முஸ்லிம்களின் உடல் தகன விவகாரம் | விரைவில் தீர்வு காண, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திடம் வலியுறுத்து


கோவிட் மரணங்கள் தொடர்பாக முஸ்லிம் மக்களின் உடல்கள் அவர்களின் மத, பண்பாட்டுப் பாரம்பரிய முறைப்படி புதைக்கப்பட்டாமல் கட்டாயமாக எரிக்கப்படவேண்டுமென்ற விடயத்தில் அரசாங்கம், காலம் தாழ்த்தாது முஸ்லிம் தலைவர்களுடன் பேசி ஒரு முடிவுக்கு வரவேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

நேற்று (சனி) கூடிய கூட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழு ஏகமனதாக இம் முடிவை எடுத்துள்ளது.

“மருத்துவ நிபுணர்களின் கருத்துப்படி, புதைக்கப்படும் உடல்களால் மற்றையோருக்குத் தீங்கு எதுவும் ஏற்படப் போவதில்லை எனக் கூறப்படுகிறது. உலகம் பூராவும் பல நாடுகளில் இறந்த கோவிட் நோயாளிகளின் உடல்கள் புதைக்கப்படுவது வழக்கம்” என கூட்டமைப்பின் பேச்சாளர், பா.உ. திரு எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

“முஸ்லிம் மக்களின் மத நம்பிக்கைகளுக்கு அமைய இறந்தவர்களின் உடல்களைப் புதைப்பதைத் தடுத்து நிறுத்துவது என்பது ஒரு அடிப்படை மனித உரிமை மீறலாகும். எனவே, இவ் விடயத்தில் காலம் தாழ்த்தாது அரசாங்கம் முஸ்லிம் தலைவர்களுடன் பேசி ஒரு இணக்கப்பாட்டுக்கு வருவது அத்தியாவசியமானது எனக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.