Health

மூங்கில் குருத்து ஒரு ‘போஷாக்குப் பொதி’-ஆய்வு

அகத்தியன்

மூங்கில் குருத்துகள் ஆசியர்களின் உணவில் மிக முக்கியமான ஒன்று. இந்தியாவிலும் சில பகுதிகளில் மக்களால் மிகவும் விருப்பமாகச் சாப்பிடப்படும் ஒரு உணவு. மிகவும் சுவையானது மட்டுமல்ல உடலுக்குத் தேவையான பல மருத்துவ அம்சங்களைக் கொண்டிருக்கும் இவ்வுணவு தகரப்பேணிகளில் அடைக்கப்பட்ட நிலையில் சிலவேளைகளில் துர்மணத்தைக் கொடுப்பதால் நம்மவர் இதைப் பெருதும் விரும்புவதில்லை. ஆனால் இதில் பொதிந்திருக்கும் மருத்துவக் குணங்கள் பற்றி நீங்கள் அறிந்தால் அதை அவசியம் சாப்பிட முனைவீர்கள்.

மருத்துவர்கள், போஷாக்கு நிபுணர்கள் ப்ரிந்துரைக்கும் சமநிலை உணவு (balanced diet) என்பது பொதுவாக உடலுக்குத் தேவையான மாச்சத்து, புரதச் சத்து, கொழுப்புச் சத்து மற்றும் அத்தியாவசிய வைட்டமின்கள், கனிமங்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கவேண்டும். நம்மவர் அருந்தும் உணவில் சோறு மற்றும் விதம் விதமான கறிகள் இத்தேவையைப் பூர்த்தி செய்கின்றன. ஆனாலும் சில வறுமையான குடும்பங்களிலும் அல்லது பணமிருந்தாலும் இவ்வகையான உணவுகளை வாங்க முடியாத நிலையிலுள்ள குடும்பங்களிலும் இச் சமநிலையற்ற உணவு குழந்தைகளின் உடல் வளர்ச்சியிலும் முதிர்ந்தவர்களில் நோயெதிர்ப்பு ஆற்றலிலும் நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

மூங்கில்கள் பெரும்பாலும் மலையடிவாரங்களில் அதிகமாக வளர்கின்றன. மலைப் பிரதேசங்களில் வாழும் மக்களில் பெரும்பாலானவருக்கு வெப்பநிலையத்தில் வாழ்பவர்களைப்போல் பலவகை மரக்கறிகளைச் சாப்பிடும் அதிர்ஷ்டம் இல்லை. பல்லாயிரம் வருடங்களாக அவர்களுக்கு இந்த சமநிலை உணவை வழங்கி வருவது இம்மூங்கில் தளைகளே.

மூங்கில் தளைகளிலுள்ள மருத்துவக்குணங்கள் பற்றி சமீபத்தில் வெளியான ஆய்வொன்று தருகின்ற பட்டிய்லை இங்கு தருகிறோம்.

மலச்சிக்கலைத் தடுக்கிறது

மனைத் உடலின் சம்பிபாட்டுத் தொகுதியில் சமிக்கப்பட்ட உணவு குடற்சுவர்களில் ஒட்டி இறுக்கமடைந்துவிடாலமிருக்க நார்ச்சத்துள்ள (fibre) உணவை அருந்தும்படி மருத்துவர்கள் கூறுவார்கள். பல பழ வகைகள் அதிகம் செலுலோசுகளைக் கொண்டதால் அவற்றை அருந்தும்போது மலச்சிக்கல் குறைக்கப்படுகிறது. மூங்கில் குருத்துகளில் ஏறத்தாழ 4% செலுலோஸ் இருக்கிறது. குடலில் வாழும் நமது தூரத்து உறவினர்களும் நண்பர்களுமான பக்டீரியாக்கள் விரும்பி உண்ணும் உணவு இந்த செலுலோஸ். மிகவும் மகிழ்ச்சியான பக்டீரியாக்கள் நமது உடலில் வாழும்போது அவை எம்மையும் மிக மகிழ்ச்சியாக வைத்திருக்கும். வேண்டுமானால் மலச்சிக்கல் இருக்கும் ஒருவருடன் பேசிப்பாருங்கள்.

