முஸ்லிம் கலவரங்களைத் தூண்டிய அமித் வீரசிங்க பிணையில் விடுதலை

2018ம் ஆண்டு கண்டி, திகானாவில் முஸ்லிம்களுக்கு எதிரான குழுத் தாக்குதலை ஏவி விட்டவரான ‘மஹாசன் பாலகய’ அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்கவை இன்று கொழும்பு மேலதிக நீதவான் பிணையில் செல்ல அனுமதித்திருக்கிறார். இவ் விடயம் முஸ்லிம்கள் மத்தியில் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தைத் தூண்டினார் என்ற குற்றச்சாட்டில் மே மாதம் 14ம் திகதி வீரசிங்க கைது செய்யப்பட்டிருந்தார். இக் கலவரம் மினுவாங்கொட, குளியாப்பிட்டிய ஆகிய இடங்களுக்கும் பரவியிருந்தது.

பொதுபலசேன தலைவர் கலகொட அத்த ஞானசேர தேரர் விடுதலை செய்யப்பட்டு சிலநாட்களில் வீரசிங்க விடுதலை இடம்பெற்றிருப்பது அரசியல் காரணங்களுக்காகவா என்ற சந்தேகம் வலுப்பெறுகிறது. குறிப்பாக முஸ்லிம் தலைவர்கள் அனைவரும் பதவி விலகுவதாக அறிவித்து 24 மணித்தியாலங்களுக்குள் இது நடைபெற்றிருப்பது சிங்கள பேரினவாத சக்திகளின் அடுத்த கட்ட நகர்வைக் கட்டியம் கூறுவதுபோல அமைந்திருக்கிறது.