண்ணளவாக 140,000 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள் என அவர் தெரிவித்திருந்ததாக ஞாபகம். 1.5 மில்லியன் ஆர்மீனியர்கள் கொல்லப்பட்டார்கள் என்பதை எப்படி எர்டோகன் மறுக்கிறாரோ அதைப்போலவே, கோதாபயவும் ஆயர் ராயப்புவின் எண்ணிக்கையை மறுக்கிறார். ஆர்மீனியர்கள் விடயத்தை விட, தமிழர்கள் விடயத்தில் நவீன ஆதாரங்கள் அமெரிக்காவிடம் இருக்கின்றன. ஒபாமாவைப்போல் ஒரு முதுகெலும்பற்ற ஜனாதிபதியல்ல ஜோ பைடன் என்பது ஆசுவாசம் தருவது.

ஆர்மீனியப் படுகொலைகள் நடைபெற்று 106 வருடங்கள் முடிந்துள்ளன. தமிழருக்கு மே 17 எப்படி ஒரு மறக்க முடியாத நாளோ, அதே போன்று ஏப்ரல் 24, அன்று 250 புத்திஜீவிகள் மரண தண்டனைக்குட்படுத்தப்பட்ட நாளைத் தமது ‘இனப்படுகொலை நாளாக’ ஆர்மீனியர்கள் நினைவுகூருகிறார்கள். அன்றுதான் ஜனாதிபதி பைடன் தனது அறிவிப்பைச் செய்திருக்கிறார்.

எர்டோகனின் நடவடிக்கைகள் சிலவேளைகளில் ஜனாதிபதி பைடனின் தீர்மானத்திற்கு அடிப்படையாக இருந்திருக்கலாம். ஆனாலும் புலம் பெயர்ந்து பல தேசங்களிலும் பல தலைமுறைகளாக வாழும் ஆர்மீனியர்கள் தமது முன்னோர்கள் மீது ஒட்டோமான் சாம்ராஜ்யம் புரிந்த அட்டூழியங்களை மறக்காது, தொடர்ந்தும் தாம் வாழும் நாடுகளிலும் நகரங்களிலும் அரசாங்கங்கள் மீது அரசியல் ரீதியான அழுத்தங்களைத் தொடர்ந்தும் பிரயோகித்து வருகிறார்கள். அதன் பலன் இப்போதுதான் அவர்களுக்குக் கிடைத்திருக்கிறது.

தமிழர்களும் இதே போன்று தம்மாலியன்ற அளவுக்கு அழுத்தங்களைப் பிரயோகித்து வருகிறார்கள். ஆர்மீனியர்களுக்குப் போலவே ஜனாதிபதி பைடனின் காலத்தில் எமக்கும் ஒரு நீதியை அவர் பெற்றுத் தருவார் எனபதற்கு ஆர்மீனியப் படுகொலைகள் மீதான அறிக்கை நம்பிக்கை தருவதாக இருக்கிறது.