கெட்ட கொலெஸ்டெரோலைக் குறைக்கிறது

கெட்ட கொலெஸ்டெரோல் ந்மது உடலுக்குத் தீங்கு விளைவிக்கிறது என்பது நிரூபிக்கப்பட்ட ஒன்று. இரத்தக் குழாய்களில், குறிப்பாக இருதயத்தின் பகுதிகளுக்கு இரத்தத்தை வழங்கும் நாடிகளின் உட்சுவர்களில் படிந்து அதன் மூலம் ஓடும் இரத்தத்தின் அளவைக் குறைப்பது இந்த கெட்ட கொலெஸ்டெரோல் தான். இப்படி தூர்ந்துபோகும் நாடிகள் அனுபவிக்கும் துன்பம் தான் நாம் அனுபவிக்கும் இருதய வலி (angina pain). இது ஒருவகையில் நல்லது. குறைந்தது உடனடியாக மருத்துவமனைக்குச் செல்லும்படி அது எச்சரிக்கிறது. ஆனால் இந்த கெட்ட கொலெஸ்டெரோலின் கெட்ட அமசம் என்னவென்றால் நாடிகளின் உட்சுவர்களில் முற்றாகப் படியாமல் தூங்கிக்கொண்டிருக்கும் கொலெஸ்டெரோல் துணிக்கைகள். இவை திடீரென்று சுவரிலிருந்து பிடுங்கப்பட்டு இரத்தோட்டத்தில் கலந்துகொள்ளுமானால் எங்காவது குறுகிய குழாய்களில் இது சிக்கும்போது மாரடைப்பையோ அல்லது பாரிசவாதத்தையோ கொண்டுவந்துவிடும். இதுவே மிகவும் ஆபத்தானது. மூங்கில் குருத்துகளில் செறிவாக இருக்கும் ஃபைட்டோஸ்ரெரோல்ஸ் (phytosterols) எனப்படும் பதார்த்தம் இந்த கெட்ட கொலெஸ்டெரோலைக் குறைக்கிறது. அது மட்டுமல்ல மூங்கில் குருத்துகளில் காணப்படும் வைட்டமின் K இரத்தக் குழாய்களில் ஏர்படும் இரத்த அழுத்தத்தையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகிறது.

கொலாஜென் தொகுப்பை (collagen synthesis) அதிகரிக்கிறது

கொலாஜென் என்னும் பதார்த்தம் எலும்பு, தோல், மூட்டிழையங்கள் போன்றவற்றை உறுதியாக வைத்திருக்க உதவுகின்றன. உதாரணத்திற்கு மூப்பினால் சுருங்கிப்போகும் முகச்சருமத்தை இழுத்து நிமிர்த்தினால் உங்களுக்குச் சந்தோசம் வருமா வராதா?. வயதான காலங்களில் முழங்கால்களில் வலியில்லாது நடந்தால் மகிழ்ச்சியாக இருக்குமா இருக்காதா?. கொலாஜென் அதைத்தான் செய்கிறது. நமது உடலில் மிக அதிகமாகப் பாவிக்கப்படும் மூலகங்களில் துத்தநாகம் (zinc), இரும்பு (iron) ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக இருப்பது சிலிக்கா (silica). கொலாஜென் மற்றும் எலாஸ்டின் ஆகிய பதார்த்தங்களை உருவாக்கும் அமினோ அமிலங்களை உருவாக்குவதற்கு இந்த சிலிக்கா மிகவும் அவசியம். மூன்கில் தளைகளில் நிறைய சிலிக்கா இருக்கிறது.

