முஸ்லிம் சமஸ்கிருதப் பேராசிரியர் நியமனத்திற்கு மாணவர்கள் எதிர்ப்பு!
பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தின் சமஸ்கிருத பீடத்திற்கு சமஸ்கிருதத்தில் முனைவர் பட்டம் பெற்ற முஸ்லிம் ஒருவர் உதவிப் பேராசிரியராக நியமிக்கப்பட்டதை எதிர்த்துச் சில பீட மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து அப் பேராசிரியர் (ஃபைறோஸ் கான்) புதனன்று தன் சொந்த ஊரான ஜாய்ப்பூருக்குத் திரும்பினார்.
அதே வேளை, அப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த வேறு சில மாணவர்கள் பேராசிரியருக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டனர்.
நவம்பர் 7ம் திகதி பதவியை ஏற்றுக்கொள்ள வேண்டிய பேராசிரியர், அச்சத்தின் காரணமாக ஒளித்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருந்தது. அவர் பதவியிலிருந்து விலகிக்கொண்டுள்ளதாகவும் வதந்திகள் வெளிவந்துள்ளன.

“என் வாழ்வு முழுவதும் நான் சமஸ்கிருதத்தைக் கற்றுவந்தபோது ஒரு போதும் நான் ஒரு முஸ்லிம் என்பதை எவரும் நினைவுபடுத்தவில்லை. நான் கற்பிக்க வரும்போதுதான் நான் ஒரு முஸ்லிம் என்பது நினைவுபடுத்தப்படுகிறது” என ‘இந்தியன் எல்ஸ்பிரெஸ்’ பத்திரிகைக்குத் தெரிவித்தார் ஃபைறோஸ் கான்.
டாக்டர் கானின் நியமனம் தொடர்பாகப் பல்கலைக் கழகத்தின் நிலைப்பாடு பற்றிக் கேட்டபோது, “பல்கலைக்கழக நிர்வாகம் எந்தத் தவறையும் இழைக்கவில்லை” எனத் துணை வேந்தர் ராக்கேஷ் பட்நாகர் தெரிவித்தார்.
“சாதி மனப்பான்மையுடன் ஆரம்பிக்கப்பட்ட டாக்டர் கானுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்துக்கு விரைவில் முடிவு கட்டப்படவேண்டும். 10-20 மாணவர்கள் மொத்த பல்கலைக் கழகத்தின் நிலைப்பாட்டைக் கொண்டவர்களெனக் கருதக்கூடாது. எதிர்ப்புத் தெரிவிக்கும் மாணவர்கள் விரைவில் தமது நற்புத்திக்குத் திரும்புவார்களென எதிர்பார்க்கிறோம்” என மாணவர் தலைவரும், அரசியல் விஞ்ஞான முனைவர் பட்ட மாணவருமான விகாஸ் சிங் தெரிவித்தார்.
அதே வேளை, எதிர்ப்புத் தெரிவிக்கும் மாணவர்கள் விடயத்தில் பல்கலைக்கழக நிர்வாகம் மெத்தனப் போக்கைக் கடைப்பிடிக்கிறதெனவும் இதைவிட மிக முக்கியமான, பல்கலைக்கழகத்தின் நூல் நிலையம் 24 மணித்தியாலங்களும் திறக்கப்படவேண்டுமென 2017 இல் மாணவர்கள் மேற்கொண்ட போராட்டத்தின்போது 9 மானவர்கள் இடைநிறுத்தம் செய்யப்பட்டும், வளாகம் 13 நாட்களுக்கு மூடப்பட்டும் பல்கலைக்கழகம் நடவடிக்கைகளை எடுத்தது என சிங் மேலும் தெரிவித்தார்.