மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அரசு விரைவில் இழக்கலாம்?

சிறீலங்கா சுதந்திரக் கட்சி ஆளும் கூட்டமைப்பிலிருந்து விலகத் தீர்மானம்

சிறீலங்கா சுதந்திரக் கட்சி ஆளும் கட்சிக் கூட்டமைப்பிலிருந்து விலகத் தீர்மானித்தமையால் பாராளுமன்றத்தில் மொட்டு கூட்டமைப்பு தற்போது அதற்கு இருந்துவரும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இழக்க நேரிடுமெனத் தென்னிலங்கைச் செய்திகள் தெரிவிக்கின்றன.

மக்களிடையே அரசாங்கத்தின் மீது அதிருப்தி வளர்ந்துவரும் நிலையில் எதிர்வரும் தேர்தல்களை சிறீலங்கா சுதந்திரக் கட்சி வேறு கட்சிகளோடு பொதுத் திட்டத்தில் இணைந்து போட்டியிட அதன் தலைவர் மைத்திரிபால சிறீசேன தீர்மானித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

சிறீலங்கா சுதந்திரக் கட்சியைப் பகிரங்கமாகத் தூற்ற வேண்டாமென பெரும்பான்மைக் கட்சியான சிறீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மூத்த தலைவர்கள், இளைய அங்கத்தவர்களைக் கேட்டுக்கொண்டுள்ளதாகவும், சுதந்திரக் கட்சி விரும்பினால் அது அமைதியாக வெளியேற அனுமதிக்க வேண்டுமென மூத்த தலைவர்கள் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் தெரிகிறது.



ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆலோசனைப்படி, உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்களைத் தடுத்து நிறுத்தவில்லை எனக்குற்றஞ்சாட்டி முன்னாள் ஜனாதிபதி சிறீசேனைவைக் கைதுசெய்யவேண்டுமென ஆளும் கூட்டணியின் இளைய உறுப்பினர்கள் பகிரங்கமாகப் பேசிவருகின்றனர். அப்படியொரு நடவடிக்கையை எடுப்பதன் மூலம் சுதந்திரக்கட்சிக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு மேலும் அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில் அதன் தலைவர் சிறீசேனவும் கூட்டணியிலிருந்து விலகும் தனது நிலைப்பாட்டில் மிகவும் உறுதியாக இருந்து வருகிறார்.

இதே வேளை பொதுத் திட்டமொன்றில் இணைந்து செயற்படும் வழிகள் பற்றி சில எதிர்க்கட்சிகளுடன் சிறீசேன ஏற்கெனவே உரையாடல்களை நடத்தியிருப்பதாகவும் இப் பொது முன்னணிக்கு சிறீசேன தலைவராக இருக்க விரும்புவதாகவும் பேசப்படுகிறது. அத்தோடு சில எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவற்றிலிருந்து விலகி இப் பொதுமுன்னணியில் இணைவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் தெரிகிறது.

இது இப்படியிருக்கையில் சில சிறுபான்மைக் கட்சிகளின் உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இணையவும் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அதற்காக அவர்களுக்கு உதவி மந்திரிப் பதவிகளை வழங்க ஆளும் கட்சி தயாராகவுல்ளதாகவும் பேசப்படுகிறது.

தற்போதுள்ள பிரதான எதிர்க்கட்சியான சமாகி ஜன பலவேகய சுதந்திரக் கட்சியுடன் இணைந்து ஒரு பொது வேலைத் திட்டத்தில் செயற்பட விரும்புவதாகவும் தற்போது வடக்கில் பயணம் செய்துவரும் அதன் தலைவர் சஜித் பிரேபதாச கொழும்பு திரும்பியதும் இது குறித்துப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அறியப்படுகிறது.

பொதுஜன பெரமுன கட்சியும் தனக்குள் பல மாற்றங்களை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் சில துணை அமைச்சர்களுக்கு அமைச்சரவை அந்தஸ்துகளுடன் கூடிய பதவி உயர்வுகள் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிகிறது. (டெய்லி மிரர்)