எலும்புடைவைத் தவிர்க்கிறது

மூப்பான காலங்களிலும், மாதவிடாய் காணும் பெண்களிலும் எலும்புகள் தூர்ந்து போவதாகவும் அதை ஈடுசெய்ய கல்சியம் அதிகமுள்ள உணவுகளையோ அல்லது கல்சியம் குளிசைகளையோ பாவிக்கும்படி மருத்துவர்கள் சொல்லக் கேள்விப்பட்டிருப்பீர்கள். எல்லோருக்கும் கல்சியம் அதிகமுள்ள உணவுகள் கிடைக்க்வேண்டுமென்பதில்லை. அதற்காக குளிசைகளை அள்ளிப் போடுவதாலும் பலனில்லை. காரணம் நீங்கள் எவ்வளவுதான் கல்சியக் குளிசைகளை அள்ளிப் போட்டாலும் உடல் தனக்குத் தேவையான கல்சியத்தை மட்டுமே உள்வாங்கிக்கொள்ளும். இப்படி உள்வாங்கிய கல்சியத்தைக் கொண்டு அது எலும்பின் கட்டுமானத்தைச் செய்கிறது. மீதியாக விடப்பட்ட கல்சியம் இரத்தத்தோடு சென்று சிறுநீரகங்களினால் வடிகட்டப்படும்போது சில வேளைகளில் அங்கு கற்களை உருவாக்கிவிடும். அதே வேளை கல்சியம் குளிசைகளை எடுப்பவர்களுக்கு வைட்டமின் C குளிசையையும் சேர்த்து எடுக்கும்படி மருத்துவர்கள் கூறுவார்கள். இதற்குக் காரணம் உடலிலுள்ள கலங்களின் சுவர்கள் நாங்கள் விரும்பியது போல ‘எவரையும்’ உள்ளே போக அனுமதிக்காது. தலைமை அலுவலகத்திலிருந்து கட்டளை வரும்போது மட்டும் தேவையானவற்றை அது உள்ளே போக அனுமதிக்கிறது. கல்சியமும் இப்படியான கட்டுப்பாட்டு பட்டியலில் இருக்கிற ஒன்று தான். எனவே நாம் எடுக்கும் வைட்டமின் C இச்சுவர்க் காவலர்களுக்கு ‘லஞ்சம்’ கொடுத்து கொஞ்சம் அதிகமான கல்சியத்தை உள்ளே அனுப்பி விடுகிறது. மூங்கில் குருத்துகளில் அதிகம் கல்சியம் மற்றும் மங்கனீஸ் போன்ற கனிமங்கள் இருப்பது மட்டுமல்லாது மிதமிஞ்சிய வைட்டமின் C யையும் அது வைத்திருக்கிறது. இதனால் உங்கள் எலும்புகளைப் பலப்படுத்துவதற்குக் தேவையான மருந்துப் பொதியே இங்குதான் இருக்கிறது.

உடல் எடையைக் குறைக்கிறது

மூங்கில் குருத்துகளில் உடலுக்குச் சக்தியைத் தரும் கலோரிகள் அதிகம் இல்லை. இதனால் வயிற்றை நிரப்பி அதே வேளை உடல் எடை அதிகரிக்காமலும் பார்த்துக்கொள்கிறது. மேலே குறிப்பிட்டதுபோல உடல் தனக்குத் தேவையான சர்க்கரையை எடுத்துக்கொண்டு விலக்கி விடும் மீதமான சர்க்கரையை உடல் வீணாக்காமல் பத்திரப்படுத்தி கொழுப்பாக மாற்றி உங்களுக்கு விருப்பமில்லாத இடங்களில் சேமித்து வைத்துவிடுகிறது. நீங்கள் பட்டினி அல்லது விரதமிருக்கும்போது இக்கொழுப்பை அது மீண்டும் சர்க்கரையாக மாற்றித் தனது சக்தி தேவைகளுக்குப் பாவிக்கிறது. இப்படி மிதமிஞ்சிய சர்க்கரை இரத்தத்தில் இருக்கும்போது தான் அதைச் சர்க்கரை வியாதி (diabetes) என்கிறார்கள். மூங்கில் குருத்துகளில் சர்க்கரை குறைவு என்பதாலும் அதில் இருக்கும் மிதமிஞ்சிய நார்ச்சத்து வயிற்றை நிரம்பிய நிலையில் வைத்திருப்பதாலும் பசி குறைந்து புசிப்பதையும் குறைத்துவிடுகிறீர்கள். இதனால் உடல் எடையும் குறைகிறது.

இப்போது நீங்கள் ஆசிய மக்களை நினைத்துப் பாருங்கள். சிறிய உடலுடன் பெண்களால் பெரும் சுமைகளை மலைகளின் ஏற்ற இறக்கங்களில் கூட இலகுவாகச் சுமந்துசெல்ல முடிகிறது. கராட்டி, ஜூடோ, மல்யுத்தம் போன்ற விளையாட்டுகளில் சிறிய உடல்களால் எத்தனை சாதனைகளைச் செய்ய முடிகிறது. இவர்களின் உணவில் பெரும்பங்கு வகிப்பது மூங்கில் குருத்துகள். வேண்டுமானால் சீன உணவகங்களில் சாப்பிட்டுப் பாருங்கள். இதனால் தான் மூங்கில் குருத்து ஒரு ‘போசாக்குப் பொதி’ என அழைக்கப்படுகிறது. (Photo by Waldemar on Unsplash) (நன்றி: நலம்.காம்)