மூன்றாம் கட்டத் தளர்வுக்குக் தயாராகும் ஒன்ராறியோ மாகாணம்

கோவிட் நோய்த் தொற்று ஓரளவுக்குக் கட்டுப்பாட்டூக்குள் கொண்டுவரப்பட்டதையடுத்து கனடாவின் ஒன்ராறியோ மாகாணம் தனது மூன்றாம் கட்ட நடமாட்டத் தளர்த்தலுக்குத் தயாராகுவதாக அறிவித்துள்ளது.

ஜூலை 16ம் திகதி அதிகாலை 12:01 மணிக்கு இத் தளர்வு நடைமுறைக்கு வருமென மாகாண முதல்வரின் அலுவலகம் அறிவித்துள்ளது.

ஒன்ராறியோ மாகாணத்தில், 12 வயதுக்கு மேற்பட்டவர்களில் 77 வீதத்துக்கு மேற்பட்டவர்கள் ஒரு தடுப்பூசியையும் 50 வீதத்துக்கு மேற்பட்டவர்கள் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றிருக்கிறார்கள் எனவும், நோய்த் தொற்றின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ள படியால் மூன்றாம் கட்டத் தளர்வுக்கு அரசு தயார் எனவும் அரசின் ஊடக அறிக்கை தெரிவிக்கிறது.

அப்பியாச நிலையங்கள், திரையரங்குகள், உள்ளிருந்து உணவருந்தும் உணவகங்கள் உட்படப் பல வியாபார நிலையங்கள் இத் தளர்வினால் பலனடையுமெனெ எதிர்பார்க்கப்படுகிறது. இம் மூன்றாம் கட்டத் தளர்வு 21 நாட்களுக்கு நடைமுறையிலிருக்கும். இருப்பினும் 12 வயதுக்கு மேற்பட்டவர்களில் 80% த்துக்கு மேல் ஒரு தடுப்பூசியைப் பெற்றுவிட்டால் சில வேளைகளில் இன் நடைமுறை நாட்கள் குறைக்கபடக்கூடிய சாத்தியமுமுண்டு என ஒன்ராறியோ மாகாணத்தின் முதன்மை வைத்திய அதிகாரி டாக்டர் கீரன் மூர் தெரிவித்தார்.

மூன்றாம் கட்ட தளர்வின்போது அனுமதிக்கப்படும் நடவடிக்கைகள்

உணவகம், மதுவகம், இரவுக் கேளிக்கை விடுதிகள்:

  • உள்ளிருந்து சாப்பிட அனுமதி; ஒரு மேசையில் எத்தனை பேரும் இருக்கலாம். இடைவெளி மற்றும் இதர கட்டுப்பாடுகள் இன்னும் நடைமுறையிலுண்டு
  • நடன கேளிக்கைகளை உள்ளடக்கிய உணவக / மதுவக நிறுவனங்களில் கொள்ளளவின் 25% அல்லது ஆக மொத்தம் 250 பேர் – எது குறைவானதோ அது மட்டுமே அநுமதிக்கப்படும்

அப்பியாச நிலையங்கள், பார்வையாளரைக் கொண்ட விளையாட்டரங்குகள்

  • அரங்கின் 50% கொள்ளளவுக்கு மட்டும் அனுமதியுண்டு
  • மூடிய அரங்குகளில் 50% அல்லது 1,000 பேர் இரண்டில் எது குறைவானதோ அது அனுமதிக்கப்படும்
  • வெளியரங்குகளில் 75% அல்லது 15,000 பேர் – இரண்டில் எது குறைவானதோ அது அனுமதிக்கப்படும்

தொல்பொருட் காட்சிச் சாலை அல்லது இதர காட்சியகங்கள்

  • தொல்பொருட்காட்சியகம், பொருட்காட்சியகம், வரலாற்றுக் காட்சியகம், மீன் காட்சியகம், தாவரப் பூங்கா, விஞ்ஞானக் காட்சியகம், விளையாட்டுத் திடல், கேளிக்கைச் சந்தை, திருவிழா, பிங்கோ மண்டபம் ஆகியன மண்டபக் கொள்ளளவின் 75% மட்டுமே அனுமதிக்கப்படும்

இசைவிழா மற்றும் திரையரங்குகள்

  • இசையரங்குகள், திரையரங்குகள் ஆகியன உள்ளரங்காயின் 50% அல்லது அதிக பட்சம் 1,000 பேர் அமர்வதற்கான அனுமதியுண்டு
  • வெளியரங்குகளில் 75% அல்லது அதிக பட்சம் 5,000 பேர் நின்றுகொள்ள அனுமதியும்; ஆசனங்களுடனான வெளியரங்க நிகழ்வுகளுக்கு 75% கொள்ளளவு அல்லது அதிக பட்சம் 15,000 அநுமதியுமுண்டு

அங்காடிகள், சில்லறை வர்த்தக நிலையங்கள்

  • 2 மீட்டர்கள் இடைவெளியைக் கடைபிடிக்கக்கூடிய அளவுக்கு அநுமதியுண்டு

பிரத்தியேக சேவைகள்

  • சிகை அலங்கார நிலையம், அழகு பராமரிப்பு நிலையம் போன்ற பிரத்தியேக சேவைகளை வழஙகும் நிலையங்களில் 2 மீட்டர் இடைவெளியைப் பேணக்கூடிய அளவு கொள்ளளவுக்கு அனுமதியுண்டு.

சமூக ஒன்றுகூடல்

  • வெளியரங்கில் அதிக பட்சம் 100 பேர்
  • உள்ளரங்கில் அதிக பட்சம் 25 பேர்

இதர சேவைகள்

  • உள்ளரங்க மதச் சடஙகுகள், கிரியைகள், திருமணம், மரணச்சடங்கு ஆகியன சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்
  • உள்ளரங்க கூட்டஙகள் 50% த்துக்கு மேற்படாத அல்லது 1,000 பேருக்கு மேற்படாத, சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் அவசியம்
  • றியல் எஸ்டேட் ஒபிண் ஹவுஸ் நிகழ்வுகளில் 2 மீட்டர் இடைவெளியைக் கடைப்பிடித்தல் அவசியம்